Published:Updated:

தொற்று கண்டுபிடித்த மூன்றாவது நாளில் உயிரிழந்த மதுரை நபர்! - தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்கள்

கொரோனா சிறப்புப்பிரிவு
கொரோனா சிறப்புப்பிரிவு

நேற்று மாலையிலிருந்து அவர் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், மரணமடைந்துவிட்ட தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொரோனா வைரஸால் தமிழகத்தில் முதல் பலி, தங்கள் ஊரில் நடந்துள்ளதால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், நேற்று இரவு தொடங்கிய ஊரடங்கின்போது நகரில் இருந்த நடமாட்டம், இப்போது குறைந்துவிட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மதுரையில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 54 வயதுக்காரருக்கு மதுரை சிறப்புப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் நுரையீரல் நோய், நீரிழிவு நோய் அவருக்கு இருந்தது கூடுதல் பிரச்னையைக் கொடுத்தது.

கொரோனா சிறப்பு பிரிவு
கொரோனா சிறப்பு பிரிவு

நேற்று மாலையிலிருந்து அவர் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், மரணமடைந்துவிட்ட தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட மூன்றாவது நாளில் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த நபர், அப்பகுதி வழிபாட்டுதலமொன்றின் நிர்வாகியாக இருந்தது மட்டுமல்லாமல், அப்பகுதி மக்கள் அனைவரும் அறிந்த நபர் என்றும் சொல்கிறார்கள். அவர் உறவினர்கள் மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

மதப்பிரசங்கம் செய்ய அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து மதப் பிரசங்கம் செய்ய மதுரை வந்த குழுவினரை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அவர்கள் மூலம்தான் இவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து வந்த மதப் பிரசங்கக் குழுவினரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்திய மருத்துவத்துறையினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்கள் பிரசங்கம் செய்ய சென்று வந்த பகுதிகளையும் கண்காணிப்புக்குள் கொண்டு வந்துள்ளனர்.

death
death
Representational image

அது மட்டுமல்லாமல் கொரோனாவுக்கு பலியானவரின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் சென்றுவந்த அனைத்துப் பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் கொரோனாவினால் முதல் பலி மதுரையில் நடந்துள்ளதால் கொரோனாவை அலட்சியமாக நினைத்த மக்களும் இப்போது அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு அரசின் உத்தரவை மதித்து வீட்டில் இருக்கத் தொடங்கியுள்ளார்கள்.

அடுத்த கட்டுரைக்கு