Published:Updated:

ரஷ்யா: `நதிக்கரை பார்ட்டி; திடீர் சுழல்!’ - தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

ஓல்கா நதியில் உயிரிழந்த தமிழக மாணவர்கள்
ஓல்கா நதியில் உயிரிழந்த தமிழக மாணவர்கள்

நீரில் மூழ்கிய மாணவர் ஒருவரை காப்பாற்றச் சென்ற, 3 பேரும் வரிசையாக நீரில் மூழ்கி பலியாகியிருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த சொக்கநாத பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரஃபி. இவர் தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் யுனானி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மகன் முஹம்மது ஆஷிக் (22) ரஷ்யாவில் உள்ள, `வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில்’ இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்திருக்கிறார். சனிக்கிழமை மாலை 11 நண்பர்கள் கூட்டாக, ரஷ்யாவிலுள்ள ஓல்கா நதிக்கரைக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நதியில் இறங்கிய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கியிருக்கிறார். அவரைக் காப்பாற்றச் சென்ற ஆசிக் உட்பட மேலும் 3 மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கரையில் இருந்த மற்ற மாணவர்கள் தகவல் கொடுப்பதற்கு முன்னரே, உடல்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன.

உயிரிழந்த முஹம்மது ஆஷிக்
உயிரிழந்த முஹம்மது ஆஷிக்

உயிரிழந்த 4 மாணவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முஹமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் என்பது தெரிய வந்திருக்கிறது. `உயிரிழந்த முஹம்மது ஆஷிக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமென’ அவர்களுடைய உறவினர்கள் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கின்றனர்.

உயிரிழந்த ஆஷிக்கின் மாமா ஷாஜகானிடம் பேசினோம். “சனிக்கிழமை சாயங்காலம் 11 பசங்க சேர்ந்து ஓல்கா நதிக்கரையோரம் ஏதோ பார்ட்டி கொண்டாடியிருக்காங்க. அப்போது கால் நனைக்கச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்திருக்கிறார். அவரைக் காப்பாற்ற ஆஷிக் உட்பட மேலும் 3 மாணவர்கள் நதியில் குதிக்க, அவர்கள் அனைவரும் நீரில் சுழலில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். சம்பவம் குறித்து நேற்றுதான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. திருப்பூர் கலெக்டரிடமும், தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்திருக்கிறோம். உடலை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

மூணாறு நிலச்சரிவு: `கயத்தாரைச் சேர்ந்த 55 பேரின் நிலை?’ -  கலங்கும் உறவினர்கள்

தொடர்ந்து பேசியவர், ``ஆஷிக்கோட அப்பா உள்ளூர் பள்ளிவாசல்ல தலைவராக இருக்கிறார். கொரோனா சமயத்தில் பலருக்கும் உணவு போன்றவற்றைக் கொடுத்து உதவி வந்தார். ஆஷிக்கும் மருத்துவம் படித்துவிட்டு, இங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பேன் எனச் சொல்லியிருந்தார். கொரோனா முடிஞ்சதும் ஊருக்கு வரேன்னு சொல்லியிருந்தாரு, கடைசியில இப்படி ஆகிடுச்சி” எனத் தழுதழுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு