Published:Updated:

சித்ரவதை?

சித்ரா - ஹேமந்த்
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா - ஹேமந்த்

ஒட்டுமொத்த சந்தேகமும் அவரின் காதல் கணவர் ஹேமந்த் மீதுதான் குவிந்தது. காரணம், சித்ரா தற்கொலை செய்துகொண்ட நட்சத்திர ஹோட்டலில் உடனிருந்தவர் அவர்தான்.

சித்ரவதை?

ஒட்டுமொத்த சந்தேகமும் அவரின் காதல் கணவர் ஹேமந்த் மீதுதான் குவிந்தது. காரணம், சித்ரா தற்கொலை செய்துகொண்ட நட்சத்திர ஹோட்டலில் உடனிருந்தவர் அவர்தான்.

Published:Updated:
சித்ரா - ஹேமந்த்
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா - ஹேமந்த்
கலகலப்பாக இன்ஸ்ட்ராகிராமில் பேசி வீடியோ வெளியிட்டவர்... நண்பர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவர்... சீரியல் படப்பிடிப்பிலும் உற்சாகமாகப் பங்கேற்று அதிகாலை 2:30 மணி வரை களைப்பே இல்லாமல் நடித்துக்கொடுத்தவர்... அடுத்த சில மணி நேரங்களிலேயே தற்கொலை முடிவை நாடினார் என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார்’ - டிசம்பர் 9-ம் தேதி காலை வெளியான இந்த அதிர்ச்சித் தகவல், சின்னத்திரை ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பலரையும் கடும் துயரில் ஆழ்த்தியது. ‘மிகவும் கலகலப்பான, தன்னம்பிக்கையான பெண்ணாயிற்றே அவர்... திடீரென்று இப்படியொரு முடிவை ஏன் எடுத்தார்?’ என்று நம்பமுடியாமல் அவரின் நண்பர்கள் துடிதுடித்துப்போனார்கள்.

ஒட்டுமொத்த சந்தேகமும் அவரின் காதல் கணவர் ஹேமந்த் மீதுதான் குவிந்தது. காரணம், சித்ரா தற்கொலை செய்துகொண்ட நட்சத்திர ஹோட்டலில் உடனிருந்தவர் அவர்தான். ஹேமந்த் வெளியே சென்றிருந்த நேரத்தில்தான் இந்தத் தற்கொலைச் சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார்கள். “சித்ராவை சித்ரவதை செய்து கொன்றுவிட்டு, தற்கொலை என்று நாடகமாடுகிறார்கள்” என்று சித்ராவின் நண்பர்கள் பலரும் கொந்தளிக்கிறார்கள். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையோ, ‘சித்ராவின் மரணம் தற்கொலைதான்’ என்று சொல்கிறது. “ஒருவேளை தற்கொலையாக இருந்தாலும், அதற்கும் ஹேமந்த்தான் காரணமாக இருக்க முடியும்” என்று அழுது புலம்புகிறார்கள் சித்ராவின் நண்பர்கள்.

சந்தேகம் கிளப்பிய நகக்கீறல்கள்!

சித்ரவதை?

வேலூரில் பிறந்த சித்ராவின் அப்பா காமராஜ், தமிழகக் காவல்துறையில் பணியாற்றிவந்தார். அதனால், சித்ராவின் குடும்பம் சென்னை கோட்டூர்புரத்துக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில்தான் சித்ரா படித்தார். அவர் சைக்காலஜி படித்துக்கொண்டிருந்தபோதே

வீ.ஜே-வானார். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த சித்ரா மாடலிங், விளம்பரப் படங்கள், சீரியல்கள், நடனம் எனக் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ‘முல்லை’ கதாபாத்திரம் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இந்தச் சமயத்தில்தான், சென்னை கரையான்சாவடியைச் சேர்ந்த ஹேமந்த்துடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பதிவுத் திருமணமும் செய்துகொண்டவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தனர். டிசம்பர் 4-ம் தேதி முதல் சீரியல் படப்பிடிப்புக்காக செம்பரம்பாக்கம் அருகில், நட்சத்திர விடுதி ஒன்றில் ஹேமந்த்துடன் சித்ரா தங்கியிருந்தார். டிசம்பர் 9-ம் தேதி அதிகாலையில்தான் இந்த விபரீதம் நடந்திருக்கிறது. ஹேமந்த் வெளியில் சென்றிருந்த நேரத்தில், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சித்ராவின் உடல் மீட்கப்பட்டது. சித்ராவின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்தன.

போலீஸார் விசாரணையில், ``ஷூட்டிங் முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் ‘குளிக்க வேண்டும்’ என்று கூறி என்னை வெளியில் அனுப்பிவிட்டார்’’ என்று முதலில் கூறிய ஹேமந்த், ``காரில் ஒரு ஆவணத்தை எடுத்துவரும்படி சொன்னார்” என்று பிறகு மாற்றிக் கூறியிருக்கிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் சித்ராவின் மரணத்தில் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கின்றன. மேலும், பதிவுத் திருமணம் செய்துகொண்டு நெருக்கமாகப் பழகியநிலையில் ‘குளிக்க வேண்டும்’ என்று சொல்லி சித்ரா, ஹேமந்த்தை வெளியே அனுப்பினார் என்று சொல்வதும் நம்பும்படியாக இல்லை.

ஹோட்டல் ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, “அறை உள்பக்கமாகத்தான் தாழிடப்பட்டிருந்தது. மாற்றுச்சாவியால் திறந்தே ஹேமந்த்துடன் உள்ளே சென்றோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து, டிசம்பர் 10-ம் தேதி, சித்ராவின் சடலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள், ‘சித்ரா தற்கொலை செய்ததற்கான அறிகுறிகள் இருக்கின்றன’ என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும், சித்ராவின் ரசிகர்களுக்குச் சந்தேகங்கள் தீரவில்லை.

‘‘என் பொண்ணை என்னமோ பண்ணிட்டான்!’’

சித்ரா தற்கொலைத் தகவல் வெளியான அன்று, அவரின் நண்பர்கள் பலரும் மரணத்தில் சந்தேகம் கிளப்பிக்கொண்டிருக்க, ‘என் மகளின் மரணத்தில் சந்தேகமே இல்லை’ என்று தடாலடியாகத் தெரிவித்தார் சித்ராவின் அப்பா காமராஜ். அவரது முகத்திலும் கவலை ரேகைகள் சுத்தமாக இல்லை. இந்தநிலையில் அமைதியாக இருந்த சித்ராவின் அம்மா விஜயா, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் திடீரென ஆவேசமானார். ‘‘ஹேமந்த் நல்லபடியா சித்ராவைப் பார்த்துக்குவான்னு நம்பினேன். அவன் என்னை ஏமாத்திட்டான். என் பொண்ணை என்னமோ பண்ணிட்டான்’’ என்று கதறி அழுதார். மீடியாக்களிடம் விஜயா பேசுவதற்கு, அவரின் கணவர் காமராஜ் மற்றும் அவரின் குடும்பத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறித்தான் விஜயாவிடம் நாம் பேசினோம்.

“கடைசியா என்கிட்ட சித்து கூலாதான் பேசினா. ‘லேட்டாகுமா?’னு கேட்டதுக்கு `ஆமாம்மா’னு சொன்னா. ‘ஹேமந்த் எங்க இருக்கான்?’னு கேட்டதுக்கு ‘கார்ல உட்காந்திருக்கான்’னு சொன்னா. அன்னைக்கு சுகர் மாத்திரை போட்டுக்கிட்டு அப்படியே படுத்துட்டேன். காலையில என் தலையில இடி விழுந்த சேதிதான் கெடச்சுது. என் பொண்ணு கோழை இல்லப்பா. வர்ற பிப்ரவரி 10-ம் தேதி கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருந்தோம். ஹேமந்த் கோவக்காரன்னு சொல்வாங்க. அவன்கிட்ட ‘கோவத்தை அடக்கணும்ப்பா’னு அடிக்கடி சொல்லுவேன். அவன் கட்டப் பஞ்சாயத்து பண்றவங்கிறாங்க... எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. ரெண்டு பேருக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு. அந்தக் கோவத்துலதான் என் பொண்ணு இப்படிப் பண்ணியிருக்கா. அதேசமயத்துல சித்துவோட ஃப்ரெண்ட்ஸ் சொல்றதையெல்லாம் கேட்டா பகீர் பகீர்னு இருக்கு. அதெல்லாம் உண்மைதான்னு நினைக்கிறேன்...” என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார்.

சித்ராவின் தாய்மாமாவான சுரேஷ் நம்மிடம், “சேலையில தூக்குப் போட்டதுக்குக் கழுத்துல காயம் இருக்கணுமே... கன்னத்துல, தாடையில, நெஞ்சுல எல்லாம் அடிபட்டிருக்கு. எங்க பொண்ணு தைரியமானவ தம்பி. சத்தியமா சித்துவோட சாவுல மர்மம் இருக்குங்க. எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று கதறினார்.

சித்ரவதை?
சித்ரவதை?
சித்ரவதை?

யார் இந்த ஹேமந்த்?

சித்ராவை முதல் தடவையாக ஹேமந்த் ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில்தான் சந்தித்திருக்கிறார், நட்பாகப் பழகியிருக்கிறார். பிறகு அது காதலாக மலர்ந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இன்டீரியர் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பிசினஸ்களை ஹேமந்த் செய்துவருகிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவரின் உறவினருக்கு திருவேற்காடு பகுதியில் பிரமாண்டமான திருமண மண்டபம் இருக்கிறது. அந்தத் திருமண மண்டபத்தை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் திறந்துவைத்தார்.

ஹேமந்த்தின் நட்பு வளையத்தில் இருந்த சின்னத்திரை நடிகை ஒருவர், ஹேமந்த்தைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘சித்ரா மட்டுமல்ல... இதுக்கு முன்னாடி ஹேமந்த்தைக் காதலித்த லேடி டாக்டர் ஒருத்தங்களும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. ஹேமந்த்துக்குனு சொந்தமா எந்தத் தொழிலும் இல்லை. ஃபேமிலி பேக்கிரவுண்டை வெச்சு, நிறைய தொழில் செய்யறதா காட்டிக்குவார். சினிமா, அரசியல் பிரபலங்கள் தலைகாட்டுற பார்களில் ரெகுலரா அவரைப் பார்க்கலாம். ஹேமந்த்தோட நட்பு வட்டமும் மாறிக்கிட்டே இருக்கும். ஓரளவுக்குப் பிரபலமான ஆளுங்ககூடதான் பழகுவார்.

சித்ராவோடு அறிமுகம் ஏற்படுறதுக்கு முன்னாடி வரைக்கும் என்கிட்ட வாட்ஸ்அப்புல சாட் பண்ணிக்கிட்டிருந்தார். `உன்ன எப்ப மீட் பண்ணலாம்’னு நச்சரிப்பார். பப்புல எல்லாரும் நல்லா சரக்கடிச்சிக்கிட்டிருக்கும்போது அவர் மட்டும் அளவா குடிப்பார். இதையே சாக்கா வெச்சு, பொண்ணுங்ககிட்ட இயல்பா நெருங்கிடுவார். ஹேமந்த்தால் பிரபல இயக்குநர் ஒருத்தரோட முதல் மனைவியும், பிரபல தொகுப்பாளினி ஒருத்தரும்கூட பாதிக்கப் பட்டிருக்காங்க’’ என்றார் பதைபதைப்புடன்!

சித்ரவதை?

என்ன சொல்கிறார்கள் நண்பர்கள்?

சித்ராவின் நண்பர்கள் சிலரிடம் பேசியபோது அவர்களும் ஹேமந்த் மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சந்தேகங்களையும் அடுக்கினார்கள். சித்ராவின் நெருங்கிய தோழியும், சின்னத்திரை நடிகையுமான ரேகா நாயர் நம்மிடம், ‘‘அந்த ஹேமந்த் ஏற்கெனவே ஒரு பெண் டாக்டரை லவ் பண்றதாச் சொல்லி ஏமாத்தினவன். அவனுக்கு இதே வேலைதான். அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. அதனால இந்த வழக்கை ஈஸியா திசை திருப்பிடுவான். இவன் மட்டுமில்லைங்க... சீரியல் வட்டாரத்துல இவனை மாதிரி ஒரு கூட்டமே இருக்கு. பொண்ணுங்கதான் எச்சரிக்கையா இருக்கணும்’’ என்றார் கொதிப்புடன்!

மற்றொரு சின்னத்திரை நடிகரான அஸீம், ‘‘சித்ராவைப் பத்து வருஷமா எனக்குத் தெரியும். அவங்க தற்கொலை செஞ்சுக்குற கேரக்டர் இல்லை. துறுதுறுனு பாசிட்டிவா இருப்பாங்க. பாலிவுட் நடிகர் சுஷாந்த் இறந்தப்ப, சின்னத்திரை துறையில முதல் நபரா, ‘தற்கொலை எதற்கும் தீர்வில்லை’னு பதிவு போட்டாங்க. கல்யாணத்துல ஏதோ சிக்கல் இருந்திருக்கு. என்னங்கிறதுதான் யாருக்கும் புரியாத மர்மமா இருக்கு. ஹேமந்த் பத்தி சின்னத்திரை வட்டாரத்துலேயே பலவிதமான பேச்சுகளைக் கேட்க முடியுது. போலீஸ் நியாயமா இந்த விசாரணையை மேற்கொண்டால்தான் உண்மை வெளியே வரும்’’ என்றார்.

சித்ராவின் சக நடிகையான சரண்யா, ‘‘சித்ரா கலந்துகிட்ட கடைசி நாள் ஷூட்டிங்ல நானும் இருந்தேன். பிரேக்ல அடிக்கடி போன் பண்ணிட்டே இருந்தாங்க. யார்கிட்ட பேசுனாங்கன்னு தெரியலை. ஷூட்டிங் முடிஞ்சு கிளம்பின சில மணி நேரத்துல இப்படியொரு தகவல் வருது. ஒருவேளை சித்ரா தற்கொலை செஞ்சுக்கிட்டாங் கன்னாலும், அதைச் செய்யத் தூண்டினவங்க தண்டிக்கப்பட்டே ஆகணும்’’ என்றார்.

அஸீம் - சரண்யா - ரேகா
அஸீம் - சரண்யா - ரேகா

‘‘ஹேமந்த் என் உயிர்!’’

இவர்கள் இப்படிச் சொன்னாலும், ஹேமந்த் மீது சித்ரா அதீத பாசத்தில் இருந்ததாகத்தான் தெரிகிறது. வழக்கை விசாரிக்கும் உதவி கமிஷனர் சுதர்சன் நம்மிடம், ‘‘சித்ரா தங்கியிருந்த அறையில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. சித்ராவின் செல்போனை ஆய்வு செய்தபோது, தற்கொலை செய்துகொள்வதற்கு முன், அவரின் அம்மாவிடம் நீண்ட நேரம் போனில் பேசியது தெரிந்தது. மேலும், ‘ஹேமந்த் என் உயிர், அவரை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று அவரின் அம்மாவுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதேபோல ஹேமந்த்துக்காகத் தன் குடும்பத்தினருடன் சித்ரா வாக்குவாதம் செய்த சில மெசெஜ்களும் அவரின் செல்போனில் இருக்கின்றன. ஹேமந்த்திடம் விசாரித்தபோது ‘சித்ரா என் உயிர். அவளுக்காக நானும், எனக்காக அவளும் விட்டுக்கொடுத்து வாழ்ந்துவந்தோம்’ என்று கதறியழுதார்.

சித்ராவின் சடலத்தை மீட்கும்போது அவரின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்தன. பிரேத பரிசோதனையில், ‘புடவையால் சித்ரா தற்கொலை செய்துகொண்டபோது கழுத்தை இறுக்கிய சமயத்தில் அதை விடுவிக்கப் போராடியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட நகக்கீறல்கள்தான் அவை. கீறிக்கொண்டபோது சதைத்துணுக்குகள் அவரது நகத்தில் ஓட்டிக்கொண்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதை வைத்துத்தான் தற்கொலை என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் பதிவுத் திருமணம் நடந்து இரண்டு மாதங்களே ஆகியிருப்பதால், ஆர்.டி.ஓ விசாரணை நடந்துவருகிறது. அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்” என்றார்.

டிசம்பர் 9-ம் தேதியிலிருந்தே போலீஸ் பிடியில்தான் இருக்கிறார் ஹேமந்த். சித்ராவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளக்கூட போலீஸார் அவரை அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சர் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஒருவரும், எம்.எல்.ஏ ஒருவரும் தலையிட்டு ஹேமந்த்துக்கு ஆதரவாகப் பேசியதால், விசாரணையின் வேகம் குறைந்திருக்கிறது என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.

இன்னொரு பக்கம் ஹேமந்தின் அம்மா வசந்தா, “என் மகனுக்குப் பெரிதாகக் குடிப்பழக்கமெல்லாம் கிடையாது. அவன் சித்ராவை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டான். நாங்களும் சித்ராவை எங்கள் மகளாகவே நினைத்தோம். சித்ராவின் அம்மா எங்களைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி இருதரப்பிலும் மாறி மாறிப் பேசும்போது, விரைவில் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என்று சித்ராவின் தோழிகள் நம்புகிறார்கள்

நமது இல்லங்களில் தினமும் மணம் வீசிக்கொண்டிருந்த ‘முல்லை’ இன்று நம்மிடையே இல்லை. சித்ராவின் மரணத்தில் மறைந்திருக்கும் சந்தேக ரேகைகளுக்கு விரைவில் விடை கிடைக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism