Published:Updated:

`தீபாவளிக்கு வருவேன்னு சொன்னான்... ஆனா?!’- சவுதியில் இருக்கும் மகனின் உடலை மீட்கப் போராடும் பெற்றோர்

Rajkumars parent
Rajkumars parent ( Arun.K )

சவுதி அரேபியாவில் தற்கொலை செய்துகொண்ட தனது மகனின் உடலை 50 நாள்களுக்கு மேல் ஆகியும் கொண்டு வரமுடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன சூண்டி பகுதியைச் சேர்ந்த பரசுராமன், பொட்டு தம்பதியரின் மகன், ராஜ்குமார். 29 வயதான இவர், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்தார்.

Rajkumar
Rajkumar

இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி, 'உங்களின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்' என ராஜ்குமாருடன் பணிபுரிந்த நண்பர்களின் மூலம் பெற்றோருக்கு தகவல் வந்தது. பொருளீட்ட வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தனது மகன் பிணமானதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே, உறவினர்களின் உதவியுடன் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சியில் இறங்கினர்.

ஆனால், அது அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. கடந்த 50 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடியும் இன்னும் மகனின் உடலைப் பார்க்கமுடியாமல் பெற்றோர்கள் மீளாத் துயரத்தில் தவித்துவருகின்றனர்.

Rajkumars parent
Rajkumars parent

தற்கொலை செய்துகொண்ட ராஜ்குமாரின் தாய் பொட்டு, "வெளிநாட்டிலிருந்து ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது போன் பண்ணி பேசுவான். தீபாவளிக்கு வருவேன் அம்மானு கடைசியா சொன்னான். ஆனா, அவன் இறந்து 50 நாள்களுக்கு மேல் ஆகியும் என் மகனின் உடலைக்கூட பார்க்க முடியாமல் தவித்துக் கிடக்கிறோம். இந்த 50 நாளும் சொல்ல முடியாத நரக வேதனையை அனுபவித்துவருகிறோம்" என்று கண்ணீர் வடிக்கிறார்.

ராஜ்குமாரின் தந்தை பரசுராமன், "2 ஆண்டுக்கான விசா முடிந்தும் 9 மாதமாக சவுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துவந்தார். இந்தப் பயத்தில், வேலைக்கும் செல்லாமல் வெளியே நடமாடவும் முடியாமல், சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாமல் ரூமுக்குள்ளேயே ஒளிந்து இருந்துள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வந்தது. உடலை மீட்டு வர தொடர்ந்து போராடிவருகிறோம். இறந்து 2 மாதம் ஆகப்போகிறது.

Rajkumars father
Rajkumars father

நாளுக்குநாள் நம்பிக்கை இழக்கும் வகையில் பிரச்னைகள்தான் ஏற்படுகிறது. உடலைக் கொண்டுவருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. மொத்த குடும்பமும் ஒருவேளை உணவுகூட நிம்மதியாக உண்ண முடியாமல் மகனின் உடலுக்காகக் காத்திருக்கிறோம்" என்று வேதனை தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு