Published:Updated:

`அவர் இல்லாம எப்படி இருப்பேம்மா!'- கணவர் இறப்பால் 6 வயது மகளுடன் விபரீத முடிவெடுத்த செவிலியர்

கணவர் இறந்த சோகத்திலிருந்து மீளமுடியாத செவிலியர் ஒருவர் தன் மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவருடன் செவிலியர், மகள்
கணவருடன் செவிலியர், மகள்

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூரையடுத்த நேமூரைச் சேர்ந்தவர் சரசு, வயது 33. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சென்னையில் குடியிருந்து வந்த இந்தத் தம்பதிக்கு வைஷாலி என்ற 6 வயது பெண் குழந்தை இருந்தது. சென்னையில் தனியார் கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 6 மாதத்துக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கிணறு
கிணறு
கோப்புப் படம்

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தன் குழந்தை வைஷாலியுடன் நேமூரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்த சரசு அதன்பிறகு பணிக்குத் திரும்பவில்லை. தன் கணவர் இறந்த விரக்தியில் இருந்த சரசு, ``அவர் இல்லாம எப்படி இருப்பேம்மா” என்று தனது பெற்றோருடன் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்த அவர் குழந்தையுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில், இன்று காலை சுமார் 4 மணிக்கு குழந்தை வைஷாலியை துப்பட்டாவால் தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மகளுடன் தற்கொலை செய்த செவிலியர்
மகளுடன் தற்கொலை செய்த செவிலியர்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகளையும் பேத்தியையும் காணாமல் தேடியிருக்கிறார்கள் சரசுவின் பெற்றோர். அப்போது விஜயராமன் என்பவரது விவசாயக் கிணற்றின் அருகில் ஒரு செல்போனும் செருப்பும் இருப்பது குறித்து சந்தேகமடைந்த நேமூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கிணற்றில் எட்டிப் பார்த்திருக்கிறார்.

அப்போது இடுப்பில் கட்டிய தன் குழந்தையுடன் உயிரிழந்து மிதந்திருக்கிறார் சரசு. உடனே கஞ்சனூர் காவல் நிலையத்துக்கு அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சரசு மற்றும் குழந்தை வைஷாலியின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.