பெங்களூரு, தாசப்பா கார்டனில் வசித்து வந்த 13 வயது சிறுவன்தான் அபுபக்கர் சித்திக் கான். கங்காநகரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த இச்சிறுவன், ஜனவரி 16 திங்கள்கிழமையன்று, தன்னுடைய நண்பனோடு சேர்ந்து விஷ்வேஷ்வரய்யா பூங்காவில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென ஒரு குடியிருப்பு கட்டடத்தின் வழியாகச் சென்ற உயர் அழுத்தக் கம்பியில் பட்டம் விழுந்ததுள்ளது. சிறுவன் இரும்பு வேலியினைப் பயன்படுத்திக் கட்டடத்தின் மீது ஏறியுள்ளார். பட்டத்தை சிறுவன் இழுக்க முயன்ற போது, கம்பியின் மீது பட்டதால், மின்சாரம் தாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின் அங்கிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள், சிறுவனுக்கு 80 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இரண்டு நாள்கள் மருத்துவமனையில் சிறுவனுக்குச் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் ஜனவரி 18 புதன்கிழமையன்று உயிரிழந்தார்.

கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். `1969-ம் ஆண்டு குறைந்த கட்டடங்கள் இருந்தபோது, இந்த உயர் அழுத்தக் கம்பி கொண்டு வரப்பட்டது. உயரத்தை அதிகரிப்பது மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதென்பது ஒரு நீண்ட செயல்முறை’ எனக் காவல்துறை அதிகாரிகளிடம் பவர் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறுவனின் தாய் சுல்தானா சித்திக் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துதல் 304A பிரிவின் கீழ், கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட், புருஹத் பெங்களூரு மாநகர பலைக் மற்றும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டம் விடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.