10 நாள்கள்... 214 பேர் கொண்ட டீமின் `தேடுதல்'... `பசி'யால் இறந்த மனநலம் பாதித்த இளம் பெண்!
``நோரா தோட்டத்துக்குக் கூட, யாருடைய உதவி இல்லாமல் செல்லமாட்டாள். அவள் காணாமல் போனதிலிருந்து தூக்கத்தை தொலைத்துவிட்டு நிற்கிறோம்” என்று வேதனை தெரிவிக்கின்றனர் குடும்பத்தார்.

லண்டனை இருப்பிடமாகக் கொண்டவர் நோரா. பிரான்ஸ் - ஐரிஸ் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர். நோராவின் தாய் - தந்தையினர் இரண்டு வார விடுமுறைக்காக அவரை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றனர். நோரா மனநலம் பாதிக்கப்பட்டவர். செரிம்பன் பகுதியில் உள்ள ரெஸார்ட் ஒன்றில் தங்கியிருந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கும் அந்த ரெஸார்ட்டில் மூவரும் விடுமுறை நாளை கழித்து வந்தனர்.

ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 8:30 மணி அளவில் நோரா தங்கியிருந்த அறையின் ஜன்னல் திறக்கப்பட்டிருந்தது. அறையில் தங்கியிருந்த நோராவைக் காணவில்லை. இதைப்பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, ரெஸார்ட் ஓனரிடம், `தன் மகள் காணவில்லை’ என்ற விவரத்தை தெரிவித்துள்ளனர். உடனே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, 120 பேர் அடங்கிய குழு ஒன்று நோராவைத்தேட தொடங்கியது.
விசாரணை முடுக்கிவிடப்பட்டது. வனப்பகுதி என்பதால் விமானம் மூலமாகவும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. நோராவைப் பொறுத்தவரை, அவர் `ஹோலோப்ரோசென்சிபலி’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது, சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைக்காட்டிலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையானது அளவில் சிறியதாக இருக்கும். அதிகமாக பேசவோ, சில வார்த்தைகளுக்குமேல் எழுதவோ நோராவால் முடியாது. தன் மகள் நோராவின் நிலைக்கண்டு நாளுக்கு நாள் அவரது பெற்றோர் அச்சமடையத்தொடங்கினர்.

அடுத்தநாள் ஆகஸ்ட் 5-ம் தேதி காவல்துறை தரப்பில், ``நோராவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் ரெஸார்ட்டைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் தேடி வருகிறோம்” என்று தெரிவித்திருந்தனர். அயர்லாந்து தூதரகம் தரப்பில், ``நோரா குடும்பத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தும், தூதரகம் சார்பில் செய்யப்பட்டுவருகிறது” என்று கூறியிருந்தனர்.
நோரா அயர்லாந்து பாஸ்போர்ட்டுடன் மலேசியா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 3 நாளில் 180பேர் கொண்ட குழு, ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடிவந்தனர். காவல்துறை சார்பில், நோரா காணவில்லை என்ற கோணத்தில்தான் விசாரணை நடந்ததே தவிர, அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் அவர்கள் இந்த வழக்கை அணுகவில்லை. நோராவின் தந்தை சபாஸ்டின், ``என் மகள் தானாக மாயமாகவில்லை; அவரை யாராவது கடத்திச்சென்றிருக்கலாம் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றார். ``நோரா தோட்டத்துக்குக் கூட, யாருடைய உதவி இல்லாமல் செல்லமாட்டாள். அவள் காணாமல் போனதிலிருந்து தூக்கத்தை தொலைத்துவிட்டு நிற்கிறோம்” என்று வேதனை தெரிவிக்கின்றனர் குடும்பத்தார்.

``15 வயதான அவள் மற்றவர்களைப்போல அல்ல. கற்றல், வளர்ச்சி குறைபாடிருக்கும் அவள் மாயமானதுதான் எங்களுக்குப் பெரும் கவலையளிக்கிறது. அவள் இளமையாக இருக்கிறாள். அவளை தன்னால் பாதுகாத்துக்கொள்ளக்கூட முடியாது. என்ன நடக்கிறது என்பது கூட அவளுக்கு தெரியாது” என்று கண்ணீர் வடிக்கின்றனர் அவரது பெற்றோர். அப்பகுதியைச்சுற்றியிருக்கும் பலரும் நோராவைத் தேடும் பணியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
தடவியல் துறை நிபுணர்கள், நோரா தங்கியிருந்த அறை மற்றும் திறந்திருந்த ஜன்னல், பாத்ரூம் உள்ளிட்ட இடங்களில் இருந்த தடயங்களை ஆய்வுக்குட்படுத்தினர். தன் தாயின் குரலைக்கேட்டால் ஒருவேளை மாயமான நோரா அந்தக் குரலைக்கேட்டு வரக்கூடும் என்பதன் அடிப்படையில், `நோரா டார்லிங், அம்மா இங்கிருக்கிறேன்’ என்று அவர் தாய் பேசுவதை ரெக்கார்டு செய்து அதை வனப்பகுதிகளில் ஒலிபரப்பியும் தேடினர்.

ஒருகட்டத்தில் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியைச்சுற்றியிருக்கும் குற்றவாளிகள், ஹோட்டல்கள், வீடுகளில் விசாரணை நடத்தினர். 9 நாள்கள் கடந்துவிட்டது. 214 பேர் கொண்ட டீம் நடத்திய `தேடுதல்' வேட்டை நடத்தியது. இருந்தும் நோரா கிடைத்தபாடில்லை. நம்பிக்கை இழந்து சோகம் தொண்டைக்குழியை அடைக்க, தினம் தினம் வேதனையில் பெற்றோர் தவித்தனர். 10வது நாள், மதியம் விடுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள வனப்பகுதியில் நீரோடை அருகே இளம்பெண் ஒருவரது சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
ஆடைகளின்றி இருந்த அந்தச் சடலம் நோராவுடையது என அவரது பெற்றோர் உறுதி செய்தனர். அதைதொடர்ந்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ``நோரா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்தத் தடயமும் இல்லை. நீண்ட நாள் பசி, மன அழுத்தத்தால் உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அல்சரால் குடலில் ஏற்பட்ட புண்கள் அவரது இறப்புக்குக் காரணமாகிவிட்டது” என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நோரா எப்படி காணாமல் போனார், என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.