Published:Updated:

மகளைப் போல் கவனிப்பு! சினையாக இருந்த பசுமாட்டை காப்பாற்றப் போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

சரோஜா மற்றும் பசு
சரோஜா மற்றும் பசு ( ம.அரவிந்த் )

அந்தப் பசு சினையாக இருந்ததால், தன் பெற்ற மகளைப் போல் கவனித்து வந்தார். மாடு மேய்க்கும்போது, `நீ சீக்கிரமே கன்றுக்குட்டி ஈன்று நம்ம வீட்டுக்கு புது வரவைக் கொண்டு வரப் போகிறாய்' என கொஞ்சியபடி பேசிக் கொண்டிருப்பார்.

ஒரத்தநாடு அருகே பெண் ஒருவர், சினையாக உள்ள தன் பசுமாட்டை மேய்சலுக்கு அழைத்துச் சென்றபோது அறுந்துகிடந்த மின்கம்பியில் சிக்கி பசுமாடு உயிருக்குப் போராடியுள்ளது. தான் ஆசையாக வளர்த்த பசுவை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் காப்பாற்ற முயல, பசுவுடன் சேர்ந்து அவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரோஜா மற்றும் பசு
சரோஜா மற்றும் பசு
ம.அரவிந்த்

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கையன். இவரது மனைவி சரோஜா (வயது 53). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இருவரும் விவசாய வேலை செய்து வருவதுடன் வீட்டில் மாடு வளர்த்துவருகின்றனர். இந்த நிலையில் சரோஜா, சினையாக உள்ள தனது பசுமாட்டை மேய்ப்பதற்காக, தங்களுக்குச் சொந்தமான வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாட்டை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு சரோஜா மற்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

மாடு மேய்ந்துகொண்டிருந்த பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்துகிடந்துள்ளது. எதிர்பாராதவிதமாக, அறுந்துகிடந்த மின் கம்பியில் சிக்கி பசு துடித்துக்கொண்டிருந்ததைப்பார்த்த சரோஜா அதிர்ச்சியடைந்ததுடன், `வாயும் வயிறுமாக இருக்கும் பசுவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்' என மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை அறியாமல், பசுவின் மேல் கிடந்த மின் கம்பியை அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி

அப்போது, சரோஜா மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே சினை பசு உயிரிழந்ததுடன் சரோஜாவும் உயிரிழந்தார். இதை அறிந்த பலரும் அந்த இடத்தில் கூடினர். பசுவுடன் சேர்ந்து சரோஜாவும் சடலமாக தரையில் சரிந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதியினர் கண்ணீர் வடித்தனர்.

கிராம மக்கள், ஒரத்தநாடு மின்சாரவாரிய அலுவலகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஒரத்தநாடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், சரோஜாவின் உடலைக் கைப்பற்றி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்துபோன சினைப் பசுமாட்டை ஒக்கநாடு கீழையூர் கால்நடை மருந்தகத்திற்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``சரோஜா, தன் மூன்று பிள்ளைகளையும் போலவே இந்தப் பசுவையும் பாசமாக வளர்த்து வந்தார். அந்தப் பசு சினையாக இருந்ததால், பெற்ற மகளைப் போல் கவனித்துவந்தார். மாடு மேய்க்கும்போது, ``நீ சீக்கிரமே கன்றுக் குட்டி ஈன்று நம்ம வீட்டுக்கு புது வரவை கொண்டுவரப் போகிறாய்' என கொஞ்சியபடி பேசிக்கொண்டிருப்பார்.

சரோஜா மற்றும் பசு
சரோஜா மற்றும் பசு
ம.அரவிந்த்

இன்றைக்கு, வீட்டு வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் பசுவை அழைத்துக்கொண்டு தன்னுடைய வயல் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மின் கம்பம் அருகில் மாடு மேய்துள்ளது. அந்த இடத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அது பசுமாட்டின்மீது பட, மின்சாரம் பாய்ந்ததில் பசு துடித்துள்ளது. இதைக் கவனித்த சரோஜா பதறித்துடித்து ஓடியிருக்கிறார்.

அப்போது மாட்டின் மேல் மின்கம்பி கிடக்க, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது மாட்டை காப்பாற்றிவிட வேண்டும் என்ற பதைபதைப்பில் கம்பியைப் பிடித்துவிட்டார். சரோஜா மீதும் மின்சாரம் பாய, அடுத்த சில நிமிடங்களில் இரண்டு உயிரும் துடித்து அடங்கியிருக்கிறது. சரோஜா, ஆசையாக வளர்த்த பசுவின் கழுத்தை பிடித்தபடி தன் உயிரை விட்டுள்ளார். பசுவோடு உயிர்நீத்த சரோஜாவை நினைத்து எங்க கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது" என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு