Published:Updated:

`திருமணம் முடிந்து அடுத்த நிமிடமே...’- நொடியில் முடிந்த காதல் கதை!

கலிலுல்லா.ச

`அந்தக் குழந்தைகளுக்கு நிறைய கனவு இருந்தது. எல்லாம் ஒரு நிமிடத்தில் கருகிவிட்டது.

 Rhiannon Marie Morgan
Rhiannon Marie Morgan

ஹார்லி மோர்கனின் உடலில் அவர் அணிந்திருந்த கோட் அப்படியே இருக்கிறது. பவுட்ரியாக்ஸ் திருமணத்துக்காக அணிந்திருந்த உடையும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், உயிர்மட்டுமில்லை. காலம் விசித்திரமானது; நாம் நினைக்காததை எல்லாம் செய்துமுடிக்கும் வலிமைவாய்ந்தது. அமெரிக்காவின் டெக்ஸால் மாகணத்தைச் சேர்ந்த இவர்கள் ஒருவரையொருவர் கரம் பிடித்த தினம் அது. சிறுவயது முதல் காதலித்து வந்தவர்கள், காதலுக்குப்பின், திருமணம் செய்துகொள்ள நினைத்தவர்கள் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் திருமணம் செய்துகொண்டனர். இனிதே முடிந்த திருமணத்துடன் கைகோத்து வந்தவர்கள், பார்க்கிங்கிலிருந்த காரில் ஏறி வாழ்வின் பயணத்தைத் தொடங்க முற்பட்டனர்.

mother of Morgan
mother of Morgan

ஆனால், எங்கிருந்தோ வேகமாக வந்த லாரி ஒன்று, அவர்கள் அமர்ந்திருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. அந்த வேகத்தில் கார் இரண்டு மூன்று சுற்று உருண்டுசெல்ல அங்கிருந்த, அவரது குடும்பத்தினர் இதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். செய்வதறியாது திகைத்தவர்கள், காருக்குள்ளிருந்த மணமக்களைப் பார்த்தபோது அவர்கள் இறந்துகிடந்தனர். திருமணமான சில நிமிடங்களில் இத்தகைய கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். ``அந்தக் குழந்தைகளுக்கு நிறைய கனவு இருந்தது. எல்லாம் ஒரு நிமிடத்தில் கருகிவிட்டது. அவர்கள் திருமணத்தைக்கண்டு நேரில் வாழ்த்த வந்தேன். ஆனால், அவர்கள் இறப்பதை பார்க்கவேண்டியதாகிவிட்டது” என்று கண்ணீருடன் வேதனை தெரிவிக்கிறார் மோர்கனின் தாயார்.