Published:Updated:

இரு பக்கமும் ஆறு... திடீர் நெஞ்சுவலி..!- 60 உயிர்களைக் காப்பாற்றி மரணித்த திருச்சி அரசு ஓட்டுநர்

``60 பேரின் உயிரைக் காப்பாற்றிய நீங்க.. எங்களை நடுத்தெருவில் விட்டுட்டீங்களே அப்பா”எனத் திருச்சி லால்குடி மருத்துவமனை அருகே கதறிய 3 பெண் குழந்தைகளைப் பார்த்து, அங்கிருந்தவர்களும் அழுதனர்.

மரணம் அடைந்த திருக்குமரன்
மரணம் அடைந்த திருக்குமரன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை பகுதியே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மக்கள் ஷாப்பிங் செய்வதற்காகத் திருச்சி வருவதாலும் பல்வேறு பகுதிகளிலிருந்து பயணிகள் திருச்சி வழியாகச் செல்வதாலும், பேருந்துகள் நிரம்பி வழிகின்றன.

தீபாவளி ஷாப்பிங்கா... கவனம்..! திருச்சி திகில் கும்பல்
மயங்கி விழுந்த திருக்குமரன்
மயங்கி விழுந்த திருக்குமரன்

அப்படி நிரம்பி வழிந்த ஓர் அரசுப் பேருந்தை, திருச்சி லால்குடி அடுத்துள்ள பூவாளூரைச் சேர்ந்த திருக்குமரன், திண்ணியம் கிராமத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி ஓட்டிக்கொண்டு வந்தார். பேருந்து, லால்குடி அடுத்த சிறுமையம்குடி எனும் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அந்தச் சாலை மிகவும் ஆபத்தானது. இருபக்கமும் ஆறுகள் பாய்ந்து ஓடுவதால், கொஞ்சம் கவனம் தவறினாலும், பேருந்து ஆற்றில் பாய்ந்துவிடும். இதற்கு உதாரணமாக ஏராளமான விபத்துகள் அப்பகுதியில் நடந்துள்ளன. ஆபத்து நிறைந்த சாலை என்பதால் மிகக் கவனமாக பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார் ஓட்டுநர் திருக்குமரன்.

அப்போது, அவர் திடீரெனச் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தினார். அடுத்த கணம், பயணிகளின் அலறல் சத்தம் அதிகரித்தது. அதனைக் கேட்டு அக்கம்பக்க கிராம மக்கள் ஓடி வந்தனர்.

காரணம், திருக்குமரனுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி. பேருந்தை ஓரம்கட்டிய திருக்குமரன், அருகிலிருந்தவர்களிடம் தண்ணீர் கேட்டுள்ளார். பயணிகள் தண்ணீர் தரவே, அவரும் குடித்துள்ளார். ஆனால், அதன்பிறகு அவர் ஸ்டியரிங்கிலேயே மயங்கி விழுந்தார். இறுதியாக பேருந்து நடத்துநர் நாகராஜிடம், `நெஞ்சு வலி தாங்க முடியல. மயக்கமாக இருக்கு' என்றவர், அடுத்து எதுவும் பேசவில்லை.

திருக்குமரன்
திருக்குமரன்

மயங்கி விழுந்த ஓட்டுநர் திருக்குமரனை, நடத்துநர் நாகராஜ் மற்றும் பயணிகள் அருகிலிருந்த சிறுகுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள், உடனடியாக லால்குடி அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த லால்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் பூபதி மற்றும் திருக்குமரன் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் கதறியபடி ஓடிவந்தனர்.

இறந்த திருக்குமரனுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். `நேற்று மதியம் வழக்கம்போல வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்றார். இப்போது இறந்துட்டாருன்னு சொல்றீங்களே' எனக் கதறிய லெட்சுமி, திருக்குமரன் மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

``சாவு தொண்டனுக்கு... சரித்திரம் தலைவனுக்கா?" தி.மு.க-விலிருந்து விலகிய திருச்சி பேச்சாளர்

`தான் இனி உயிர்பிழைக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்தும், பேருந்தை லாவகமாக ஓரம்கட்டி 60 பேரின் உயிரைக் காப்பாற்றினார் திருக்குமரன்' என்று பயணிகள் மனம் உருகினார்கள்.

அவரின் பெண் குழந்தைகளோ, ``எல்லாரையும் காப்பாற்ற நினைத்தீர்களே, எங்களை நினைக்காமல் நடுத்தெருவுல விட்டுட்டீங்களே அப்பா'' எனக் கதறினர். இந்தச் சம்பவத்தால் திருச்சி லால்குடி பகுதியே சோகத்தில் உறைந்து கிடக்கிறது.