Election bannerElection banner
Published:Updated:

தூத்துக்குடி:`குழந்தையை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க’-விபரீத முடிவெடுத்த பெண்; கலங்கவைத்த வீடியோ

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு மற்றும் வரதட்சணைக் கொடுமையால் விரக்தியடைந்த சுஜா என்ற பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ கண்கலங்கச் செய்துள்ளது.

தூத்துக்குடி, கோவில்பட்டி சுபா நகர், சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் அமல்தாஸ். இவரின் மகள் சுஜா. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் மணிபாறைபட்டியைச் சேர்ந்த வீரராகவனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. சுஜாவின் சகோதரி பிரியாவை, வீரராகவனின் சகோதரர் கார்த்திக்குக்குத் திருமணம் செய்துவைக்க வீரராகவனின் பெற்றோர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் பெண் தர மறுத்துவிட்டார்களாம். இதையடுத்து சுஜாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட சுஜா
தற்கொலை செய்துகொண்ட சுஜா

அத்துடன் சுஜாவிடம், அவரின் கணவர் வீரராகவன், வீரராகவனின் தாய், தந்தை ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து சுஜா, இந்த மாதம் 19-ம் தேதி கோவில்பட்டியிலுள்ள பெற்றோரின் வீட்டுக்குக் குழந்தையுடன் வந்திருக்கிறார். தனது வாழ்வை நினைத்தும், குழந்தையின் எதிர்காலத்தை நினைத்தும் சுஜா மனம் வருந்திப் பேசிக்கொண்டிருந்தாராம். இந்தநிலையில் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சுஜா தன் உறவினர்கள், நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

1.17 நிமிடம் கண்ணீருடன் பேசிய அந்த வீடியோவில், ``என்னோட மாமியாரும் என்னோட கணவரும் எனக்கு செய்யுற கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டுறதுக்காகத்தான் இந்த வீடியோ. அவங்க பண்ணுன கொடுமை… பேசுன பேச்சு… தாங்கிக்க முடியலை. எவ்வளவோ போராடிட்டேன்” எனப் பேசியவர், தேம்பித் தேம்பி அழுதுகொண்டே… ``என் குழந்தையை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க... ப்ளீஸ்..,.நீங்க யாராவது என் குழந்தையை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க. நான் இப்படி கேட்கக் கூடாத ஒரு அம்மாதான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியலை.. என் குழந்தையை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க... sorry to say this...”எனப் பேசி வீடியோ பதிவு செய்துள்ளார்.

வீடியோவில் கண்ணீருடன் பேசும் சுஜா
வீடியோவில் கண்ணீருடன் பேசும் சுஜா

சுஜாவின் உறவினர்களிடம் பேசினோம். “சுஜா நல்லா படிச்ச பொண்ணு. எந்த விஷயத்தையுமே பொறுமையா செய்வா. அதேபோல குடும்பத்தையும் பொறுப்பா பார்த்துக்கிற பொண்ணு. ஆனா, அவளைக் கல்யாணம் செஞ்சு கொடுத்த மாப்பிளை வீட்டுல ஆரம்பத்துல இருந்தே பிரச்னை செஞ்சுக்கிட்டுதான் இருந்தாங்க. சுஜாவோட தங்கச்சி பிரியாவை சுஜாவோட கணவரின் தம்பிக்கு பொண்ணு கேட்டது உண்மைதான்.

ஒரு பொண்ணைக் கொடுத்து படுற பாடு போதும்னு சுஜாவோட அம்மா, அப்பா சம்மதிக்கலை. அதை மனசுலவெச்சுக்கிட்டு தினமும் குடும்பமே அவளை சித்ரவதை செஞ்சிருக்காங்க. கொடுமை தாங்க முடியாம கைப்பிள்ளையைத் தூக்கிட்டுட்டு கோவில்பட்டிக்கு வந்துட்டா. அதுக்குப் பிறகும் போன்ல தகாத வார்த்தைகளாலப் பேசி துன்புறுத்துனாங்க. குழந்தைக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டிருந்தா. நாலஞ்சு நாளாவே விரக்தியா பேசிக்கிட்டே இருந்திருக்கா. ‘என் குழந்தைய நல்லாப் பார்த்துக்கோங்க”ன்னு வீட்லயும் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருந்திருக்கா. இன்னைக்கு தூக்கு மாட்டுக்கிட்டா.

சுஜாவின் தந்தை வீடு
சுஜாவின் தந்தை வீடு

தற்கொலை செய்யுறதுக்கு முன்னால பேசுன வீடியோலயும் குழந்தைய நல்லாப் பார்த்துக்கோங்கன்னுதான் பேசியிருக்கா. ஒரு தைரியசாலியான பொண்ணு, இப்படி ஒரு முடிவை எடுக்குறதுக்கு அவள் அனுபவிச்ச கொடுமைதான் காரணம்” என்றனர்.

இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம். “தற்கொலை செய்துகொண்ட சுஜாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு