Published:Updated:

“யாரோ போன் பண்ணி அசிங்கமா பேசியிருக்காங்க!”

மோகன்-விமலேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மோகன்-விமலேஸ்வரி

கழுத்தை நெரித்த கந்துவட்டி... தூக்கில் தொங்கிய குடும்பம்!

“யாரோ போன் பண்ணி அசிங்கமா பேசியிருக்காங்க!”

கழுத்தை நெரித்த கந்துவட்டி... தூக்கில் தொங்கிய குடும்பம்!

Published:Updated:
மோகன்-விமலேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மோகன்-விமலேஸ்வரி

கடன் சுமை மற்றும் கந்துவட்டி காரணமாக, தன் மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, மனைவியுடன் தானும் தூக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார் தச்சுத் தொழிலாளி ஒருவர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரை ஒட்டியிருக்கிறது புதுப்பாளையம் கிராமம். பச்சைப் பசேலென விவசாய நிலங்களால் சூழப்பட்டிருக்கும் அந்தக் கிராமம், டிசம்பர் 14-ம் தேதி காலையில் நிலைகுலைந்துபோனது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மோகன்-விமலேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. ராஜஸ்ரீக்கு 10 வயது, விஜயஸ்ரீக்கு 8 வயது, சிவபாலனுக்கு 6 வயது. இவர்களுடன் விமலேஸ்வரியின் தந்தை ஜெகதகுருவும் அதே வீட்டில் வசித்தபடி, தன் மருமகனின் தொழிலுக்கு உதவியாக இருந்துவந்திருக்கிறார்.

“யாரோ போன் பண்ணி அசிங்கமா பேசியிருக்காங்க!”

அந்தக் கிராமத்தில், சிறிய அளவில் இயங்கிவந்த தனது தச்சுப் பட்டறையை விரிவுபடுத்த நினைத்த மோகன், அதற்கான இயந்திரங்கள் வாங்குவதற்காகப் பொதுத்துறை வங்கி, தனியார் நிதி நிறுவனம் மற்றும் சில தனிநபர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார். அந்தத் தொகையை இயந்திரம் வாங்குவதற்கான முன்தொகையாகச் செலுத்திவிட்டு, பாக்கி தொகைக்காகத் தெரிந்தவர்கள் சிலரிடம் கடன் கேட்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில், டிசம்பர் 13-ம் தேதி இரவு, வழக்கம்போல தச்சுப்பட்டறையில் படுத்துறங்கிய விமலேஸ்வரியின் தந்தை ஜெகதகுரு, மறுநாள் காலை 8 மணிக்குக் குளிப்பதற்காகத் தன் மருமகன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். கதவில் சாவி தொங்கிக்கொண்டிருந்த நிலையில், உட்புறம் பூட்டப்பட்டிருந்ததால் குழப்பமடைந்த ஜெகதகுரு, பின்புறமாகச் சென்று பூஜையறை ஜன்னலைத் திறந்திருக்கிறார். அப்போது, தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்த தன் மகளைப் பார்த்ததும் கதறிக் கூச்சலிட்டிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த கிராமத்து மக்கள், கதவுகளை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள். மூன்று குழந்தைகளும் சடலமாக ஒரே தூக்குக் கயிற்றிலும், கணவனும் மனைவியும் தனித்தனி அறைகளிலும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் வளவனூர் காவல் துறையினருடன் அங்கு விரைந்த விழுப்புரம் எஸ்.பி ராதாகிருஷ்ணன், சடலங்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தார்.

ஜெகதகுரு
ஜெகதகுரு

தன் மகளின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஜெகதகுருவுக்கு ஆறுதல் கூறிப் பேசினோம். ‘‘புருஷன் பொண்டாட் டிக்குள்ள எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை சார். எம்மவ... எஞ்சாமி... ரொம்ப அமைதியானவ. மரம் அறுக்குற மிஷின் வாங்கறதுக்காக எம் மருமவனுக்கு 17 லட்ச ரூபாய் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பேங்க்லயும், ஃபைனான்ஸ்லயும் கடன் வாங்கியிருந்தாரு. அதேபோல தெரிஞ்சவங்ககிட்டயும் வட்டிக்குப் பணம் வாங்குனாரு. அப்படி வாங்குன மொத்த பணம் 13 லட்ச ரூபாயை மிஷினுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு, மீதிப்பணத்துக்காகத் தெரிஞ்சவங்ககிட்ட கடன் கேட்டுக்கிட்டு இருந்தாரு. வாங்குன பணத்துக்கு வட்டியும் ஒழுங்காத்தான் கட்டிக்கிட்டு வந்தாரு.

13-ம் தேதி அன்னிக்கு ராத்திரி, அவருக்குப் பணம் கொடுத்த யாரோ போன் பண்ணி அசிங்க அசிங்கமாப் பேசியிருக்காங்க. ரொம்ப மோசமா பேசியிருக்கணும்... அதுக்கப்புறம்தான் மனசு ஒடைஞ்சு இந்த முடிவை எடுத்திருக்காரு. ஆனா, எங்க யாருகிட்டயும் அதப் பத்தி எதுவும் சொல்லலை. எம்புள்ளைங்களைக் கொன்னுட்டு அவரும் போயிட்டாரு. அய்யோ... அந்தச் சின்னஞ் சிறுசுகளையாவது எங்கிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கலாமே... படுபாவி இப்படி துடிக்கத் துடிக்க கொன்னுட்டாரே... சாகும்போது அந்தப் பிஞ்சு உசிருங்க, ‘தாத்தா காப்பாத்து... ஆயா காப்பாத்து’னு கத்தியிருப்பாங்களே... ‘அப்பா வலிக்குதுப்பா... அம்மா வலிக்கு தும்மா’னு துடிச்சிருப்பாங்களே...” என்று உடைந்து அழுதார்.

ஆசுவாசப்படுத்திப் பேசவைத்தோம், ‘‘எம் பேரப்புள்ளைங்க நூடுல்ஸ் விரும்பிக் கேப்பாங்க. அன்னிக்கு அதுலதான் எதையோ கலந்து கொடுத்து, மயக்கமான பிறகு தூக்குல போட்டுருக்காரு... எவ்ளோ சந்தோஷமா அதைச் சாப்பிட்டிருப் பாங்கன்னு நினைக்கும்போது... சாமி என்னால முடியலை.. என்கிட்ட எதையும் கேக்காதீங்க...” என்று கதறினார்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னை காரணமாகத்தான் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்திருக்கிறது. வங்கியிலும், தனியார் நிதி நிறுவனத்திலும் கடன் வாங்கியிருக்கிறார். தற்கொலைக்கு அந்த நிறுவனங்கள் கொடுத்த அழுத்தம் காரணமா அல்லது தனிநபர்கள் கொடுத்த அழுத்தம் காரணமா என்று விசாரணை செய்துவருகிறோம். உணவில் மயக்க மருந்து கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து, பின்னர் தூக்கிலிட்டிருக்கலாம். ஒரு தனியார் நிறுவனம் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று அவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள். அது குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

“யாரோ போன் பண்ணி அசிங்கமா பேசியிருக்காங்க!”

இதற்கிடையில், ‘‘மோகனுக்குக் கடன் கொடுத்த நிறுவனங்கள் அடியாள்களைவைத்து அவரை மிரட்டியதால்தான், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது’’ என்று கருத்து தெரிவித்திருக்கும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், ‘சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மாவட்ட காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, விழுப்புரத்தில் நகைத் தொழிலாளி அருண் என்பவர், கடன் பிரச்னை காரணமாகத் தன் மூன்று குழந்தைகளுடன் சயனைடு மென்று தற்கொலை செய்துகொண்டார். மிகச் சரியாக ஓராண்டுக்குள்... கிட்டத்தட்ட அதே தேதியில், மீண்டும் அதே போன்று நிகழ்ந்திருக்கும் தற்கொலைச் சம்பவத்தால் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது விழுப்புரம்.

2003-ம் ஆண்டு, தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடைச்சட்டத்தை அதிகாரிகள் முழுமையாகச் செயல்படுத்தினால் மட்டுமே இப்படியான உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

கடனுக்கு வட்டி மரணமா... இது நியாயமா?