பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கடன் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். பகட்டு வாழ்க்கைக்கு மத்தியில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடி வெளியில் தெரிய வாய்ப்பில்லை. அந்த நெருக்கடிகள் சில சமயம் உயிரை காவு வாங்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் கடந்த மாதம் நிகழ்ந்த 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திய இந்தியாவின் முதல் காஃபி டே செயின் நிறுவனத்தின் உரிமையாளரான சித்தார்த்தாவின் மரணம்.

காபி தொழிலைப் பின்னணியாகக்கொண்ட குடும்பத்திலிருந்து வந்து, இந்தியாவின் மிகப்பெரிய உணவுத்தொடர் நிறுவனங்களில் ஒன்றாக, உலகின் பல்வேறு நாடுகளில் 'காஃபி டே'வின் கிளைகளைப் பரப்பிய சித்தார்த்தாவின் மரணம் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில் சித்தார்த்தாவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற குழப்பமும் இருந்துவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதற்கு காரணம் கடந்த மாதம் இறுதியில் நேத்ராவதி ஆற்றுக்கு அருகில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சித்தார்த்தாவின் உடல், மறு நாள் காலை அதே நேத்ராவதி நதியின் கரையில் கிடைத்தது. காணாமல் போகும்முன்பு அவர் டி-சர்ட் அணிந்திருந்தார். ஆனால் மறுநாள் ஆற்றங்கரையில் கிடைத்த சித்தார்த்தாவின் உடலில் அவர் அணிந்திருந்த டி-சர்ட் இல்லை. தற்கொலை செய்துகொண்டிருந்தால் டி-சர்ட் எங்கே சென்றிருக்கும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் மரணம் தற்கொலை இல்லை என்றே தோன்றுகிறது என்று சந்தேகமும் கிளப்பப்பட்டது. இதேபோல் செல்போன் உள்ளிட்ட அவரது உடைமைகளும் கிடைக்கவில்லை. இதனால் தொடர் சந்தேகங்களுக்கு மத்தியில் இறந்த சித்தார்த்தாவின் தடயவியல் அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதில் சித்தார்த்தாவின் மரணம் தற்கொலை என்று உறுதியாகியுள்ளதாக கர்நாடக காவல்துறை கூறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
`சித்தார்த்தாவின் நுரையீரலில் அதிகப்படியான தண்ணீர் காணப்பட்டது. இதனால் அவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்ததற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது' எனத் தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி பேசியுள்ள மங்களூரு போலீஸ் கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா, ``தடய அறிவியல் துறையின் அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தற்கொலை கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இதனால் அடுத்தகட்ட விசாரணையை நோக்கி நகரவுள்ளோம். அடுத்தகட்ட விசாரணை அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து இருக்கும். நாங்கள் எல்லா கோணங்களிலிருந்தும் வழக்கை விசாரித்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

வரி ஏய்ப்பு புகார்.. வருமானவரி சோதனை.. அதைதொடர்ந்து முடக்கப்பட்ட பங்குகள்.. கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் உடனான நட்பு.. உளவியல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவரின் மரணத்துக்கான காரணமாக கூறப்பட்டாலும் இதில் எதுமே அதிகாரபூர்வமாக தெரியவரவில்லை. இதனால் உண்மையான காரணங்கள் தெரியாமல் இதுவரை குழப்பமாகவே இருந்துவருகிறது சித்தார்த்தாவின் மரண விவகாரம். தற்போது போலீஸ் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட விசாரணையிலேயே உண்மையான காரணங்கள் தெரியவரும்.