`மின்சார வயர்; தோட்டத்தில் திடீரென சரிந்துவிழுந்த தொழிலாளர்கள்!' - ஊட்டியைப் பதறவைத்த 3 பேர் இறப்பு

ஊட்டி அருகில் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்வயரால் பெண் உட்பட 3 அப்பாவி கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள அத்திக்கல் கடசோலை பகுதியில் சந்திரன் என்பவரது மலை காய்கறி தோட்டத்தில் நேற்று 10-க்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மதிய உணவுக்குப் பின் மீண்டும் வேலை செய்ய பாலன், குமார், மணியம்மாள் மூன்று பேரும் விளைநிலத்தில் நடந்துக்கொண்டிருந்தனர்.
முன்னால் சென்றுக்கொண்டிருந்த குமார் திடீரென அலறித் துடித்து கீழே விழுந்தார். பதறிப்போய் குமாரை தூக்க முயன்ற பாலனும் மணியம்மாளும் அதே இடத்தில் துடித்து விழுந்தனர். இவர்களின் அலறல் சத்ததைக்கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது அருகில் மின்சார வயர் அறுந்துகிடப்பதை பார்த்திருக்கிறார்கள்.

இதையடுத்து, மற்றவர்கள் சுதாரித்துக் கொண்டு அருகில் யாரும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது விளைநிலத்தில் மூன்று பேரும் சடலமாகக் கிடந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ராஜேஷ் நம்மிடம் பேசுகையில், ``நேற்று நல்ல மழைபெய்து கொண்டிருந்தது. மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு 3 மணிக்கு பிறகு திரும்பவும் வேலைக்கு வந்தனர். நடந்து சென்று கொண்டிருந்த மூன்று 3 பேரும் திடீரென சரிந்து விழுந்தனர். அருகி சென்று பார்த்தபோது இவர்களுக்குக் கீழ் மின் வயர் தரையில் கிடந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தோம்" என்றார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ``ஆழ்துளை கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக அருகில் இருக்கும் வீட்டில் இருந்து நேரடியாக வயர் மூலம் இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஒயரை கவனக்குறைவாக விட்டுள்ளனர். தரையில் கிடந்த மின்சார ஒயரை மிதித்தவரும், காப்பாற்ற முயன்றவர்கள் என மூன்று பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
மூன்று பேரது உடலும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள்ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை முன்பு குவிந்தனர். சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும், இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடல்களை பெற மாட்டோம் என கூறி பிணவறையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்ததற்கு காரணமான நிலத்தின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்தற்கு சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளர்கள்தான் காரணம். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வரை உடல்களை வாங்க மாட்டோம்" என்றனர்.
இதையடுத்து அவர்களிடம் ஊட்டி ஆர்.டி.ஒ சுரேஷ், டவுன் டி.எஸ்.பி சரவணன், தாசில்தார் ரவி,உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ``இறந்த 3 பேருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக தலா ரூ.1 லட்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிவாரணம் பெறவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தின் உரிமையாளர் சந்திரன் மீது வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஆர்.டி.ஓ சுரேஷ் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்கு பின் உடலை பெற்று உறவினர்கள் கலந்துசென்றனர்.