Published:Updated:

வணிகத் தெருவின் வார்த்தை ஓவியர்!

ஆ.மாதவன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆ.மாதவன்

- குமாரசெல்வா

வணிகத்தலமான திருவனந்தபுரம் சாலைத் தெருவையும், விளிம்புநிலை மனிதர்களையும் தமிழ் எழுத்துகளில் வரைந்த ஆ.மாதவன் ஜனவரி 5 அன்று காலமானார். அவருக்கு வயது 87.

தந்தையின் வணிகம் காரணமாகத் திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் மாதவன் குடும்பத்தினர். மலையாளவழிக் கல்வி பயின்ற மாதவன் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காமல் பாத்திரக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு சாலைக் கடைத்தெருவில் `செல்வி ஸ்டோர்ஸ்' பாத்திரக்கடையைத் தனது 75 வயது வரை சொந்தமாக நடத்தினார்.

ரஷ்யமொழிப் படைப்புகளை மலையாள மொழிபெயர்ப்பின் வாயிலாகப் படித்து இலக்கிய ஆர்வத்தை வளர்த்தார். முதன்முதலாக `கழுமரம்' என்ற குறுநாவலை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து ‘சிறுகதை’ என்ற இதழில் வெளியிட்டார். அந்த உத்வேகத்தில் தனது 23வது வயதில் `நான்காவது காதல்' என்ற முதல் சிறுகதையை எழுதினார்.

இதுவரை ‘மோகப் பல்லவி’, ‘கடைத்தெருக் கதைகள்’, ‘காமினி மூலம்’, ‘ஆனைச்சந்தம்’, ‘அரேபியக் குதிரை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் ‘புனலும் மணலும்’, ‘கிருஷ்ணப்பருந்து’, ‘தூவானம்’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். 2015-ல் ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற கட்டுரை நூலுக்கு சாகித்ய அகாடமி விருதுபெற்றார். 2007-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் `கலைமாமணி' விருதையும் பெற்றிருக்கிறார்.

வணிகத் தெருவின் வார்த்தை ஓவியர்!

ஆ.மாதவன் தெருவோர மக்களையும் விளிம்புநிலை வாழ்க்கையையும் எழுதியவர். சந்தை வெளியில் பரட்டைத் தலையும் காக்கி டவுசருமாக காதில் செருகிய பீடித்துண்டின் மிச்சத்துடன் மூட்டை சுமப்பவர்களையும், நகரசுத்தித் தொழிலாளர்களையும், அவர்களின் பாலியல் விழைவுகளையும், பண்பாட்டுக் குற்ற உணர்வின்றி வெளிப்படுத்தியவர். ‘சுமை தூக்க வேண்டுமா?’ என்று கேட்கும் தொழிலாளியிடம் 'என்னைத் தூக்கிக்கோ' என்று கூறும், இவர் படைத்த பாலியல் தொழிலாளியையும், கிள்ளிப்பாலம் மாதவியையும், சாளப்பட்டாணியையும் வாசகர்கள் சுலபத்தில் மறக்க மாட்டார்கள்.

வணிகத் தெருவின் வார்த்தை ஓவியர்!

கிருஷ்ணப்பருந்து ஒன்றும் புனிதமானதல்ல. அதுவும் மாமிச பட்சிணிதான் என்ற குறியீட்டில் அவர் படைத்த சுவாமி, மிகப் பெரிய மனிதர்கள் எத்தனை சாதாரணத்திற்கும் கீழானவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ளும் வேலப்பன் போன்ற கதாபாத்திரங்களைக் கொண்ட புனித நீக்கம் செய்யப்பட்ட படைப்புகள் தமிழில் தேவைப்படும் காலத்தில் ஆ.மாதவன் மறைந்துவிட்டார். அவரை மேலும் புதிய கண்ணோட்டத்தில் வாசிக்க வேண்டும்.