தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி (வயது 60), உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்துக்கு அருகே ஓரடியம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவரின் மனைவி கலைச்செல்வி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவுடன் இருந்துவந்தார். இந்நிலையில், உடல்நல பாதிப்பு தீவிரம் அடைய, சில வாரங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
``ஓ.எஸ்.மணியன், சாதாரண நிலையில் இருந்தபோதும்,எம். எல்.ஏ, எம்.பி, அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்தபோதும், தன் நிலையில் என்றும் மாறாத பண்புகொண்டவர் கலைச்செல்வி’’ என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ``தங்கள் வீட்டுக்கு வரும் எவரையும் கட்சிப் பாகுபாடு பார்க்காமல் விருந்தோம்பல் செய்வதில் இவருக்கு நிகர் இவர்தான். உறவுகளைப் பேணி காப்பதும் இவர்தான். கஜா புயல் காலங்களில் கஷ்டப்பட்ட ஊர் மக்களுக்கு ஏராளமான உதவிகளை வாரிவழங்கியவர்’’ என்று அப்பகுதிப் பெண்கள் கண்ணீருடன் சொல்லி, அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் - கலைச்செல்வி தம்பதியருக்கு பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கலைச்செல்வியின் இறுதிச் சடங்குகள் இன்று (ஆகஸ்ட்- 28) இரவு 8 மணிக்கு ஓரடியம்புலத்தில் நடைபெறவிருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.