Published:Updated:

4,560 அடி உயர மலை; திடீர் மூச்சு திணறல்! -ஆன்மிக பயணத்தில் இளைஞருக்கு நடந்த விபரீதம்

உயிரிழந்த காமராஜ்
உயிரிழந்த காமராஜ்

சாமி கும்பிடுவதற்காக 4,560 அடி உயரம் உள்ள, பர்வதமலை உச்சிக்குச் சென்ற இளைஞர், திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகா தேவமங்கலம் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற பர்வதமலை. இம்மலைமீது சிவன் தனது பாதம் வைத்ததாக வரலாறு. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாகக் கல்வெட்டுகள் உள்ளன.

இயற்கை சூழ்ந்த இம்மலையின் அழகை காண்பதற்கும், பாறைகளிலான ஏணிப்படி, கடப்பாரை நெட்டு படி, ஆகாய தொங்கு பாலம் ஆகியவற்றின் வழியாக மலை மீது ஏறும் அனுபவத்தைப் பெறுவதற்காகவே, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவு பக்தர்கள் பர்வதமலைக்கு பவுர்ணமி நாளில் வருகின்றனர்.

பர்வதமலை
பர்வதமலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் விழுப்புரத்தைச் சேர்ந்த காமராஜ் (27) என்ற இளைஞர் தனது நண்பர்கள் மூன்றுபேருடன் பர்வதமலைக்குச் சென்றுள்ளார். கடப்பாரை படியைக் கடந்து மலை உச்சியில் உள்ள சிவன் பாதம் இருக்கும் இடத்துக்குச் சென்றபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் காமராஜ். உடனே அவரது நண்பர்கள் 108-க்கு போன் செய்துள்ளனர்.

அங்கிருந்து தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். முதலுதவி குழுவினர் மேலே சென்று முதலுதவி செய்துள்ளனர். அதன்பின்பு, தீயணைப்புத்துறையினர் மலைமீது இருந்து டோலிக்கட்டி காமராஜைக் கீழே கொண்டுவந்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே காமராஜ் இறந்துள்ளார். பர்வதமலைக்கு சென்ற இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தென்மகா தேவமங்கலம் பகுதி மக்கள் கூறுகையில், `பர்வதமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதேபோன்று மலையைச் சுற்றி கிரிவலமும் அதிகம் பேர் வருகிறனர். அப்படி வரும்போது சில பக்தர்களுக்குச் சோர்வின் காரணமாக வலிப்பு, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

அதனால், மலை அடிவாரத்தில் முதலுதவி மருத்துவக்குழுவை அரசு அமைக்க வேண்டும்” என்றனர். அதோடு, ``வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள், தங்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை மறக்காமல் எடுத்து வரவும். மலைமீது ஏறும்போது அதிக அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு ஏற வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு