Published:Updated:

`நல்ல அப்பா கிடைத்தவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..!' - தாய், தங்கையுடன் உயிரைமாய்த்த மாணவி

நேற்றுமுன்தினம் வீட்டில் சொல்லாமல் தமிழகத்துக்கு டூர் வந்துள்ளார். வெளியே வந்த சித்தய்யா இரண்டு நாள்களாக வீட்டுக்குச் செல்லவில்லை.

தாய் ராஜேஸ்வரியுடன் மானசா, பூமிகா
தாய் ராஜேஸ்வரியுடன் மானசா, பூமிகா

தந்தையின் நடத்தை சரியில்லாததால் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு தாய் உடன் இரண்டு மகள்களும் ஒன்றாகத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் சித்தய்யா. 48 வயதாகும் இவர், கடந்த 18 வருடமாக பெங்களூரு மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். ராஜேஸ்வரி (40) என்பவருடன் திருமணமான இவருக்கு மானசா (17), பூமிகா (15) என இரண்டு மகள்கள் உள்ளனர். மானசா பி.யூ.சி-யும், பூமிகா பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர்.

தற்கொலை
தற்கொலை

திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சித்தய்யாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வீட்டுக்குச் சரிவர வராமல் அந்தப் பெண்ணின் வீட்டிலேயே தங்கத் தொடங்கியுள்ளார். இந்தத் தகவல் ராஜேஸ்வரிக்குத் தெரியவர இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு மூண்டுள்ளது. இருப்பினும், சமீபத்தில் இருவரும் சமாதானம் ஆகியுள்ளனர். ஆனால், மீண்டும் அந்தப் பெண்ணுடனான பழக்கத்தை சித்தய்யா கைவிடவில்லை என்பதால் கடந்த வாரம் கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் இடிப்பு; சோடா பாட்டில் வீச்சு! - கோவை அன்னபூர்ணா குழுமத்தோடு மோதிய கே.ஜி நிர்வாகம்

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சொல்லாமல் சித்தய்யா தமிழகத்துக்கு டூர் வந்துள்ளார். இரண்டுநாள்களாக அவர் வீட்டுக்கும் செல்லவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு மனைவிக்குப் போன்செய்துள்ளார். ஆனால், எதிர்முனையில் ராஜேஸ்வரி போனை எடுக்கவில்லை. பலமுறை தொடர்புகொண்டும் போனை எடுக்காததால் உறவினர்களுக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி வீட்டுக்குச் சென்ற உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது ராஜேஸ்வரி தன் இரண்டு மகள்களுடனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

இதனால் அதிர்ந்து போன உறவினர்கள், போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முன்பாக வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் ஒன்றைப் பதிவிட்டுள்ளனர் சிறுமிகள் மானசாவும் பூமிகாவும். அதில், `ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா தேவை. அப்படிக் கிடைத்தவர்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் எங்கள் அப்பா எங்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்களின் உயிரிழப்புக்கு அவரே காரணம்' எனப் பதிவிட்டுள்ளனர்.

மூவர் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள ஹனுமந்த் நகர் போலீஸ் அதிகாரி, `முதற்கட்ட விசாரணையில் சித்தய்யா தமிழகத்துக்கு டூர் சென்றது தெரியவந்தது. இது தற்கொலை தானா.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் உண்மைதானா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' எனக் கூறியிருக்கிறார்.