அலசல்
சமூகம்
Published:Updated:

அட்சதை போடவேண்டிய கையால... வாய்க்கரிசி போட வெச்சுட்டாளே!

தேவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
தேவராஜ்

- உயிர்களைக் காவு வாங்கிய குளம்... கலங்கி நிற்கும் தொழிலாளி!

தாய் இறப்புக்கான காரியச் சடங்கின்போது, குளத்தில் நீராடச் சென்ற மகளும், உறவுக்காரச் சிறுமியும் சகதியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை, நயினார்புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரின் மனைவி சண்முகத்தாய் சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறக்க, அதற்கான சடங்கு 6-11-2022 அன்று நடந்தது. இதற்காக தேவராஜின் மகள்களும் உறவினர்களும் அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காகச் சென்றனர். அப்போது குளத்தில் ஆழமான பகுதியில் உறவுக்காரச் சிறுமி கோகிலா மூழ்க, அவரைக் காப்பாற்ற முயன்ற தேவராஜின் மகள் சுடலைக்கனியும் நீரில் மூழ்கி பலியானார்.

அட்சதை போடவேண்டிய கையால... வாய்க்கரிசி போட வெச்சுட்டாளே!

நயினார்புரத்திலுள்ள சுடலைக்கனியின் வீட்டுக்குச் சென்றோம். அந்தப் பகுதி முழுவதுமே சோகத்தில் உறைந்திருந்தது. ஊரின் கடைக்கோடியிலிருக்கும் தேவராஜின் வீட்டை அடைந்தோம். இரண்டு அறைகள் மட்டுமே இருந்த அந்த வீட்டின் மூலையில் தன் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களைப் பார்த்தவாறு அழுதுகொண்டிருந்தார் தேவராஜ். அருகிலேயே, “அக்கா… இப்பிடி எங்களை அநாதையா விட்டுட்டுப் போயிட்டியேக்கா” என அழுது புலம்பினர் சுடலைக்கனியின் இரு தங்கைகளான வள்ளியும் திவ்யதர்ஷினியும்.

தேவராஜிடம் பேசினோம். “நான் மரம் வெட்டுற சாதாரண கூலித் தொழிலாளிய்யா. என் மனைவி மார்பகப் புற்றுநோய் வந்து, வீட்ல படுத்த படுக்கையாயிட்டா. எனக்கு மூணு பொம்பளைப் பிள்ளைக. மூத்தவ சுடலைக்கனி பத்தாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கா. அம்மாவைப் பார்த்துக்கிறதுக்காகவும், தங்கச்சிங்க படிக்கிறதுக்காகவும் தூத்துக்குடியில் ஒரு சாக்கு கம்பெனியில தையல் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தா. அவளோட சம்பாத்தியத்துலதான் மனைவிக்கு மருத்துவமும், வீட்டுச் செலவுகளும் நடந்துச்சு. எனக்கு மரம் வெட்டுற வேலை தினமும் கிடைக்காது. அதனால வெள்ளையடிக்கிறது, மூட்டை தூக்குறதுன்னு கூப்பிட்ட வேலைக்கெல்லாம் போவேன்.

அட்சதை போடவேண்டிய கையால... வாய்க்கரிசி போட வெச்சுட்டாளே!

போன மாசம் அக்டோபர் 30-ம் தேதி என் மனைவி சண்முகத்தாய் இறந்துபோயிட்டா. அவளோட 8-வது நாள் விசேஷத்துக்குச் சொந்தக்காரங்க எல்லாரும் வந்திருந்தாங்க. தலையில எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டுதான் சாமி கும்பிடுவோம். எல்லாரும் வீட்டுல குளிக்க வசதி பத்தல. அதனால, குளத்துக்குப் போய் குளிச்சுட்டு வரலாம்னு பிள்ளைங்க போனாங்க. நான் வீட்டுல சாமி கும்புடுறதுக்கான ஏற்பாடுகளைச் செஞ்சுக்கிட்டிருந்தேன். குளிக்கப்போன இடத்துல எனக்கு பேத்தி முறையான 12 வயசு கோகிலா ஆழத்துல சிக்கியிருக்கா. அவளைக் காப்பாத்துறதுக்காக என் மக சுடலைக்கனி முயற்சி செஞ்சுருக்கா. ஆனா, ரெண்டு பேரும் தண்ணியில் மூழ்கி இறந்துபோயிட்டாங்க. பெரியவீட்டுக் கிழவி சொல்லித்தான் எனக்கு இந்த விவரம் தெரியவந்துச்சு.

உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு குளத்தங்கரைக்கு ஓடினேன். ஊரே கூடி நின்னுச்சு. தீயணைப்புக்காரங்க வந்து முதல்ல என் மகளைத் தூக்கினாங்க. கரைக்குக் கொண்டு வந்ததுமே பிள்ளை தலையைத் தொங்க போட்டுருச்சு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு பிள்ளை இறந்துட்டான்னு டாக்டர் சொன்னார். ‘காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சு, வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு, மத்தியானத்துக்குச் சோறு பொங்கிவெச்சுட்டு, வேலைக்கும் போய்... என் குடும்பத்தையே காப்பாத்துன குலசாமி அவ. இனிமே எங்களுக்கு யாரு இருக்கா... கெட்டது நடந்த வீட்டுல நல்லது நடக்கணும்னு சீக்கிரமே என் மகளை நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு இருந்தேன். அட்சதை போடவேண்டிய கையால, வாய்க்கரிசி போட வெச்சுட்டாளே” என வெடித்து அழுதார்.

சுடலைக்கனி, கோகிலா
சுடலைக்கனி, கோகிலா

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் காந்திமதிநாதனிடம் பேசினோம். “தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களில் சிவகளை குளமும் ஒன்று. சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவருவதால் ‘சிவகளையைச் சுற்றியிருக்கும் குளங்களில் தூர்வாரவோ, கரம்பை மண் அள்ளவோ கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால், தடையை மீறி கடந்த 2020-ல் கரம்பை மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. அப்படியும் கரம்பை மண்ணுக்கு பதிலாக எங்கெல்லாம் சரள் மண் இருக்கிறதோ அதையும் கொள்ளையடித்தார்கள். இதனால் குளங்களின் கரையோரப் பகுதிகள்கூட பயங்கர ஆழமாகிவிட்டன.

இந்தக் குளங்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. `ஆழமான குளம்’ என்ற எச்சரிக்கைப் பலகையும் கிடையாது. இவையெல்லாம்தான் இரண்டு பேரின் உயிரிழப்புக்குக் காரணம். இதே போன்ற நிலைதான் அருகிலுள்ள பேய்க்குளம், பெரியகுளம் ஆகிய குளங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து திருவிழாவுக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இதேபோல நீரில் மூழ்கி பலியானார்கள். மாவட்டத்திலிருக்கும் எந்தக் குளத்திலும் கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்கக் கூடாது என்று நான் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. ஆனால், ஒப்பந்ததாரர்களின் சுயலாபத்துக்காக, அரசியல்வாதிகளின் துணையோடு தொடர்ந்து மண் அள்ளப்படுகிறது. கண்காணிக்கவேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை” என்றார்.

காந்திமதிநாதன், செந்தில்ராஜ்
காந்திமதிநாதன், செந்தில்ராஜ்

மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜிடம் பேசினோம். “ஏரல் வட்டாட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்து, குளத்தின் நிலை குறித்தும், இருவரின் உயிரிழப்புக்குக் காரணம் குறித்தும் அறிக்கை கேட்டிருக்கிறேன். மாவட்டத்திலிருக்கும் இது போன்ற ஆழமான குளங்களின் அருகில் எச்சரிக்கைப் பலகை வைக்க உத்தரவிட்டிருக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரணத் தொகை கிடைக்க அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறேன்” என்றார்.

இரண்டு உயிர்கள் பறிபோன பிறகுதான், இதையெல்லாம் அரசு செய்ய வேண்டுமா?