Published:Updated:

`இன்ஜினீயரிங் படித்துவிட்டு விவசாயம் பார்ப்பதா?'- கணவனின் செயலால் மனைவி எடுத்த விபரீத முடிவு!

இராஜபாளையம் அருகே, பொறியியல் படித்துவிட்டு கணவர் விவசாயம் செய்ததை அவமானமாகக் கருதிய பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Stella Mary
Stella Mary

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர், பெரிய மாடசாமி. இவருக்கும், ஸ்டெல்லா மேரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் பொறியியல் படித்துள்ளனர். பெரிய மாடசாமிக்கு சொந்த நிலம் இருப்பதால், தன்னுடைய நிலத்திலேயே விவசாயம் செய்துவருகிறார்.

Suicide
Suicide

மனைவி, அரசு போட்டித் தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருக்கிறார். பொறியியல் படித்துள்ள கணவர் விவசாயம் பார்ப்பது, ஸ்டெல்லா மேரிக்குப் பிடிக்கவில்லை. எனவே, ``அரசு வேலைக்குச் செல்லுங்கள் அல்லது எங்காவது வெளியூருக்குச் சென்று கம்பெனியில் வேலை செய்யுங்கள். விவசாயம் மட்டும் பார்க்க வேண்டாம்'' என்று கூறிவந்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் இவர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின்னர், குடும்பத்தினர் பேசி இருவரையும் சமாதானம் செய்துவைத்தனர். அதன்பின், காட்டுக்குச் சென்ற பெரிய மாடசாமி மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஸ்டெல்லாமேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

death
death

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, ”பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பைக்கில் செல்லும்போது, பெரியமாடசாமி சைக்கிளில் சென்றுவந்துள்ளார். வீட்டில் மாடுகளும் வளர்த்து வந்துள்ளார். இது, ஸ்டெல்லாமேரிக்குப் பிடிக்கவில்லை. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் நல்ல வசதியாக இருக்கும்போது, பொறியியல் படித்துள்ள நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே என இவருக்கு மனரீதியாகப் பிரச்னை உருவாகியுள்ளது. இதன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது, ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.