Published:Updated:

`பாசமாக வளர்த்தவர்!’ - பாகனுக்கு திருப்பரங்குன்றம் கோயில் யானையால் நேர்ந்த கதி

யானை தெய்வானை
யானை தெய்வானை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

யானையைக் குளிக்க வைக்க பாகன் காளீஸ்வரன் முயன்றபோது திடீரென்று ஆவேசம் கொண்ட தெய்வானை, அவரை தும்பிக்கையால் பிடித்து சுவரில் அடித்தது.

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் பாகன் காளீஸ்வரன், தான் பாசமாக வளர்த்த யானையால் கொல்லப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. யானைகள் வளர்ப்போர் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யானை தெய்வானை
யானை தெய்வானை
ஈ.ஜெ.நந்தகுமார்

முருகக்கடவுளின் அறுபடைகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் திருக்கோயிலுக்கு அஸ்ஸாமிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன் யானை கொண்டு வரப்பட்டது. அந்த யானைக்கு தெய்வானை என்று பெயரிட்டு இரண்டு பாகன்கள் பாசமாக வளர்த்து வந்தார்கள்.

நேற்று மாலை யானையைக் குளிக்க வைக்க பாகன் காளீஸ்வரன் முயன்றபோது திடீரென்று ஆவேசம் கொண்ட தெய்வானை, அவரை தும்பிக்கையால் பிடித்து சுவரில் அடித்தது. நிலைமையைப் புரிந்துகொண்ட காளீஸ்வரன், தன்னைக் காப்பாற்றும்படி கதறியும் மற்றவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரை சுவரில் அடித்து காலால் மிதித்தது தெய்வானை.

காளீஸ்வரன்
காளீஸ்வரன்
ஈ.ஜெ.நந்தகுமார்

காளீஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு பாகன் ராஜேஷையும் தாக்க முயன்றது. அவர் ஓடி தப்பித்தார். உடனே கோயில் ஊழியர்கள் அனைவரும் அங்கு வந்தனர். யானை மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததும் அது அமைதியானது. அதன் பின் காயப்பட்டுக் கிடந்த பாகன் காளீஸ்வரனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது.

யானைக்கு மதம் பிடித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதால் கால்நடை மருத்துவர்கள் வந்து யானைக்கு மயக்க ஊசி போட்டனர். தொடர்ந்து யானையின் நிலையை பரிசோதித்து வருகிறர்கள். மதம் பிடித்த யானையைத் தொடர்ந்து கோயிலில் வைத்திருக்கலாமா வேண்டாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

யானை தெய்வானை
யானை தெய்வானை
ஈ.ஜெ.நந்தகுமார்

கடந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா நடந்துகொண்டிருந்தபோது, வலம் வந்த யானை அப்போதிருந்த பாகன் கணபதி முருகன் என்பவரை தாக்கியதில் அவரும், அவரை மீட்கச் சென்றவரும் காயமடைந்தார்கள். அந்தச் சம்பவத்தால் அவருக்கு உடல் நலம் குன்றி பாகனாகப் பணியைத் தொடர முடியாமல் போனது. சில மாதங்களுக்கு முன் உதவிப்பாகன் சிதம்பரம் என்பவரும் யானையால் தாக்கப்பட்டார். இந்த நிலையில்தான் யானையை பராமரிக்க மீனாட்சியம்மன் கோயிலில் பணியாற்றிய ராஜேஷும் காளீஸ்வரனும் திருப்பரங்குன்றம் மாற்றப்பட்டு பாசத்துடன் யானையை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் காளீஸ்வரன் யானையால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு