Published:Updated:

`நீங்க சந்தோஷமாக இருக்கணும்; நான் உயிரிழக்கிறேன்'- திருச்சியிலும் மாணவிகள் தற்கொலை?

கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்த விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜெப்ரா பர்வீன்
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜெப்ரா பர்வீன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை ஐஐடி கல்லூரி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்த ஜார்கண்ட் மாநில மாணவி ஜெப்ரா பர்வின், கடந்த 14-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போராட்டம்
போராட்டம்

பள்ளிப் படிப்பு வரை இந்தி வழியில் படித்த அவர், சிறந்த மதிப்பெண் எடுத்ததாகவும், ஆனால் கல்லூரியில் ஆங்கில மொழிவழிப் பாடம் என்பதால் பாடங்களைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டதாகவும் இதன் காரணமாக ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்து கொண்டதாகக் கல்லூரி நிர்வாகம் கூறிவருகிறது.

`சென்னையில் ஃபாத்திமா; திருச்சியில் ஜெப்ரா பர்வீன்!’- அதிர்ச்சி தரும் கல்லூரி மாணவிகள் தற்கொலை

ஆனால் அவருடன் படிக்கும் சக மாணவிகள், கல்லூரிப் பேராசியர்கள் கொடுத்த டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜெப்ரா மரணத்திற்கு நீதிகேட்டு, அக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.

அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

டார்ச்சர் செய்த துறைத்தலைவர்?

இது இப்படியிருக்க, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் தங்கியிருந்த விடுதி அறையில் மயங்கிக்கிடந்த அவரை மீட்டு சக தோழிகள், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் மாணவி ஃபினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

போலீஸார் நடத்திய விசாரணையில், தற்கொலை முயற்சிக்கு முன்பாக மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், பல்கலைக்கழக மண்ணியல்துறை தலைவர் சக்திவேல் என்பவர் கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலைக்கு முயன்ற மாணவி
தற்கொலைக்கு முயன்ற மாணவி

அந்தக் கடிதத்தில், “நான் உங்களை விட்டு போகிறேன். நம்ம துறைத் தலைவரை எதிர்த்து யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது. அவர் வகுப்பு மாணவர்களிடம் பேசுவதையே தவறாக சித்திரிக்கிறார். என்னோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நான் போன பிறகாவது அவர் மாறுவாரா எனப் பார்க்கலாம். நீங்க சந்தோசமாக இருக்கணும். அதற்கு நான் உயிரிழக்கிறேன். எனக்குப் படிக்கவே பிடிக்கல. கிளாஸுக்கு வரும்போதே பயந்தபடி வரவேண்டி உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய கே.கே.நகர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மாணவிகளின் செல்போன்களைப் பறித்து, அதில் உள்ள தனிப்பட்ட படங்களைச் சேகரித்து வைத்துக்கொண்ட பேராசியர், மாணவிகளை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டமிட்டு, அவரைக் காப்பாற்றுவதாக குற்றம்சாட்டும் மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சந்தித்து நேற்று முன்தினம் மனு கொடுத்தனர். அடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை மற்றும் மாத்தூர் வளாகங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், சென்னை மாணவி பாத்திமா லத்தீப் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி ஜெனிபர் விவகாரங்களில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

 பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத்  மாணவர்களுடன் பேச்சுவார்த்தை
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை

தொடர்ந்து, பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத் மாணவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டதுறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

``தொல்லை கொடுக்கும் பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாத்தால், தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம்” என எச்சரிக்கின்றர்.

ரோகித், பாயல்... இப்போது ஃபாத்திமா - மாணவர்கள் தற்கொலைகள் தொடர்வது ஏன்?