Published:Updated:

தூத்துக்குடி: `தம்பியை நினைச்சே அம்மா இறந்துட்டாங்க!' - சோகத்தில் செல்வனின் குடும்பம்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

``தம்பியை நினைச்சு அம்மா அழுதுக்கிட்டே இருந்தாங்க. சரியாவே சாப்பிடலை. உடம்பும் ரொம்ப தளர்ந்துடுச்சு. பாசமா பார்த்துக்கிட்ட மகனையும், மனைவியையும் இழந்துட்டு எங்க அப்பா இப்போ தனி மரமாகிட்டார்” எனக் கண்ணீர் மல்கச் சொல்லி அழுகிறார் செல்வனின் சகோதரி பவிலா.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது தம்பிகளான சிலுவைதாஸ், துரைராஜ் ஆகியோருக்குச் சொந்தமான காந்திநகர் அருகிலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த தெற்கு மாவட்ட அ.தி.மு.க வர்தகப்பிரிவுச் செயலாளரான திருமணவேலுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அந்த இடத்தை ஒட்டி தனிஸ்லாஸின் மகன்கள் பீட்டர்ராஜா, பங்காருராஜன், செல்வன் ஆகியோருக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது.

உயிரிழந்த செல்வனின் தாயார் எலிசபெத்
உயிரிழந்த செல்வனின் தாயார் எலிசபெத்

இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி செல்வனை திருமணவேலின் ஆதரவாளர்கள் காரில் கடத்திச் சென்று தாக்கியதில், பலத்த காயமடைந்தார். திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த செல்வனுக்கு ஜீவிதா என்ற மனைவியும், மரிய செல்வசைனி என்ற மூன்று மாதக் கைக்குழந்தையும் இருக்கிறார்கள்.

சாத்தான்குளம்: `நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அளித்துள்ளது!’ - உயர் நீதிமன்றம்

இதையடுத்து திருமணவேல், அவருடைய சகோதரர் முத்துகிருஷ்ணன், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளில் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தெற்கு மாவட்ட அ.தி.மு.க வர்தகப் பிரிவு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் திருமணவேல் நீக்கப்பட்டார். தன் மகனின் இறப்புக்கு திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர்தான் காரணம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வனின் தாய் எலிசபெத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

உயிரிழந்த செல்வன்
உயிரிழந்த செல்வன்

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கி நடத்திவருகின்றனர். இந்த இடத்தை திருமணவேல், ஆக்கிரமித்து வேலி அமைத்து பயன்படுத்திவந்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பகை இருந்துவந்திருக்கிறது.

மகன் செல்வனின் இறப்புக்குப் பிறகு மிகவும் சோகமாகக் காணப்பட்ட அவருடைய தாயார் எலிசபெத், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். செல்வனின் சகோதரி பவிலாவிடம் பேசினோம், ``எங்க அம்மா, அப்பாவுக்கு நாங்க எட்டு ஆண் பிள்ளைகள், நான் ஒரே ஒரு பொண்ணு. ரெண்டு ஆண் பிள்ளைகள் இறந்துட்டாங்க. அம்மாவுக்குச் சரியா கண் தெரியாது. அப்பாவுக்குச் சரியா காது கேட்காது.

செல்வனின் வீடு
செல்வனின் வீடு

ஆறு பிள்ளைகள் உள்ளூரில் இருந்தாலும், தம்பி செல்வன்தான் அம்மா, அப்பாவைப் பார்த்துக்கிட்டான். எங்களுக்குச் சொந்தமான இடத்தை திருமணவேல் ஆக்கிரமிச்சதுனால, தண்ணீர் லாரிவெச்சு பிழைப்பை நடத்தினான். அவன் உண்டு, அவன் தொழில் உண்டுனு இருந்த நிலையில, நிலப்பிரச்னை இடியா வந்து இறங்கி, இப்போ அவன் உயிரையே காவு வாங்கிடுச்சு. தம்பி இறந்ததுலருந்தே அம்மா ரொம்ப தளர்ந்துட்டாங்க.

செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?

சரியா சாப்பாடு சாப்பிடலை. அவனை நினைச்சே எப்பவும் அழுதுக்கிட்டு இருந்தாங்க. நாங்க எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் கேட்கலை. அம்மாவின் தவிப்பை எங்களால தாங்கிக்க முடியலை. நாலு நாளா நடமாடக்கூட முடியாத நிலையில் ரொம்ப சோர்ந்துட்டாங்க. `எய்யா செல்வா.. செல்வா.. என் கண்ணு' எனச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஏற்கெனவே தம்பியை இழந்துட்டு தவிச்சிக்கிட்டு இருக்கோம்.

செல்வனின் தாய், தந்தை
செல்வனின் தாய், தந்தை

இந்த நிலையில அம்மாவின் இறப்பு எங்களை வதைக்குது. பாசமா பார்த்துக்கிட்ட மகனையும், மனைவியையும் இழந்துட்டு எங்க அப்பா இப்போ தனி மரமாகிட்டார் இதுக்குமேல என்னத்தைச் சொல்லன்னே தெரியலை” என்றார். செல்வனின் தாயார் எலிசபெத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு