Published:Updated:

``கட்டடத்தை இடிச்சிட்டாங்க, தகரத்தை வெச்சித்தான் தகனம் செய்றோம்!”- தூத்துக்குடி மக்கள் வேதனை

``எரியூட்டும் கட்டடம் இடிஞ்சு அஞ்சு வருஷம் ஆகுது. இறந்தவரின் இறுதிச்சடங்கிற்காக செலவுசெய்யும் செலவைவிட, உடல் நல்லபடியாக எரிவதற்காகவும் கூடுதல் செலவுசெய்ய வேண்டியதிருக்கு” என புலம்புகிறார்கள் தூத்துக்குடி, பழங்கோட்டை கிராம மக்கள்.

தகரைத்தைத் தூக்கி நிற்கும் கிராம மக்கள்
தகரைத்தைத் தூக்கி நிற்கும் கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பழங்கோட்டை கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கான சுடுகாட்டில் இருந்த எரியூட்டும் கட்டடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களைத் திறந்தவெளியில் எரியூட்டி வருகின்றனர். மழைக் காலங்களில் உடல்களைத் தகனம்செய்ய முடியாமல், தகரம் வைத்து அடைத்துச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட சுடுகாடு கட்டடம்
இடிக்கப்பட்ட சுடுகாடு கட்டடம்

எனவே, உடனடியாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் கிராம மக்கள். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம், ”எங்க பழங்கோட்டை கிராமம்தான் மாவட்டத்திலேயே கடைசி கிராமம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவர்றோம். பட்டியலின சமுதாய மக்களுக்கு ஒரு சுடுகாடும், மற்ற சமுதாய மக்களுக்கு ஒரு சுடுகாடும் உள்ளன.

Vikatan

அஞ்சு வருஷத்துக்கு முன்னால, பட்டியலின சமுதாய மக்கள் பயன்படுத்திவந்த எரியூட்டும் கட்டடம் பழுதடைஞ்சதுனால இடிச்சாங்க. ஆனா, இப்போ வரைக்கும் கட்டடம் கட்டித் தரலை. இதனால, திறந்தவெளியிலதான் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்துட்டுவர்றோம். அதிலும், மழைக் காலங்களில் தகனம் செய்ய மிகவும் சிரமப்படுகிறோம். பகலிலும் இரவிலும் உடல் எரியூட்டப்பட்டு, எரிந்து முடியும் வரை பக்கத்துலயே காத்தியிருக்கவேண்டிய நிலை இருக்கு.

திறந்தவெளியில் எரியூட்டப்படும் உடல்
திறந்தவெளியில் எரியூட்டப்படும் உடல்

பல நேரங்களில் உடலை எரியூட்டும்போது மழை வந்து பாதிக்கப்பட்டிருக்கோம். மழை வரும்போது தகரத்தால் உடல் எரியும் பகுதியைச் சுற்றி அடைத்தாலும் பலனில்லை. மழை நின்றவுடன் மீண்டும் எரியூட்டவேண்டிய நிலை உள்ளது. ஒருவர் இறந்தால், இறுதிச் சடங்கிற்காக செலவு செய்யும் தொகையுடன், அந்த உடலை நல்லபடியாக எரித்து முடிப்பதற்காகக் காவல் காப்பவருக்கு, கூலியுடன் சேர்த்து கூடுதலா செலவுசெய்ய வேண்டியதிருக்கு.

இதுகுறித்து ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எரியூட்டும் கட்டடம், இறுதிச் சடங்குகள் செய்வதற்கான கட்டடங்களுடன், தண்ணீர் வசதியையும் அரசு செய்து தர வேண்டும்” என வேதனையுடன் கூறினார்கள். இது குறித்து பழங்கோட்டை ஊராட்சி செயலர் ஞானமணியிடம் பேசினோம்.

இடிக்கப்பட்ட எரியூட்டும் கட்டிடம்
இடிக்கப்பட்ட எரியூட்டும் கட்டிடம்

``இந்தக் கிராமத்தில் சுடுகாடு எரியூட்டும் கட்டடம் மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஆதிதிராவிட நலத்துறையின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் எரியூட்டும் கட்டடம், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அமர்வதற்கான காத்திருக்கும் கட்டடம் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது” என்றார்.