அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“சர்ப்ரைஸ் கொடுக்க வந்தான்... சாப்பிடாமலேயே போயிட்டான்” - ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற சோகம்!

சஞ்சய்குமார் - அழகுராஜா - காவ்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்சய்குமார் - அழகுராஜா - காவ்யா

கரையில் நின்றுகொண்டிருந்த நான் சஞ்சய்குமாரைக் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்ற முயன்றேன்... முடியவில்லை. மூவரையும் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது

விருந்துக்குச் சென்ற புதுமணத் தம்பதி, லண்டனிலிருந்து விடுமுறை யில் வந்த இளைஞர் உட்பட மூன்று பேர் பெரியாற்று கோம்பை ஆற்றில் வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவம் போடிநாயக்கனூர் பகுதியினரையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

போடி புதுக்காலனியைச் சேர்ந்த தியாகராஜன், நாகரத்தினம் தம்பதியின் ஒரே மகன் சஞ்சய்குமார். பொள்ளாச்சியில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக லண்டனுக்குச் சென்றவர் அங்கேயே நல்ல வேலையிலும் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில், பொள்ளாச்சியில் தான் படித்த கல்லூரியில் நடந்த பட்டமளிப்புவிழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பிய சஞ்சய்குமார், தன் தாயார் நாகரத்தினத்துக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுக்க அவரிடம் சொல்லாமல் போடிக்கு நேரில் சென்றிருக்கிறார்.

“சர்ப்ரைஸ் கொடுக்க வந்தான்... சாப்பிடாமலேயே போயிட்டான்” - ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற சோகம்!

கூடவே, தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தனது தாய் மாமா அழகுராஜாவின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால், அழகுராஜா-காவ்யா தம்பதியரைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கிறார். விருந்துக்கு வந்த தம்பதியர், தன் சித்தி மகன் பிரணவ் ஆகியோருடன் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என்று தனது காரில் சஞ்சய்குமார் கிளம்பிச் சென்றபோதுதான் இந்த விபரீதம் நேர்ந்திருக்கிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த பிரணவிடம் பேசினோம். “காலை 9 மணிக்கு காரில் கிளம்பி முதலில் போடிமெட்டு பகுதிக்குச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். ஆனால், கனமழை பெய்ததால் போடிக்குத் திரும்பி, சிறைக்காடு அருகேயுள்ள பெரியாற்று கோம்பை ஆற்றுப் பகுதிக்குக் குளிப்பதற்காகச் சென்றோம். கேணி என்ற பகுதியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அதில் அழகுராஜா மாமா இறங்கினார். திடீரென பாறையில் வழுக்கித் தண்ணீரில் விழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற சஞ்சய்குமார் ஆற்றில் குதித்தார். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் இருவரையும் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த காவ்யாவும் உள்ளே குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், பாறையில் மோதி அவருக்கு முகம், தாடையில் காயம் ஏற்பட்டது.

“சர்ப்ரைஸ் கொடுக்க வந்தான்... சாப்பிடாமலேயே போயிட்டான்” - ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற சோகம்!

கரையில் நின்றுகொண்டிருந்த நான் சஞ்சய்குமாரைக் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்ற முயன்றேன்... முடியவில்லை. மூவரையும் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. எங்கள் போன்கள் காரில் பூட்டப்பட்டிருந்ததால், ஓடிச் சென்று அருகே இருந்த பெரியவரிடம் சொல்லி எங்கள் அம்மாவுக்குத் தகவல் கொடுத்தேன். அதன் பிறகே தீயணைப்பு, போலீஸாருக்குத் தகவல் போனது. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது” என்றார் ஆற்றாமையுடன்.

சஞ்சய்குமாரின் தாய் நாகரத்தினம், “ `உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்தேம்மா’னு சொல்லாம கொள்ளாம லண்டன்லருந்து 14 மாசத்துக்குப் பிறகு ஊருக்கு வந்தான் என் மகன். அவனுக்காக வேண்டிக்கிட்டு முத்துமாரியம்மனுக்கு அஞ்சு வகை சோறு செஞ்சு அன்னதானம் கொடுத்தேன். அவன் வயித்துல இருக்கும்போதே அவங்க அப்பா போயிட்டாருனு பார்த்துப் பார்த்து வளர்த்தேன். எல்லார்கிட்டயும் அன்பா இருப்பான். மாமாவுக்கு நல்லா விருந்துவெக்கணும்னு மீன், கறியெல்லாம் வாங்கிக் கொடுத்து, சமைக்கச் சொல்லிட்டுப் போனான். திரும்பி வந்து ஒரு வாய்கூட சாப்பிடாமலேயே போயிட்டான். அந்த முத்துமாரியம்மன்கூட எம் புள்ளைக்குத் துணையா இல்லாம கைவிட்டுடுச்சு...” எனத் தேம்பினார்.

“சர்ப்ரைஸ் கொடுக்க வந்தான்... சாப்பிடாமலேயே போயிட்டான்” - ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற சோகம்!
“சர்ப்ரைஸ் கொடுக்க வந்தான்... சாப்பிடாமலேயே போயிட்டான்” - ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற சோகம்!

இன்னொரு துயரம்!

மேலும் ஒரு துயர நிகழ்வாக, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுக்கு அருகேயுள்ள குன்னுத்துப்பட்டியில் கண்மாயில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்கள்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகள் முத்து, ராஜாவின் தம்பி சின்னராஜாவின் மகன் கிருத்திக், இவர்களின் உறவினர் சந்திரனின் மகள் தனலட்சுமி ஆகியோர் அதே பகுதியிலுள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் படித்துவந்தனர். இந்த நிலையில், சின்னராஜாவின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த தனலட்சுமி, முத்து, கிருத்திக் உட்பட ஏழு குழந்தைகள் அந்தப் பகுதியிலிருக்கும் சிவனாண்டி கண்மாய்க்கு விளையாடச் சென்றிருக்கிறார்கள். அபோதுதான் இந்த மூவரும் நீரின் ஆழமான பகுதிக்குச் சென்று கரைக்குத் திரும்ப முடியாமல் உயிரிழந்திருக்கிறார்கள்.

முத்து, கிருத்திக், தனலட்சுமி
முத்து, கிருத்திக், தனலட்சுமி
லட்சுமி, அன்னக்கிளி, சந்திரன்
லட்சுமி, அன்னக்கிளி, சந்திரன்

உயிரிழந்த கிருத்திக்கின் தாயார் லட்சுமி, “எம் புள்ளை நல்ல புத்திசாலி. ‘மழை நேரத்தில், யாரும் கண்மாய், கால்வாய் பக்கம் போகாதீங்கனு பள்ளிக்கூடத்துல டீச்சர் சொன்னாங்கம்மா... நீயும் போகாதே’னு எனக்கு அறிவுரை சொன்னான். எப்படித்தான் கண்மாய்க்குப் போனான்னே தெரியலை” என்று கதறியது பலர் நெஞ்சை உலுக்கியது.

முத்துவின் பெற்றோர் ராஜா, அன்னக்கிளி நம்மிடம், “எங்க தோட்டத்துல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ‘சாப்பிட வா... சாப்பிட வா’னு பத்து முறை கத்தினோம். ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த தாத்தாகூட சேர்ந்து வர்றேம்மான்னு சொன்னான். கடைசியில மூணு பிள்ளைங்களும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு செத்துக்கிடந்ததைப் பார்த்தோம்” என்றனர்.

தனலட்சுமியின் தந்தை சந்திரன், “என் மனைவி வீட்டைவிட்டுப் போயிட்டா. மகனையும், மகள் தனலெட்சுமியையும் நானேதான் வளர்த்துவந்தேன். சின்னப் புள்ளையா இருந்தாலும் எல்லாத்தையும் தாய்போல பார்த்துக்குவா. கண்மாயை ஒட்டியிருக்குற தோட்டத்துல குடியிருக்கேன். ஒரு நாளும் இப்படி ஆகும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. முன்னாடி யாரும் கண்மாய்ல சிக்கி இறந்ததில்லை. இப்ப கண்மாய் தூர்வாராம சேறும் சகதியுமாகிட்டதால கால்கள் சிக்கி குழந்தைங்க இறந்துட்டாங்க” என்றார் வருத்தத்துடன்.

சின்ன கவனக்குறைவு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகிறது!