Published:Updated:

தமிழ் வணக்கம், புகழ் வணக்கம் துப்யான்ஸ்கி!

துப்யான்ஸ்கி
பிரீமியம் ஸ்டோரி
துப்யான்ஸ்கி

சிலப்பதிகாரத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர் துப்யான்ஸ்கி. நாமெல்லாம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தோடு நிறுத்திவிடுவோம்.

தமிழ் வணக்கம், புகழ் வணக்கம் துப்யான்ஸ்கி!

சிலப்பதிகாரத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர் துப்யான்ஸ்கி. நாமெல்லாம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தோடு நிறுத்திவிடுவோம்.

Published:Updated:
துப்யான்ஸ்கி
பிரீமியம் ஸ்டோரி
துப்யான்ஸ்கி
ரமணி, தர்மாம்பாள் பாலி டெக்னிக் ஆடிட்டோரியத்தில் ஓர் விழா. அப்போதைய முதல்வர் கருணாநிதியும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனும் சிறப்பு விருந்தினர்கள். இருவரும் பேசி முடித்தபிறகு வாழ்த்திப்பேச அழைக்கப்பட்டார், ரஷ்யாவிலிருந்து வந்திருந்த அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி.

இதழ் விரியாத ஆங்கிலம் அல்லது, தட்டுத்தடுமாறி, விழுந்து எழும் தமிழை எல்லோரும் எதிர்பார்த்து அமர்ந்திருக்க, துல்லியமான, எந்தக் கலப்புமில்லாத தூய தமிழில் ஒரு பெரும் சொற்பொழிவை நிகழ்த்தி முடித்தார் துப்யான்ஸ்கி. பேச்சை முடிக்கும்போது சிரித்துக்கொண்டே, ‘கலைஞரும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் பேசியதில் இத்தனை அந்நிய மொழி வார்த்தைகள் இருந்தன. அவர்களும் தூய தமிழில் பேசவேண்டும்’ என்று அவர் சொன்னபோது, கருணாநிதியும் தமிழ்க்குடிமகனும் கைதட்டி சிரித்தார்கள். கருணாநிதி, துப்யான்ஸ்கியைக் கட்டித்தழுவிப் பாராட்டினார்.

துப்யான்ஸ்கி, (Alexander Mikhailovitch Dubiansky) 1941-ல் மாஸ்கோவில் பிறந்தவர். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கீழைநாட்டு மொழிகளுக்கான கல்லூரியில் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியங்கள் குறித்தும் தமிழகத்தின் பண்பாட்டுச் செறிவு குறித்தும் ஏராளமான ஆய்வுகள் செய்திருக்கிறார். பலநூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஆசிய, ஆப்பிரிக்கவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த துப்யான்ஸ்கி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தது தமிழுக்குப் பேரிழப்பு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன், துப்யான்ஸ்கியின் பங்களிப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

துப்யான்ஸ்கி
துப்யான்ஸ்கி

“தமிழகத்துக்கும் ரஷ்யாவுக்கும் மிகுந்த இலக்கிய பந்தம் உண்டு. செமியோ ரூதின் என்ற ரஷ்ய அறிஞர் தமிழுக்கும் ரஷ்ய மொழிக்குமான உறவை வலுப்படுத்தியவர்களில் ஒருவர். தமிழ் மேலிருந்த ஈடுபாட்டால் தன் பெயரை ‘செம்பியன்’ என்று மாற்றிக்கொண்டவர் இவர். காமராஜர் ரஷ்யா சென்றபோது, ரூதின் தான் மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். அந்த ரூதின்தான் துப்யான்ஸ்கியின் தமிழாசான்.

1978-ல் துப்யான்ஸ்கி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து தொல்காப்பியம் பயின்றார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரத்தை டாக்டர் பொற்கோவிடமும், பொருளதிகாரத்தை டாக்டர் சஞ்சீவியிடமும் கற்றார். அப்போது முதல் தொடர்ந்து 40 ஆண்டுகள் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பிலிருந்தார். தன் ஆசானைப் போலவே தன் பெயரைத் தமிழில் அலெக் சந்திரன் என்று மாற்றிக்கொண்டார்.

சோவியத் யூனியன் பிளவுபட்டதற்குப் பின், தமிழகத்துடனான இலக்கியத் தொடர்பு தொய்வடைந்த தருணத்தில் துப்யான்ஸ்கி அரணாக நின்றார். ஆய்வரங்குகள், கருத்தரங்குகளுக்கெல்லாம் தமிழகம் வந்து உரையாற்றுவார். ரஷ்யாவிலும் தமிழ்சார்ந்த கருத்தரங்குகளை வழிநடத்துவார். தமிழகம் வரும்போது நிறைய மாணவர்களை உடன் அழைத்து வந்து கோயில்கள், தமிழக கிராமங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்வார்.

பலநூறு ரஷ்யர்களுக்குத் தமிழ் கற்றுத்தந்திருக்கிறார். இவரின் மாணவர்கள் ரஷ்ய வானொலியின் மாஸ்கோ ஒலிபரப்பில் செய்தி வாசிப்பாளர்களாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தூதரக மொழிப் பணியாளர்களாக, தமிழாசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலப்பதிகாரத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர் துப்யான்ஸ்கி. நாமெல்லாம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தோடு நிறுத்திவிடுவோம். இவர், கதைப்பாடல்கள், வாய்வழிக்கதைகளையெல்லாம் வாசித்து அனைத்தையும் ஒப்பிட்டுப் பேசுவார். அவரிடம் பேசினால், ‘நாமெல்லாம் என்ன படித்திருக்கிறோம்’ என்ற தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். முருக வழிபாடு பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். ஆசியவியல் நிறுவனம் சென்னையில் நடத்திய ஆய்வு மாநாட்டில் பங்கேற்று உலக அளவில் முருக வழிபாடு எப்படிப் பரவியது என்று விரிவாகக் கட்டுரை சமர்ப்பித்தார். ‘தமிழ் இலக்கியம் ஒரு பார்வை’, ‘பனை ஓலையில் பாடல்கள்’, ‘பழந்தமிழ் இலக்கியங்களில் சடங்குகளும் தொல்புனை கதைகளும்’ ஆகிய நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியிருக்கிறார். பத்தினி வழிபாடு, பக்தி இலக்கியம், பாரதி பாடல்கள் பற்றியெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி யிருக்கிறார். நன்றாகப் பாடக்கூடியவர். குறிப்பாகத் தமிழிசையில் புலமை மிக்கவராக இருந்துள்ளார். ஒருமுறை தமிழகம் வந்திருந்தபோது, இளையராஜாவைச் சந்தித்துள்ளார். அப்போது துப்யான்ஸ்கி ஒரு பாடலைப் பாடிக்காட்ட, இளையராஜா வியந்து போனாராம்.

1998-ல் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு வருகைதரு பேராசிரியராக வந்திருந்தார் துப்யான்ஸ்கி. அப்போது நான் அங்கு ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினேன். அந்தத் தருணத்தில் இவரோடு பழகவும் உரையாடவும் வாய்ப்புகள் அமைந்தன. அவரின் தமிழ்ப்புலமை வியக்க வைத்தது” என்கிறார் இளங்கோவன்.

துப்யான்ஸ்கி தமிழின் பெருமித முகம். சுமார் 40 ஆண்டுக்காலம், தனியொரு மனிதனாக தமிழையும் தமிழிலக்கியங்களையும் உலகம் முழுதும் தூக்கிச் சுமந்திருக்கிறார். தமிழ் வாழும்வரை அவரும் வாழ்வார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism