Published:Updated:

ஈரோடு: மாயமான 2-வது மகள்: 9 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயிரிழந்த அமுதா - மல்லிகா - தனன்யா
உயிரிழந்த அமுதா - மல்லிகா - தனன்யா

‘குடும்பமே உடைஞ்சுபோய்க் கிடைக்கையில், இவளும் நம்மளோட கஷ்டத்தைப் புரிஞ்சிக்காம இப்படிச் செஞ்சுட்டாளே...’ என தாய் மல்லிகாவும் அமுதாவும் கண்ணீர்விட்டிருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த வேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னசாமி - மல்லிகா தம்பதியர். இவர்களுக்கு அமுதா (30), பூவிழி (28) என இரண்டு மகள்கள். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சின்னசாமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதற்கிடையே மூத்த மகளான அமுதாவுக்கும் அவருடைய கணவர் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்துள்ளனர். அமுதா தன்னுடைய 9 வயது குழந்தை தனன்யாவுடன் தாய் வீட்டில் வசித்துவந்ததோடு, பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்திருக்கிறார்.

உயிரிழந்த அமுதா - மல்லிகா - தனன்யா
உயிரிழந்த அமுதா - மல்லிகா - தனன்யா

கணவர் உயிரிழந்ததும், மூத்த மகள் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவருவதும் தாய் மல்லிகாவுக்கு கடும் மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும், குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி வேறு. இப்படியான நிலையில், மல்லிகாவின் இரண்டாவது மகளான பூவிழி, திடீரெனக் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமாகியிருக்கிறார்.

இது தொடர்பாக விசாரித்தபோது பூவிழி வீட்டைவிட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்துகொண்டது குடும்பத்தாருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து ‘குடும்பமே உடைஞ்சுபோய்க் கிடைக்கையில், நம்ம கஷ்டத்தைப் புரிஞ்சுக்காம இப்படிச் செஞ்சுட்டாளே...’ என தாய் மல்லிகாவும், அமுதாவும் கண்ணீர்விட்டிருக்கிறார்கள். மேலும், பூவிழி வீட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து அக்கம் பக்கத்தில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல தூங்கச் சென்றவர்கள், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவைத் திறக்காமல் இருந்திருக்கிறார்கள். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மல்லிகா வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியிருக்கிறார்கள்.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

எந்த பதிலும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதையடுத்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டிலுள்ள ஓர் அறையில் மல்லிகா தனியாகவும், மற்றோர் அறையில் அமுதா, குழந்தை தனன்யா ஆகிய இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்திருக்கிறார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெருந்துறை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

“இது தற்கொலை அல்ல... நிர்வாக கொலை!” - ‘சின்மயா’ மாணவி மரணம்... கொந்தளிக்கும் கோவை

மேலும், இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்ததோடு, மூவரும் தற்கொலை செய்துகொண்டது ஏன், குடும்பப் பிரச்னை தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் உள்ளவர்களின் சம்மதம் இல்லாத நிலையில் பூவிழி காதல் திருமணம் செய்துகொண்டதும், இதில் மனமுடைந்ததால்தான் மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு