Published:Updated:

``தெரியாம பண்ணிட்டேனே...!''- தற்கொலைக்கு முன் கலங்கிய `இருட்டுக்கடை' ஹரிசிங்

 ஹரிசிங்
ஹரிசிங்

அனைவருக்கும் இனிப்பை சுவைக்கக் கொடுத்த ’இருட்டுக்கடை’ ஹரிசிங்கின் வாழ்வு கசந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை, இருட்டுக்கடை உரிமையாளரான ஹரிசிங், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நெல்லை மக்களை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் அல்வா பிரியர்களின் மனங்களிலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இருட்டுக்கடையில் அல்வா விற்பனை
இருட்டுக்கடையில் அல்வா விற்பனை

ஹரிசிங் மரணம் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘இருட்டுக்கடை உரிமையாளரான ஹரிசிங் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சமீப காலத்தில், சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்வது வருத்தமளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இனிப்பை சுவைக்கக் கொடுத்த ஹரிசிங்கின் வாழ்வு கசந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லைக்கு இருட்டுக்கடை அல்வா வந்த கதை!

கடந்த 18-ம் நூற்றாண்டில், தற்போதைய தென்காசி மாவட்டத்தின், சொக்கம்பட்டி ஜமீன்தார் தனது பரிவாரங்களுடன் காசி விஸ்வநாதரை தரிசிக்கச் சென்றிருக்கிறார். அங்கு, அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இனிப்பு பரிமாறப்பட்டிருக்கிறது. அதன் சுவையில் மயங்கிய ஜமீன்தார், அந்த இனிப்பை சமைத்த குடும்பத்தினரையும் தன்னோடு அழைத்துவந்துவிட்டார்.

Vikatan

அதன் பின்னர், சொக்கம்பட்டி அரண்மனையில் நாள்தோறும் அல்வா கிண்டப்பட்டு விருந்துகளில் பரிமாறப்பட்டிருக்கிறது. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின்னர், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அல்வா செய்யும் குடும்பத்தினர், அல்வாவை பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

ராஜஸ்தானிலிருந்து வந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் என்பவர், நெல்லைக்கு வந்து அல்வா கடையைத் தொடங்கியிருக்கிறார். அவருக்குப் பின் அவரது மகன் பிஜிலி சிங் அந்தத் தொழிலைச் செய்துள்ளார். பிஜிலி சிங், கலால் துறையில் சூப்பிரண்டாக இருந்தவர். அதனால் கடையைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், அவர் மனைவியின் தம்பியான ஹரிசிங்கை அழைத்துவந்தார்.

இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங்
இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங்

ஹரிசிங், அல்வா கடையின் பொறுப்பை ஏற்றுள்ளார். ’’நெல்லையில், சுவாமி நெல்லையப்பர் ஹைரோடு பகுதியில் ஆரம்பத்தில் கடை இருந்தது. அப்போது ஈரடுக்குப் பாலம் கிடையாது என்பதால், வேலைக்குச் செல்பவர்கள் அல்வா சாப்பிட்டுவிட்டு, அருகில் இருக்கும் கடையில் பால் அருந்திச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்” என்கிறார்கள் அங்குள்ள சில முதியவர்கள்.

தரத்துக்கு முன்னுரிமை கொடுத்த இருட்டுக்கடை!

நெல்லையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டியதும், அதன் அருகில் இருந்த கடைகளின் விற்பனை குறையத் தொடங்கியது. அதனால் சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகில் லட்சுமி விலாஸ் கடையைத் தொடங்கினார்கள். அதன் பின்னரே நெல்லையப்பர் கோயிலின் எதிரில் உள்ள இருட்டுக்கடை உருவானது.

பெயர்ப்பலகை கிடையாது!
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்திருக்கும் இருட்டுக்கடைக்கு, பெயர்ப்பலகை கிடையாது!

நெல்லையப்பர் கோயிலின் எதிரே தொடங்கப்பட்ட இருட்டுக்கடை அல்வா, இப்போது நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பிரசித்திபெற்ற இருட்டுக்கடையின் முகப்பில் பெயர்ப்பலகை கிடையாது என்பது வியப்புக்குரிய உண்மை.

எந்த விளம்பரமும் இல்லாமல், 40 வாட்ஸ் குண்டு பல்பு வெளிச்சத்தில் மட்டுமே கடை இயங்குகிறது. மாலை 5 மணிக்கு திறக்கும் கடைக்காக, அரை மணி நேரத்துக்கு முன்பிருந்தே மக்கள் காத்திருப்பது வழக்கம். கடையில் இருக்கும் அல்வா முடிந்ததும் இரவு 8 மணிக்குள் அடைக்கப்பட்டுவிடும். 

இருட்டுக்கடை
இருட்டுக்கடை

இருட்டுக்கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும். காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நிலைமை இருக்கும். ஆனாலும் பகலில் திறப்பதோ அல்லது வழக்கத்தைவிடவும் கூடுதலாக அல்வா கொண்டுவந்து விற்பனை செய்வதோ கிடையாது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஹரிசிங்!

அக்காவுக்கு உதவி செய்வதற்காக வந்த ஹரிசிங், இருட்டுக்கடை நிர்வாகத்தை கவனித்துக்கொண்டு நெல்லையிலேயே தங்கி விட்டார். அவருக்கு இரு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒரு மகள் உயிரிழந்துவிட்டார்.

ஹரிசிங் வீடு
ஹரிசிங் வீடு

மகளின் மரணத்துக்குப் பின்னர் மனதளவில் சோர்வடைந்திருந்த ஹரிசிங், கடையில் இருக்கும்போது எல்லோரிடமும் அன்பாகவும் சிரித்த முகத்துடனும் நடந்துகொள்வார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதால், சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ‘பாசிட்டிவ்’ ரிசல்ட் வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

ஹரிசிங் மற்றும் அவரது மருமகன் கோபால் சிங் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவர் மிகுந்த மன வேதனை அடைந்ததாகச் சொல்கிறார்கள், மருத்துவமனையில் அவரை நேரில் சந்தித்தவர்கள்.

`என்னால் இருட்டுக்கடையின் பாரம்பர்யப் பெயரே கெட்டு விட்டதே’ என ஹரிசிங் வருத்தப்பட்டார்.
மருத்துவமனை பணியாளர்கள்

தன்னால் பிறருக்கு துன்பம் ஏற்பட்டுவிடுவது குறித்து மிகுந்த வேதனையுடன் இருந்த அவர், மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார். 79 வயதான அவருக்கு, தன்னால் இருட்டுக்கடையின் நற்பெயருக்கே களங்கம் ஏற்பட்டுவிட்டதாக வருந்தியுள்ளார். மன அழுத்தத்தால் அவர் சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனையிலேயே 25-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.  

”எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியாமல் கடையில் இருந்து அல்வா விற்பனை செய்தேனே... அதன் மூலம் பிறருக்கும் பரவியிருக்குமே. என்னால் என் குடும்பத்தினர் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு சிரமத்துக்கு ஆளாகிறார்களே” என மருத்துவமனை ஊழியர்களிடம் வேதனைப்பட்டிருக்கிறார்.

இரும்புத் தடுப்பு வைத்து மறைக்கப்பட்ட இருட்டுக்கடை
இரும்புத் தடுப்பு வைத்து மறைக்கப்பட்ட இருட்டுக்கடை

தற்போது இருட்டுக்கடை, இரும்புத் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. ஹரிசிங் வீடு இருக்கும் சாமி சன்னதி தெருவையும் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் சீல் வைத்து விட்டனர். இருட்டுக்கடை உரிமையாளரின் மரணம், நெல்லை மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு