Published:Updated:

“சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!”

திருச்செங்கோடு
பிரீமியம் ஸ்டோரி
திருச்செங்கோடு

வட்டித் தொகையும் கட்ட முடியலைன்னா வட்டிக்கு வட்டி போடுவாங்க. பத்தாயிரம் கடன் வாங்கினா ஒரு வருஷத்துல ஒரு லட்சமா நிற்கும்

“சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!”

வட்டித் தொகையும் கட்ட முடியலைன்னா வட்டிக்கு வட்டி போடுவாங்க. பத்தாயிரம் கடன் வாங்கினா ஒரு வருஷத்துல ஒரு லட்சமா நிற்கும்

Published:Updated:
திருச்செங்கோடு
பிரீமியம் ஸ்டோரி
திருச்செங்கோடு
‘‘அன்புள்ள அம்மா, அப்பா, அத்தை... எங்களுக்குக் கடன் பிரச்னை இருக்கு. நாங்க ஆட்டையாம்பட்டியில் கடன் வாங்கினோம். அதை எங்களால கொடுக்க முடியலை. கடன் அதிகமா ஆயிடுச்சு. என்னை அய்யாசாமி படுக்கக் கூப்பிடுறான். எனக்குப் போன் பண்ணி தொந்தரவு கொடுக்கிறான். எங்களால தாங்க முடியலை. வேற வழி தெரியலை. எங்களை மன்னிச்சிடுங்க...’’ என்று நீள்கிறது அந்த மரண வாக்குமூலக் கடிதம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கைலாசம்பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளிகள் சுப்ரமணி, மேனகா தம்பதியினர். அவர்களுக்கு 16 வயதில் பூஜாஸ்ரீ என்ற மகளும், 12 வயதில் நவீன் என்ற மகனும் உள்ளனர். கொரோனா காலத்தில் வேலை இழந்து சாப்பாட்டுக்கே வழியின்றித் தவித்த அவர்களால், கந்துவட்டிக்கு வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியவில்லை. அதனால், மேலே குறிப்பிட்ட மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு, குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அதில் பெற்றோர் உயிரிழக்க, குழந்தைகள் மட்டும் பிழைத்துள்ளனர்.

“சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!”

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தையடுத்து திருச்செங்கோடு, கைலாசம்பாளையத் திலுள்ள மேனகா வீட்டுக்குச் சென்றோம். அவர்களின் வீடு, கரட்டின் மீது உயரத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதாளத்தில் இருப்பதை உணர முடிந்தது. மரணமடைந்த தம்பதியினருக்கு உறவினர்கள் காரியம் செய்துகொண்டிருந்தார்கள். `அரவணைக்க அப்பா, அம்மா இல்லையே...’ என்ற ஏக்கம் நிறைந்த பார்வையோடு, அரசு மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து நவீனும் பூஜாஸ்ரீயும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களின் கண்களை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை.

மேனகாவின் தாய் கண்ணம்மாள், ‘‘நாங்களும் இதே பகுதியில்தான் வசிக்கிறோம். எனக்கு ரெண்டு மகள்கள். இறந்துபோன மேனகா சின்னவள். ரொம்ப தைரியமானவ. என் மகளும் மருமகனும் விசைத்தறி ஓட்டி ஆளுக்கு ரெண்டாயிரம் வீதம் வாரம் நாலாயிரம் ரூபா கூலி சம்பாதிப்பாங்க. ஆனா, இதை நிரந்தர சம்பளமுன்னு சொல்ல முடியாது. உடம்பு சரியில்லை, பாவு இல்லை, விசேஷ வீட்டுக்குப் போறதுன்னு ஏதாவது காரணத்தால சம்பளம் குறைஞ்சுடும்.

வீட்டு வாடகை, குழந்தைகள் படிப்புச் செலவு, குடும்பச் செலவுனு வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கும். ஏதாவது திடீர்ச் செலவு வந்துடுச்சுன்னா கண்டிப்பா கந்துவட்டி வாங்கித்தான் ஆகணும். என் மகளும் மருமகனும் வாரக் கந்துவட்டிக்கு வாங்கி இருக்காங்க. 10,000 ரூபா வாங்கினா, அடுத்த வாரம் ஆயிரம் ரூபாய் சேர்த்து 11,000 ரூபா கட்டணும். பெரும்பாலும் முழுத் தொகையைக் கட்ட முடியாதுங்கிறதால வாரா வாரம் வட்டித் தொகையை மட்டும் கட்டுவாங்க.

“சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!”

வட்டித் தொகையும் கட்ட முடியலைன்னா வட்டிக்கு வட்டி போடுவாங்க. பத்தாயிரம் கடன் வாங்கினா ஒரு வருஷத்துல ஒரு லட்சமா நிற்கும். கொரோனா காலத்துல வட்டி கட்ட முடியாததால, மனசாட்சியே இல்லாம என் மகளைப் படுக்கக் கூப்பிட்டதால குடும்பத்தோட விஷம் குடிச்சுட்டா. விஷம் குடிச்சும் உசுரு போகாததால என் மருமகன் தூக்குப்போட்டு செத்திருக்கார். குழந்தைங்க மட்டும் பிழைச்சிருக்காங்க. இனி அவங்களை எப்படிக் கரை சேர்க்கிறதுனு தெரியலை’’ என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

விஷம் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பில் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட மேனகாவின் மகள் பூஜாஸ்ரீ, பாட்டியின் அருகே அமர்ந்திருந்தார். அவரிடம் பேசியபோது, ‘‘அண்ணா... கொரோனாவுக்கு முன்னாடி எங்கப்பா ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கோபிங்றவர்கிட்ட பத்தாயிரம் ரூபா கந்துவட்டிக்கு வாங்கினாரு. பணத்தை வசூலிக்கிறதுக்காக அய்யாசாமி, வைரவேலுனு ரெண்டு பேரு இருக்காங்க. கொரோனாவுக்கு முன்னாடி, வாரா வாரம் வட்டி ஆயிரம் ரூபாயை அப்பா கொடுத்துடுவாங்க. கொரோனாவுக்குப் பிறகு வேலைக்குப் போகாம வருமானம் இல்லை. ஆனா, அய்யாசாமியும் வைரவேலுவும் வட்டி கேட்டு மிரட்டுனாங்க. அம்மாவுக்கு போன் வந்தாலே அழுவாங்க. அசிங்க அசிங்கமா கெட்ட வார்த்தையில திட்டுறதாச் சொல்வாங்க. அம்மாவஅய்யாசாமி போன்ல ரொம்ப டார்ச்சர் குடுத்தார்...

“சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!”

அப்பாவும் அம்மாவும் தினமும் ராத்திரி அழுதுட்டே இருப்பாங்க. 20-ம் தேதி ராத்திரி 10 மணிக்கு எனக்கும் என் தம்பிக்கும் பிடிச்ச முட்டைப் பொரியல் பண்ணிக் கொடுத்தாங்க. அப்புறமா எங்களை மடியில் படுக்கவெச்சு கொஞ்சினாங்க. ‘என் வயித்துல பொறந்ததுக்கு வேற வயித்துல பொறந்திருக்கலாம்’னு சொல்லி அம்மா அழுதாங்க. ‘ஏம்மா இப்படிச் சொல்றீங்க’னு கேட்டதுக்கு, ‘கேக்கக் கூடாத வார்த்தையெல்லாம் அம்மா கேட்டுட்டேண்டா... இதுக்கு மேல உயிரோட வாழ முடியாது. நாம எல்லாருமா செத்துப் போயிடலாம்’னு சொன்னாங்க.

போலீஸ்ல சொல்லலாம்னு நான் சொன்னேன். அதுக்கு அம்மா, `போலீஸ்ல சொன்னா நம்மளைத்தான் மிரட்டுவாங்க. பிரச்னை பெரிசாயிடும்’னு அழுதாங்க. ‘நீங்க ரெண்டு பேரும் செத்ததுக்குப் பிறகு நாங்க எதுக்கு இருக்கணும்’னு சொன்னதால, மிக்ஸியில அரளிக்கொட்டையை அரைச்சு பால்ல கலந்து எங்களுக்கும் கொடுத்தாங்க, நாலு பேரும் குடிச்சோம்.

நானும் தம்பியும் வெளி ரூம்ல படுத்துட்டோம். அம்மாவும் அப்பாவும் உள் ரூம்ல படுத்தாங்க. நானும் தம்பியும் பால் குடிச்ச கொஞ்ச நேரத்துல வாந்தி எடுத்துட்டோம். ‘நெஞ்செல்லாம் எரியுதும்மா’னு சொன்னேன். அதுக்கு அம்மா, ‘சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்’னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல மயக்கமாயிட்டோம். காலையில நானும் தம்பியும் சாகலை. ஓடிப்போய் உள் ரூம்ல பார்த்தோம்.

சேகரன்
சேகரன்

அம்மா கீழே செத்துக் கிடந்தாங்க. அப்பா தூக்குல தொங்கிக்கிட்டு இருந்தாங்க. அப்புறமாத் தான் பாட்டிக்கு போன் போட்டேன். எங்களுக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது. எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களுக்குத் தண்டனை கிடைக்கணும்’’ என்று விசும்பினாள் பூஜாஸ்ரீ.

அய்யாசாமி, வைரவேல் இருவரும் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், கந்துவட்டிக்குப் பணம் கொடுத்த கோபிமீது வழக்குக்கூட பதிவுசெய்யப்படவில்லை. அவர் தரப்பு கருத்தறிய பலமுறை போன் செய்தும் நமது அழைப்பை அவர் எடுக்கவில்லை.

இது பற்றிப் பேசிய திருச்செங்கோடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சேகரன், ‘‘நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையத்தில் ஏழை விசைத்தறித் தொழிலாளிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களின் பணத்தேவைக்கு வங்கிகளில் கடன் கேட்டால் கொடுப்பதில்லை. அதனால் அவர்களைக் குறிவைத்து கந்துவட்டி கும்பல் செயல்படுகிறது.

ஏழை நெசவாளர்களில் 90 சதவிகிதம் பேர் இந்தக் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கியிருக்கிறார்கள். இது அனைத்தும் காவல்துறைக்கு நன்றாகத் தெரியும். கந்துவட்டிக் கும்பல், காவல்துறையைக் கவனித்துவிடுவதால், அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உயிரிழப்புகள் ஏற்பட்டு பிரச்னை பெரிதானால் கந்துவட்டி வசூலிக்கும் அடியாட்களைக் கைது செய்வார்களே தவிர, கந்துவட்டி தொழில் நடத்துபவரைக் கைது செய்யமாட்டார்கள்.

சூரியம்பாளையம் சம்பவத்தில்கூட, கந்துவட்டிக்குப் பணம் கொடுத்த ஆட்டையாம்பட்டி கோபியைக் கைது செய்யாமல் அடியாட்களை மட்டுமே கைது செய்திருக்கிறார்கள். இது ஒரு குடும்பத்தின் பிரச்னை இல்லை. ஏழைத் தொழிலாளிகளின் ஒட்டுமொத்தப் பிரச்னை. அதனால், இரும்புக்கரம் கொண்டு கந்துவட்டிக் கும்பலை அரசு ஒழிக்க வேண்டும். அத்துடன், ஏழைகளுக்குச் சுலபமாக வங்கிக்கடன் கிடைக்கும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

ஏழைக்கு, வங்கியில் கிடைக்காத கடனும் காவல் நிலையத்தில் கிடைக்காத நியாயமும் அரளி விதையின் விஷமும் வேறு வேறு அல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism