Published:Updated:

சிகிச்சை குளறுபடி; கடைசி ஆசை; சொத்து நிர்வாகம்! - `சரவணபவன்' ராஜகோபால் மரணத்தால் கலங்கும் ஊழியர்கள்

ராஜகோபால்
ராஜகோபால்

`அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகளில்தான் பிரச்னை. மாறி மாறி கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள்தான், அண்ணாச்சியின் உயிரைப் பறிக்க காரணமாகிவிட்டது’ என்று ராஜகோபால் மரணம் குறித்து வேதனை தெரிவிக்கிறார் அவரின் நண்பர்.

உலக அளவில் `சரவண பவன்’ கிளைகளைப் பரப்பியிருக்கிறார் ராஜகோபால். மஞ்சப்பையுடன் சென்னை வந்தவர் உழைப்பின் மூலம் இதை சாத்தியப்படுத்தினார். அடிப்படையில் முருகபக்தர். ஆன்மிகம், ஜோசியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். ஒருபுறம் உழைப்பு இருந்தாலும், அவர் கொண்டிருந்த அதீத ஜோசியத்தின் மீதான நம்பிக்கை இறுதியில் அவரை உருக்குலைத்துவிட்டது. நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இன்று அவருக்கு உடற்கூராய்வு முடிந்துவிட்டது.

ராஜகோபால்
ராஜகோபால்

ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எம்ஃபாமிங் செய்வதற்காக அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அதுமுடிந்து, நண்பர்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு வசதியாக இன்றிரவு கே.கே.நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதையடுத்து, அவரது சொந்த ஊரான புன்னை நகருக்கு உடல் எடுத்துச்செல்லப்பட உள்ளது.

இது தொடர்பாக ராஜகோபால் நண்பர் சார்லஸிடம் பேசினோம். ``ராஜகோபால் ஏற்கெனவே மெடிக்கல் ட்ரிட்மென்டில்தான் இருந்தார். சரண்டரான அன்று கூட, விஜயா மருத்துவமனையிலிருந்துதான் கொண்டுவந்தோம். உச்சநீதிமன்றத்தை நாடினோம், ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. அவரை ஸ்டான்லி கொண்டுபோனதில், டிரிட்மென்ட் முழுவதும் மாறிவிட்டது. இந்த சிகிச்சை மாற்றம், அவருக்கு ஒத்துவரவில்லை. அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. இதன்காரணமாக 85 சதவிகிதம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டிருந்தார். ஸ்ட்ரோக், ஒருபுறம் கை, கால்கள் செயல்படவில்லை. அவரால் சாப்பிடக்கூட முடியாது; யாராவது ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவார். கல்லீரலில் பிரச்னை என அவரது உடல்நிலை மோசமாக இருந்தது.

எல்லா மனிதருக்கும் ப்ளஸ், மைனஸ் இருக்கும். இவருக்கு ப்ளஸ் 90 சதவிகிதம், மைனஸ் 10 சதவிகிதம்தான். ப்ளஸ் என்பது அவருடைய உழைப்பு. மைனஸ் என்றால், அது ஜோசியத்தை நம்பியதுதான்.
நண்பர்

தைரியமாக இருந்தவர் ராஜகோபால். அவருக்கான இந்த சிகிச்சை மாற்றம்தான் இப்படியாகக் காரணம். அவர் வழக்கமாக பயன்படுத்தும் மாத்திரைகளைப் பயன்படுத்த ஸ்டான்லியில் அனுமதிக்கவில்லை. அரசு மருத்துவர்கள் தனியாக வேறொரு மாத்திரைகளை வழங்கி வந்தனர். அவருக்கு எந்தமாதிரியான பிரச்னை இருக்கிறது, உடல்நிலை குறித்து அறியவே, அரசு மருத்துவர்களுக்கு நேரம் தேவைப்பட்டது. அவர் இதற்கு முன்னதாக சிகிச்சை எடுத்த, தனியார் மருத்துவர்களிடம் கருத்துகளைக் கேட்டு, அதன் அடிப்படையில் என்ன மாதிரியான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று கலந்துபேசி, மருத்துவம் பார்த்திருந்தால், அவர் நீண்ட நாள் இருந்திருப்பார். அவர்கள் ஒருவகையான மருத்துவமும், இவர்கள் ஒருவகையான மருத்துவமும் பார்த்துள்ளனர். அதுதான் இங்கே சிக்கல்.

ஆசையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்!

`நான் இறந்தாலும், அன்றைக்கும் சரவண பவன் கடை திறந்திருக்க வேண்டும்’ என்று ராஜகோபால் கூறுவார். அவர் விருப்பப்படி நேற்று கடை திறக்கப்பட்ட போதிலும், ஊழியர்கள் கவலையுடனும், வேலை செய்ய மனமில்லாத சூழலிலும் இருந்தனர். உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாட்டிலும், மாநிலத்திலும் அவரது கடை இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கடைசி ஆசை. ஊழியர்களிடம் அவரைப்போல யாரும் அக்கறைக்காட்டியதில்லை. திருமணம், சடங்குகள், வேறு நிகழ்ச்சிகளுக்குப் பணத்தை வாரிக் கொடுப்பார். ஊழியர்களின் பெற்றோருக்கு பென்ஷன் போல பணத்தைக் கொடுத்தவர். மேனேஜர்களுக்கு வாரத்துக்கு இருமுறை அசைவ உணவுகள், ஒருநாள் மீன் என வழங்குவார். `அவர்கள் நமக்காக உழைப்பார்கள், நாம் அவர்களுக்கு உதவுவோம்’ என்று அடிக்கடி கூறுவார்.

ஸ்டான்லி மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனை

அவருடன் இருந்த பல மேனேஜர்களுக்குச் சொந்தமாக கே.கே.நகரில் வீடு வாங்கிக் கொடுத்துள்ளார். 25 பேருக்குச் சொந்த வீடே வாங்கிக் கொடுத்துள்ளார். ஆரம்பகாலத்தில் கம்பெனி நிர்வாகம் பெரிய அளவில் வளர, யாரெல்லாம் உறுதுணையாக இருந்தார்களோ அவர்களுக்குச் சொந்தமாகவே வீடு வாங்கித் தந்துள்ளார். பைக், காரு கூட வாங்கிக் கொடுத்துள்ளார்.

எல்லா மனிதருக்கும் ப்ளஸ், மைனஸ் இருக்கும். இவருக்கு ப்ளஸ் 90 சதவிகிதம், மைனஸ் 10 சதவிகிதம் என்றுதான் கூற முடியும். மைனஸ் என்பது ஜோசியத்தை நம்பியதுதான். அவர் செய்த நல்ல காரியத்தை மற்ற எந்த கம்பெனி நிறுவனர்களாலும் செய்ய முடியாது. அடுத்தக்கட்டமாக ஹோட்டல் நிர்வாகத்தை அவரது மகன்கள் இருவரும் சேர்ந்து செய்யலாம்.

ராஜகோபால்
ராஜகோபால்

இந்தியா முழுவதும் உள்ள கிளைகளை அவரின் சிறிய மகன் சரவணனும், வெளிநாடு முழுவதும் உள்ள கிளைகளை மூத்த மகன், சிவகுமாரும் பார்த்துக்கொள்வார்கள். இதற்கான ஏற்பாட்டை, ராஜகோபால் உயிருடன் இருக்கும்போதே செய்தும், கூறியும் சென்றுள்ளார். ஏனென்றால் சிவகுமார்தான் வெளிநாடு முழுவதும் பயணித்துள்ளதால் அவருக்கு அங்கிருக்கும் கிளைகளைக் கவனிப்பது எளிதான காரியம். இந்தியாவை சரவணன் பார்த்துக்கொள்வார்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு