Published:Updated:

இயற்கையில் கலந்தார் இயற்கையின் காவலர்!

மரங்களை வெட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெண்களைத் திரட்டிப் பேசினார் பகுகுணா.

பிரீமியம் ஸ்டோரி

மீத்தேன் தொடங்கி எட்டுவழிச் சாலை வரை பெருவணிகத் திட்டங்களுக்கு எதிராக மக்களே சுய எழுச்சியோடு களத்துக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த உந்துதலுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் வேரை அகழ்ந்து சென்றால் அது முடியுமிடம், சுந்தர்லால் பகுகுணா.

சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1927-ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மரோடா என்ற கிராமத்தில் பிறந்தவர் பகுகுணா. காந்திமீது ஏற்பட்ட அளப்பரிய பற்று அவரை காங்கிரஸில் கொண்டுவந்து சேர்த்தது. இந்தியாவின் இதயம் என்பது கிராமங்களும் சிறுதொழில்களும்தாம் என்பதை உணர்ந்து வினோபாவின் பூதான இயக்கத்தில் இணைந்து தீவிரமாக இயங்கினார் பகுகுணா. பெண்களை ஒருங்கிணைத்து பகுகுணா நடத்திய போராட்டங்களால் அப்போதைய உத்தரப் பிரதேச அரசு, மதுவிலக்கைக் கொண்டு வந்தது.

இயற்கையில் கலந்தார் இயற்கையின் காவலர்!


இயற்கையோடு இயைந்து வாழ்ந்த கிராமத்து மக்களைக் காடழிப்பு அச்சுறுத்தியது. மரங்களை வெட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெண்களைத் திரட்டிப் பேசினார் பகுகுணா. இப்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேனி என்ற மலைக்கிராமம் ஒன்றில் பலநூறு வயதுடைய மரங்களை வெட்டியெடுத்துச்செல்ல வனத்துறை ஊழியர்களும் ஒப்பந்தக்காரர்களும் வந்தபோது, பெண்கள் ஒன்றுதிரண்டு ‘எங்களை வெட்டிவிட்டு மரத்தை வெட்டுங்கள்’ என்று அந்த மரங்களைக் கட்டியணைத்துக்கொண்டு நின்றார்கள். அரசு எந்திரம் திகைத்தது. தேசிய அளவில் இந்தப் போராட்டத்தின் குரல் எதிரொலித்தது. பகுகுணாவின் வழிகாட்டுதலில் மலைக்கிராமங்கள் முழுவதும் இந்தப் போராட்டம் பரவியது. ‘சிப்கோ இயக்கம்’ என்று வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்த அந்தப் போராட்டம் ஏற்படுத்திய அழுத்தத்தால் பிரதமராக இருந்த இந்திராகாந்தி 15 ஆண்டுகளுக்கு மரங்களையே வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டார்.

கனிமக்கொள்ளையர்களின் பார்வையிலிருந்து தப்பி இன்று இமயமலைத் தொடர் வானுயர்ந்து நிற்கக் காரணம், பகுகுணா நடத்திய தேசிய அளவிலான போராட்டங்களே. இமயமலையின் தெஹ்ரி அணைக்கட்டுத் திட்டத்தை எதிர்த்து 119 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

தமிழகத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒருங்கிணைத்த இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று உற்சாகப்படுத்தினார் பகுகுணா. தற்போது டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டத்தையும் ஆதரித்தார்.

உலகம் முழுவதும் சூழலியல் பாதுகாப்பு இன்று பெரும் பேசுபொருளாயிருக்கிறது. அந்தப் பெரு நெருப்பைப் பற்ற வைத்ததில் சுந்தர்லால் பகுகுணாவுக்குப் பெரும்பங்குண்டு. 94 வயதில் கொரோனாப் பெருந்தொற்று இந்தப் பசுமைக் கிழவனின் உயிரைப் பறித்திருக்கிறது. பகுகுணா தன்னை இயற்கையோடு இணைத்துக்கொண்டார். அவர் விதைத்து வளர்த்திருக்கிற போராளிகள், அவர் நடத்திய போராட்டத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்வார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு