Published:Updated:

டி.வி நிகழ்ச்சியில் மூழ்கிய குடும்பம்! - தூத்துக்குடியில் 2 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை டி.வி-யில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது சிறுமி, தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 2 வயது சிறுமி
உயிரிழந்த 2 வயது சிறுமி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி இரவு பகலாக 4-வது நாளாக நீடித்து வந்தது. சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என, தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுவன் சுர்ஜித் உடலை இன்று நள்ளிரவு தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

சிறுமி தவறி விழுந்த டிரம்
சிறுமி தவறி விழுந்த டிரம்

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை வீட்டில் டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரின் 2 வயது மகள், தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் அடுத்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். மீன்பிடித் தொழில் செய்துவரும் இவரின் மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது). லிங்கேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தன் மனைவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்
சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்

சிறிது நேரம் கழித்து தன் சிறுமியை இருவரும் தேடியுள்ளனர். அக்கம் பக்கத்து உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், லிங்கேஸ்வரன், தனது வீட்டின் குளியலறையை திறந்து பார்த்துள்ளார். அங்கிருந்த தண்ணீர் டிரம்மிற்குள், தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் முச்சுப் பேச்சின்றி சிறுமி கிடந்துள்ளார்.

குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

அதிர்ச்சியடைந்த லிங்கேஸ்வரனும் அவரின் மனைவி நிஷாவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை தூக்கிச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை சஞ்சனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். குளியலறையில் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற சிறுமி, தண்ணீர் ஊற்றுவதற்காக தொட்டிக்குள் தண்ணீர் எடுக்க முயன்றபோது கால் தவறி தலைகுப்புற உள்ளே விழுந்து மூச்சுத்திணறி இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

சிறுமி உயிரிழந்த டிரம்
சிறுமி உயிரிழந்த டிரம்

இது தொடர்பாக, தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் இறப்பு தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தூத்துக்குடியில் தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.