தமிழ்ச் சமூகத்தின் அசைவுகளை, அதிர்வுகளை, பிரச்னைகளை, வாழ்வியலை, போராட்டத்தைத் தனது கேமராவில் ஆவணங்களாக உறையவைத்துக்கொண்டிருந்த கலைஞன் ஒருவன், காலத்தில் உறைந்துவிட்டான்!
எளிய மக்களின் கண்ணீரை, ரத்தத்தை, துன்பத்தை தன் கேமரா வியூஃபைண்டரில் ஏந்திக்கொண்டு, விகடனின் குரலாக அதிகாரத்தை நோக்கி நியாயம் கேட்கச் செல்லும் ஒரு போராட்டப் புகைப்படக் கலைஞர் எம்.விஜயகுமார். தன் வாழ்நாளின் இறுதிவரை விகடனின் சமரசமற்ற, அன்பின் கண்களாக விளங்கியவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, கடந்த 21.05.2021 அன்று இரவு கொரோனா தொற்று பலிகொண்டுவிட்டது.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஒரு குக்கிராமம்தான் விஜயகுமாரின் பூர்வீகம். பணி நிமித்தமாக அவருடைய முன்னோர்கள் கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப்-க்கு இடம்பெயர்ந்தனர், அங்குதான் பிறந்தார் விஜயகுமார். தந்தையின் பணிமாறுதல் காரணமாக, சேலம் அவரது சொந்த ஊரானது. 2009-ல் விகடனில் புகைப்படக் கலைஞராக இணைந்த விஜயகுமார், நுட்பமான மனித உணர்வுகளைத் துல்லியமாகப் படமாக்குவதில் கைதேர்ந்தவர். எத்தனையோ பெரும் ஆளுமைகளையெல்லாம் புதிய புதிய கோணங்களில், புதிய புதிய அர்த்தத்தில் படமாக்கியிருக்கிறார். அவற்றில் பல படங்கள், விகடன் குழும இதழ்களின் அட்டைகளை அலங்கரித்திருக்கின்றன. ஜூனியர் விகடனின் அட்டைப்படமாக வந்து தமிழகத்தின் கோடிக்கணக்கான மனசாட்சியை அசைத்த படங்கள் அதிகம். அவற்றில் இரண்டை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
2017-ம் ஆண்டு, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீயாகப் பரவியபோது, காய்ச்சலுக்கு பலியான குழந்தையை மார்போடு அணைத்தபடி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் தாயின் வலியைப் படமாக்கியிருந்தார். அது ஜூ.வி-யின் அட்டைப்படமாக வெளிவந்து தமிழகத்தையே உலுக்கியது. அந்த ஒற்றைப் படம், சூழலின் உண்மையை அரசுக்கு உணர்த்தி, துரிதப்படுத்தியது.

அதேபோல, நாமக்கல் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தன் கஷ்டத்தை மன்றாட்டாய் முன்வைக்கும் ஒரு பெண்மணியைப் படமெடுத்திருந்தார். அதுவொரு துயர காவியம். தாயோடு சேர்ந்து கண்ணீர் கசியும் அந்தக் கைக்குழந்தையின் துயரத்துக்கு தமிழகமே அழுதது.
விஜயகுமாரின் துயரம் பிரத்யேகமானது. எளிய மக்களின் பாடுகளையும், துயரத்தையும், கண்ணீரையுமே பெரும்பாலும் படமெடுப்பதால், அதற்கான பாராட்டுகள் குவியும்போது அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், அனுபவிக்க முடியாமல் தத்தளிப்பார். “இன்னொருவரின் துயரத்திலிருந்து பாராட்டு பெறுவதா?” என்று அவர் கண்ணீர்விட்டு அழுத தருணங்களும் உண்டு. அவருக்கான ஒரே ஆறுதல், அந்தப் புகைப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் உதவியும் நியாயமும் மட்டுமே.

முதல்வர் வருகையோ, பிரதமர் வருகையோ புகைப்படமெடுக்க போகிற வழியில் ஓர் எளிய மனிதனுக்குப் பிரச்னை என்றால், வண்டியை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கிவிடுவார். சிறந்த புகைப்படக்காரன் என்பதைவிடவும் மனிதநேயமிக்க புகைப்படக்காரனாக விளங்கவே அவர் விரும்பினார். குறித்த நேரத்தில் பிரச்னைகளிலிருந்து, விபத்துகளிலிருந்து அவர் மீட்டெடுத்த உயிர்கள் ஏராளமானவை. பழங்குடி மக்களிடம் அவர் செலுத்தி வந்த அன்பு அப்பழுக்கற்றது. என்றைக்குமே பாதிக்கப்பட்டவர்களைப் புகைப்படமெடுப்பதோடு அவர் பணி முடிந்துவிட்டதில்லை. எத்தனை மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டுவராமல் ஓயமாட்டார் விஜயகுமார். தான், குரலற்றவர்களின் குரலாக ஒலித்துவரும் விகடனின் புகைப்படக் கலைஞன் என்பதில் அவருக்கு இருந்த பெருமையும் நம்பிக்கையும் அலாதியானவை.

ஊருக்குப் பொதுசேவை செய்கிறவர்கள், குடும்பத்தைச் சரியாக கவனிக்க மாட்டார்கள் என்கிற பொது நம்பிக்கைக்கு விதிவிலக்கான பகுத்தறிவுவாதி அவர். மனைவி ஷீலா. மகன் ரிச்சர்ட், மகள் ரியான் மூவரின் மீதான அன்பு செழித்த வாழ்வு அவருடையது.
நியாயம் மறுக்கப்படுகிற மக்கள், உதவிகள் கிடைக்கப்பெறாத மக்கள், இன்னும் அறியாமையில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் குறித்த கவலையில் உறக்கமற்றிருந்த ஒரு புகைப்படக் கலைஞனை இயற்கை கட்டாயப்படுத்தி உறங்கவைத்துவிட்டது. நீள்துயில் கொண்டிருக்கும் விஜயகுமாருக்கு விகடனின் அஞ்சலி. அவரது குடும்பத்துக்கு எம் அன்பு!