Published:Updated:

கொரோனா: த.மா.கா விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன் மரணம்!

புலியூர் நாகராஜன்
புலியூர் நாகராஜன்

த.மா.கா விவசாய அணித் தலைவராகச் செயல்பட்டு வந்தவர் புலியூர் நாகராஜன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஜி.கே.வாசனின் வலதுகரமாகத் திகழ்ந்தவர்.

த.மா.கா விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் திருச்சியில் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் தொடர்பிலிருந்த 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

த.மா.கா
த.மா.கா

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மட்டும் அதிகளவில் பாதிப்பு இருந்துவந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. கிராமப்புறங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் காட்டில் வீசப்பட்டதா? -திருச்சி வீடியோவின் பின்னணி

த.மா.கா விவசாய அணித் தலைவராகச் செயல்பட்டு வந்தவர் புலியூர் நாகராஜன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஜி.கே.வாசனின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். இந்நிலையில் திருச்சி விவசாயிகளுக்காகத் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியவர். மேலும் கடைமடை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை சந்திக்கக்கூடிய எளிமையான மனிதர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன்

திருச்சி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான இவர், விவசாயிகள் தொடர்பான பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். பல போராட்டங்களையும் நடத்தியவர். திருச்சியில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு விவாயிகளின் கோரிக்கைகள் முன் வைப்பார். விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும் பசுமை விகடன் மூலமாக, விவசாயம் தொடர்பான தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். விவசாய தொழில்நுட்பங்களிலும் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாக விளங்கக்கூடிய வயலூர் முருகன் கோயிலின் அறங்காவலாராகவும் பொறுப்பு வகித்தவர்.

புலியூர் நாகராஜன்
புலியூர் நாகராஜன்

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் குடிமராமத்துப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதன்பின் முக்கொம்பில் கட்டப்படும் புதிய அணைக் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு சேலம் சென்றார். அப்போது, விவசாயிகள் சங்கத் தலைவர்களுடனான சந்திப்பு வட்டத்தில் நாகராஜன் பங்கேற்றிருக்கிறார். மேலும் முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்திருக்கிறார். முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் இவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

திருச்சி:`அம்மாவை ஒருமையில் பேசியதால் அடித்தேன்!’ - சர்ச்சையில் காவலர்

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக லேசான காய்ச்சல், கடுமையான தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவர் திருச்சியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளது.

புலியூர் நாகராஜன் கொரோனா தாக்குதலால் உயிரிழந்த சம்பவம், விவசாயிகள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு