அலசல்
சமூகம்
Published:Updated:

2 சிறுவர்களை காவு வாங்கிய ஏரி! - கடலூரில் தொடரும் சோகம்

 நிதீஷ், ஜெயசூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
நிதீஷ், ஜெயசூர்யா

பெரியவரின் கூச்சலைக் கேட்டு வயல்வெளிகளில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, தண்ணீருக்குள் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை மீட்டிருக்கின்றனர்.

இயற்கை உபாதைக்காக ஏரிக்குச் சென்ற இரண்டு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கடலூர் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எரப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயவேல் – கவிநிலா தம்பதி. இவர்களுக்கு நிதீஷ், ஜெயசூர்யா என இரண்டு மகன்கள். இருவரும் அதே ஊரிலிருக்கும் அரசுப் பள்ளியில் 7 மற்றும் 5-ம் வகுப்பு படித்துவந்தனர். கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று ஜெயவேல் லாரி ஓட்டுவதற்கும், கவிநிலா ஆடு மேய்க்கவும் சென்றுவிட்டனர்.

2 சிறுவர்களை காவு வாங்கிய ஏரி! - கடலூரில் தொடரும் சோகம்

அன்று மாலை பள்ளிவிட்டு வந்த நிதீஷும் ஜெயசூர்யாவும், “எங்களுக்கு பசிக்குது. அதனால் அம்மாவைப் போய் கூட்டிக்கிட்டு வர்றோம்” என்று தாத்தா அப்பாசாமியிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர். வழியில், இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு அருகிலிருந்த ஏரிக்கரையில் சிறுவன் ஜெயசூர்யா இறங்கியிருக்கிறான். அப்போது சேற்றில் வழுக்கி ஏரியில் விழுந்த ஜெயசூர்யா தண்ணீரில் தத்தளித்திருக்கிறான். தம்பி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப்போன நிதீஷ், அவனைக் காப்பாற்ற முயன்றிருக்கிறான். நீச்சல் தெரியாத அந்த இரண்டு பிஞ்சுகளின் உயிர்களும், ஒன்றன் பின் ஒன்றாக துடித்து மெல்ல அடங்கியிருக்கின்றன.

2 சிறுவர்களை காவு வாங்கிய ஏரி! - கடலூரில் தொடரும் சோகம்

அம்மாவைத் தேடிச் சென்ற பேரன்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை அறிந்த தாத்தா அப்பாசாமி, ஏரிக்கரைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அங்கு, ஜெயசூர்யா அணிந்திருந்த ஆடைகள் கீழே கிடப்பதைப் பார்த்து பேரன்களைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். பெரியவரின் கூச்சலைக் கேட்டு வயல்வெளிகளில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, தண்ணீருக்குள் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை மீட்டிருக்கின்றனர்.

இரண்டு சிறுவர்கள் ஒரே நேரத்தில் இறந்ததால், ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியது. ஒரே நேரத்தில் இரண்டு மகன்களையும் மருத்துவமனைப் படுக்கையில் சடலங்களாகப் பார்த்த தாய் கவிநிலா, மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறித் துடித்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

2 சிறுவர்களை காவு வாங்கிய ஏரி! - கடலூரில் தொடரும் சோகம்

கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி, இதே கடலூர் மாவட்டத்தில் அருங்குணம் குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள் உள்ளிட்ட ஏழு பெண்கள், கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ‘நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தது மாவட்ட நிர்வாகம்.

மழைக்காலத்தில் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதால், நீர்நிலைகளை கவனமாக அணுக வேண்டிய அவசியத்தை பள்ளிக்கூடங்களிலேயே எடுத்துக் கூறி, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை!