Published:Updated:

`ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க முடியலை; என் வறுமை மகளைக் கொன்னுடுச்சு!' கதறிய தந்தை

  தற்கொலை
தற்கொலை ( Representational Image )

``ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க முடியலை. என்னோட வறுமைதான் அவளைக் கொன்னுடுச்சு’’ எனக் கதறினார் மாணவியின் தந்தை.

திருச்சியில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால், பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்
Representational Image

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. இந்தநிலையில், பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்திவருகின்றன.

திருச்சி, பீமநகரை சேர்ந்தவர் கேசவன். இவர் தனியார் ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்துவருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி (14). மேலப்புதூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.

இவர், தன் தந்தையின் செல்போனை ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட பலவற்றுக்கு உபயோகித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், தனக்கு ஒரு செல்போன் வாங்கித் தருமாறு நீண்டநாள்களாகத் தன் தந்தையிடம் கேட்டுவந்திருக்கிறார். ஆனால், பணம் இல்லாத காரணத்தால் செல்போனை வாங்கி தராமல் இருந்திருக்கிறார் அவர் தந்தை.

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்
Representational Image

இந்தநிலையில், வைஷ்ணவி கடந்த 18-ம் தேதி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்ருவந்த வைஷ்ணவியின் உடல்நிலை மோசமடையவே அவரை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு 22-ம் தேதி அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி: `ஆன்லைன் வகுப்பு; 3 பேருக்கும் ஒரே செல்போன்!’- விபரீத முடிவெடுத்த மாணவி

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வைஷ்ணவி உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பாலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மாணவி வைஷ்ணவி
மாணவி வைஷ்ணவி

மாணவியின் தந்தை கேசவன் கூறுகையில், ``எனக்கு ரெண்டு பசங்க. முதல் பொண்ணுதான் வைஷ்ணவி. நான் ஒண்ணும் பெரிய பணக்காரன் இல்லைங்க. தினக்கூலிதான். தினமும் வேலைக்குப் போயிட்டு வந்தாதான் எங்க குடும்பத்துல அடுப்பு எரியும். இந்தநிலைமையிலதான் என்னோட பொண்ணு ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் கேட்டுக்கிட்டு இருந்தா. நான் வாங்கித் தர்றேன்னு குடும்பத்தோட நிலைமைய சொல்லிக்கிட்டு இருந்தப்பதான் ரொம்ப அடம்புடிச்சா. `என்னம்மா இவ்வளவு சொல்லியும் கேட்காம அடம்புடிக்கிறியே'ன்னு திட்டிட்டு வேலைக்குப் போயிட்டேன். ஆனா அவ இது எல்லாத்தையும் மனசுலவெச்சுக்கிட்டு தூக்கு மாட்டிக்கிட்டா’’ என்று சொல்லி அழத் தொடங்கினார். அழுகையை சமாளித்துக்கொண்டு மீண்டும் பேசிய அவர், ``என்னோட வறுமைதான் அவளைக் கொன்னுடுச்சு'' என்று சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது.

அடுத்த கட்டுரைக்கு