Published:Updated:

`சாப்பாடு மட்டும் போதுமா?’ - முதியவர் மரணத்தால் கொரோனா வார்டில் மூண்ட மோதல்

கொரோனா
News
கொரோனா

முதியவர் பலியான தகவல் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உறவினர்களுக்குக் கிடைத்ததும், `அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்க அளிக்கவில்லை’ எனக் கூறப்படுகிறது.

திருச்சியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருந்து மாத்திரைகள்கூட வழங்கப்படவில்லை என்று அவரின் உறவினர்கள் கொரோனா வார்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி
திருச்சி

திருச்சி மாநகர், கீழபுலீவார் ரோடு பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கடந்த ஒருவார காலமாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் இருந்த பேரன்கள் இரண்டு பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தநிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் அந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவல் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உறவினர்களுக்குக் கிடைத்ததும், `அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை’ எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த பொருள்களைத் தூக்கி வீசி எறிந்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்களும் மருத்துவர்களும் மருத்துவமனையிலிருந்து வெளியே ஓடினர்.

கொரோனா வார்டு என்பதால் எந்தக் காவலரும் பணியில் இல்லை. இதனால், இப்பிரச்னை இரண்டு மணிநேரமாக நீடித்திருக்கிறது.

மரணம்
மரணம்
மாதிரிப் படம்

இதுகுறித்து, முதியவரின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ``கொரோனா பாதித்தது எங்களது தவறா... நாங்களும் மனிதர்கள்தானே. எங்க தாத்தாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். முதல் நாளில் இருந்தே அவருக்குச் சரிவர மருந்து மாத்திரிகைகள்கூட கொடுக்கவில்லை. சாப்பாடு மட்டும் கொடுத்துள்ளனர். இதனால், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று எங்களிடம் தாத்தா சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், மதியம் அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதனால்தான் அவருடைய பேரன்கள் கொரோனா வார்டில் பிரச்னையில் ஈடுபட்டனர். மருந்து மாத்திரை கொடுக்காமல் சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதுமா? எந்த அதிகாரிகளும் கொரோனா வார்டு பகுதியில் ஆய்வுக்கு வரமாட்டார்கள் என்ற துணிச்சலால் மருத்துவர்கள் கவனிப்பது இல்லை. மருந்து மாத்திரைகள் கொடுத்திருந்தால் எங்கள் தாத்தாவைக் காப்பாற்றியிருக்கலாம்” என்று ஆவேசப்பட்டனர்.

கொரோனா
கொரோனா

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``இவர்கள் சொல்வது முற்றிலும் தவறு. நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா வார்டுல அனுமதிக்கப்பட்டிருந்த 124 பேர் குணமாகி வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் குணமாகிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் நாங்கள் சரியாக சிசிச்சை அளிக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு.

இந்த வைரஸ் சிறுபிள்ளைகளையும், பெரியவர்களையும்தான் அதிக அளவில் தாக்குகிறது. அவர் முதியவர் என்பதால் எவ்வளவோ போராடிப் பார்த்திருக்கிறார்கள் மருத்துவர்கள், ஆனாலும் முடியவில்லை. இதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும். கொரோனா வார்டில் பிரச்னையில் ஈடுபட்ட அவர்களின் உறவினர்கள் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்க இருக்கிறோம்” என்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.