Published:Updated:

தஞ்சாவூர்:`கனவா இருக்கக் கூடாதா?’ - ஆட்டுக்காக ஆற்றில் குதித்த இளைஞர்; பரிதவிக்கும் குடும்பம்

வீரமணியின் தந்தை
வீரமணியின் தந்தை ( ம.அரவிந்த் )

``நான் உடம்பு சரியில்லாம படுத்துக் கிடந்ததைப் பார்த்த அவன், `அப்பா நான் இன்னைக்கு ஆடு மேய்க்கப் போறேன். நீங்க வீட்டிலிருங்க’னு சொன்னான்.’’

தஞ்சாவூர் அருகே ஆற்றில் விழுந்த ஆடு ஒன்றைக் காப்பற்ற ஆற்றில் குதித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

உயிரிழந்த வீரமணி
உயிரிழந்த வீரமணி

தஞ்சாவூர் அருகே உள்ள பொட்டுவாச்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (22). தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். அவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், சில தினங்களுக்கு முன் ஆடு மேய்க்கச் சென்றிருக்கிறார். அப்போது ஆடு ஒன்று தவறி கல்லணைக் கால்வாய் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும், ஆடு ஆற்றுக்குள் விழுந்ததையடுத்துப் பதறி துடித்த வீரமணி தன் உயிரைப் பற்றி யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்து ஆட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

பெரும் துயரமாக அப்போது சுழலில் சிக்கி வீரமணி உயிரிழந்தார். `எங்களோட ஒரே எதிர்காலம் அவன்தான். `இன்னும் சில மாதங்களில் வேலையில் சேர்ந்துவிடுவேன். அதன் பிறகு, நம்மோளோட கஷ்டம் மாறிவிடும். அக்காவையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கலாம்’ எனக் கூறியவன், தன் கனவு, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்தையும் ஆற்றுக்குள் தன் உயிருடன் சேர்த்து தொலைத்துவிட்டு சடலமாக வெளியே வந்திருக்கிறான். இனி நாங்க என்ன செய்யப்போறோம்?’ என வீரமணியின் குடும்பம் கதறிக் கொண்டிருப்பது அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆடு மேய்க்கும் தந்தை
ஆடு மேய்க்கும் தந்தை

இது குறித்து வீரமணியின் தந்தை மாரியப்பனிடம் பேசினோம். ``எனக்கு மூன்று பெண், ஒரு ஆண் குழந்தை. வீரமணிதான் கடைசிப் பிள்ளை. இவர்கள் சின்ன வயசாக இருக்கும்போதே என் மனைவி சித்திரவள்ளி இறந்துவிட்டார். அதன் பிறகு ஒரு தாயைப்போல் அடைகாத்து படாத கஷ்டப்பட்டு என் பிள்ளைகளை வளர்த்தேன். வீரமணி சின்ன வயசிலிருந்தே நல்லா படிப்பான். நான் படும் கஷ்டத்தைப் பார்த்து, `அப்பா நான் படிச்சு முடிக்கிற வரைதான் உனக்கு கஷ்டம். அதன் பிறகு, நீ ராஜா மாதிரி இருப்ப’ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான்.

ஆடு வளர்ப்பது, விவசாயக் கூலி வேலைக்குச் செல்வது என அதில் வரும் வருமானத்தைக் கொண்டு என்னோட இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். என் இளைய மகள் சரிதாவை எம்.பில் வரை படிக்க வைத்தேன். இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த வீரமணியின் படிப்புக்காகக் கல்வி லோன் கேட்டு ஏறாத வங்கிகள் இல்லை. எங்கேயும் அவன் கனவுக்கான கதவுகள் திறக்கப்படவில்லை.

ஆறு
ஆறு

`சரிப்பா, நம்ம வசதிக்கெல்லாம் படிக்க ஆசைபடக் கூடாது. நான் வேலைக்குப் போறேன்’ எனச் சொன்னவனை, `நான் இருக்கேன்டா கவலைப்படாத, உன் படிப்புதான் நம்ம தலையெழுத்தை மாற்றும்’ எனக் கூறி எங்களுக்குச் சொந்தமான 200 குழி விவசாய நிலத்தை அடமானம் வைத்து படிக்க வைக்கத் தொடங்கினேன்.

நாமக்கல்: `படிச்சா, எல்லாம் மறைஞ்சிடுமா?’ - சாதி ரீதியாகத் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்

தற்போது அவனுக்கு கடைசி செமஸ்டர் மட்டுமே பாக்கியிருந்தது. `எனக்கு எந்த அரியரும் இல்லை. சீக்கிரமே வேலை கிடைத்துவிடும். நம்ம கனவுகள் நிறைவேறும். காலம் வந்துவிட்டது’ எனக் கூறினான். ஆனால், கொரோனா பாதிப்பால் கல்லூரிகள் மூடப்பட்டதால் தேர்வுகள் தள்ளிப்போனது.

வீரமணியின் குடும்பம்
வீரமணியின் குடும்பம்

இந்நிலையில், நான் உடம்பு சரியில்லாம படுத்துக் கிடந்ததைப் பார்த்த அவன், `அப்பா நான் இன்னைக்கு ஆடு மேய்க்கப் போறேன். நீங்க வீட்டிலிருங்க’னு சொன்னான். படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக ஒருநாள்கூட அவனை ஆடு மேய்க்க அனுப்பியதில்லை. ஆனால், அன்னைக்கு நான் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.

`ரூ.100 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்: தரமறுத்த சிறுவன்’ - முட்டை வண்டியைத் தள்ளிவிட்ட கொடூரம்

பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் சென்றான். அப்போது, ஒரு ஆடு தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. `அய்யோ’ எனப் பதறியவன், தானும் ஆற்றுக்குள் குதித்துவிட்டான். ஆடுகள் மீது அவன் வைத்திருந்த பாசமே, அவனைக் குதிக்க வைத்துவிட்டது. சுழலில் சிக்கியபோதும்கூட, தன்னைக் காப்பாற்றுங்கள் என அவன் கத்தாமல் ஆட்டைக் காப்பாற்றுங்கள் என்றே கத்தியிருக்கிறான்.

வீரமணி
வீரமணி

கடைசியில் இரண்டு உயிர்களும் பறிபோய்விட்டன என இதைப் பார்த்தவர்கள் ஓடிவந்து சொன்னபோது எனக்கு உலகமே இருண்டுவிட்டது. நான் ஆடுமேய்க்கப் போகும்போது இப்படி ஆகியிருக்கக் கூடாதா என மனது அடித்துக்கொண்டது. 28 வயசில் வீரமணியின் அக்கா, திருமணத்துக்காகக் காத்திருக்கிறாள். இனி நான் என்ன செய்யப்போறேன்னு தெரியவில்லை’’ என்று கண் கலங்கினார்.

சரிதாவிடம் பேசினோம்.``காலேஜுக்கு போய்ட்டு பஸ்ஸுக்கு காசில்லாமல் பல நேரம் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வீட்டுக்கு வருவான். இந்த வயசிலும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தான். `இருந்தா இப்படி ஒரு பையன்போல் இருக்க வேண்டும்’னு ஊரே அவனைப் பாராட்டும்.

சகோதரி  சரிதா
சகோதரி சரிதா

ஆடு, கோழிங்க மேலகூட பாசமாக இருப்பான். காலேஜ் முடிந்து வீடு வந்த பிறகு, ஆட்டைக் கட்டிக்கொண்டு விளையாடுவான். அந்த அளவுக்கு ஆடுகள் மீது அவனுக்குக் கொள்ளைப் பிரியம். `அக்கா, நான் சம்பாதிச்சு, உனக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைப்பேன்’ என்பான். ஆட்டைக் காப்பாற்ற ஆற்றில் குத்தித்து, தன் உயிரைத் துறந்திருக்கிறான்.அவன் இழப்பை எங்க மனது ஏற்றுக்கொள்ளவில்லை. `இது ஒரு கனவாக இருக்கக் கூடாதா என அழுது புலம்பிக்கொண்டிருக்கிறோம்.’ இனி எங்க எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது’’ என்று கதறினார்.

அடுத்த கட்டுரைக்கு