Published:Updated:

`வறுமை.. 25 ஆண்டுகால ஓட்டம்!'- சிற்றிதழ் சேகரிப்பாளர் தி.மா.சரவணன் மறைந்தார்

தி.மா.சரவணன் திருச்சியைச் சேர்ந்தவர். 25 வருடங்களாக சிற்றிதழ்களைச் சேகரித்துவந்தார்.

தி.மா.சரவணன்
தி.மா.சரவணன்

தமிழில் வெளியாகும் சிற்றிதழ்களை ஆய்வுசெய்து, சேகரித்து வந்தவர் தி.மா. சரவணன். திருச்சியைச் சேர்ந்த தி.மா. சரவணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக, திருச்சி அரசு மருத்துவமனையில், இன்று மாலை உயிரிழந்தார். தமிழ்ச் சூழலில் சிறுபத்திரிகை நடத்துவதென்பதே சவாலான ஒன்று. பல பொருளாதார இடர்பாடுகளுக்கிடையில்தான், பல சிற்றிதழ்கள் உருவாகிவருகின்றன. அவற்றை முறையாக ஆவணப்படுத்துதல் என்பது பெரும் பணி. அதை மிகச் சிரத்தையோடும், அக்கறையோடும் செய்தவர், தி.மா.சரவணன். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கடும் பொருளாதார நெருக்கடியிலும் சிற்றிதழ் சேகரிப்பை அவர் நிறுத்தவில்லை. அவருடைய சேகரிப்பில், பல அரிய இதழ்கள் உள்ளன.

தி.மா.சரவணன்
தி.மா.சரவணன்

சேகரிக்கும் இதழ்களில் இலக்கியம், அரசியல் என முறையாகப் பிரித்து, ஒரே பெயரில் வெளியான வெவ்வேறு இதழ்களைத் தனித்தனியாக, வெளியான காலகட்டம், அதன் ஆசிரியர் எனத் தொகுத்துச் சேகரித்தவர். 'கலைநிலா பதிப்பகம்' என்ற பெயரில் இரண்டு புத்தகங்களாகச் சிற்றிதழ்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

தி.மா.சரவணனின் நண்பரும், 'நாளை விடியும்' சிற்றிதழின் ஆசிரியருமான அரசெழிலன், சரவணனின் நினைவுகள் குறித்துப் பேசினார். "20 வருடங்களாக சரவணன் எனது நண்பர். 25 வருடங்களாக சிற்றிதழ்களைச் சேகரித்துவருகிறார். ஆரம்பத்தில் வளர்ப்பு மீன்கள் விற்பனை செய்துவந்தார். பிறகு, புத்தகங்கள் பைண்டிங் செய்துவந்தார். ஆனால், ஒருபோதும் அவர் சிற்றிதழ் சேகரிப்பை நிறுத்தவில்லை. அவரது இழப்பு, சிற்றிதழ் துறைக்கு பேரிழப்பு. மிகவும் வறுமையான சூழலில்தான் மருத்துவமனைக்குச் சென்றுவந்தார். இன்றுகூட சிகிச்சைக்குச் சென்ற நிலையில்தான் மருத்துவமனையில் உயிரிழந்தார் " என்றார் வேதனையுடன்.

அரசெழிலன்
அரசெழிலன்

இலக்கியத்துறையைப் பெரிதும் நேசித்த தி.மா.சரவணன், முறையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். உண்மையில் இலக்கியம், கலை எனத் தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்த பலரும், தங்கள் மரணத்தில்தான் வறுமையை வெல்கிறார்கள் என்பது வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. தி.மா.சரவணனுக்கு அஞ்சலி.