Published:Updated:

`அணைப் பகுதியில் நடனம்!’ - டிக்டாக் மோகத்தால் இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

பருவமழை காரணமாக அணை, நீரால் நிரம்பி வழிந்தது. இந்த மூன்று இளைஞர்களும் அணையின் நடுவில் உள்ள ஆழமான குழிக்கு அருகில் சென்றுள்ளனர்.

Screenshot from tik-tok Video
Screenshot from tik-tok Video

தெலுங்கானா மாநிலம் கோனு கோபுலா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான தினேஷ், தன் நண்பர்கள் இருவருடன் நிஜாமாபாத்தில் உள்ள கப்பலவாகு என்ற அணைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது மூன்று பேரும் நீரோட்டத்தில் டிக் டாக் செய்யத் தொடங்கியுள்ளனர். தினேஷ் செய்த டிக்டாக்கில், ஒரு தெலுங்குப் பாடலுக்குத் தன்னை மறந்து நடிக்கத் தொடங்கினார்.

tik-tok Video
tik-tok Video

டிக்டாக் வீடியோ முடியும் முன்பே தண்ணீரின் ஓட்டம் அதிகமாகி அவரை நிலைகுலையச் செய்கிறது. நிலை தடுமாறி தண்ணீருக்குள் தினேஷ் அடித்துச் செல்லப்படுகிறார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தண்ணீரின் ஓட்டம் தினேஷின் இரண்டு நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்திருக்கிறார்கள்.

அங்கே இருந்த பொதுமக்கள் போராடி தினேஷின் இரண்டு நண்பர்களைக் காப்பாற்றினார்கள். ஆனால், தினேஷைக் காணவில்லை. இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாள் தேடுதலுக்குப் பிறகு, பேரிடர் மீட்புப் படையினராலும் அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சிலராலும் தினேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பருவமழை காரணமாக அணை, நீரால் நிரம்பி வழிந்தது. இந்த மூன்று இளைஞர்கள் அணையின் நடுவில் உள்ள ஆழமான குழிக்கு அருகில் சென்றுள்ளனர். அதுவே அவர்கள் ஆபத்தில் சிக்க காரணமாயிற்று" என்று கூறினார்.

உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு தினேஷின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறிய காவல்துறை அதிகாரிகள், ``ஆழமான மற்றும் வேகமான நீர்ப் பாய்ச்சல் உள்ள நீர்நிலைகள் குறித்து இளைஞர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் அதன் பின்விளைவுகள் குறித்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உயிரைப் பணயம் வைத்துதான் டிக்டாக் பதிவு செய்ய வேண்டுமா?" என்றும் எச்சரித்துள்ளனர்.

தன்னுடைய டிக்டாக் வீடியோ வைரலாக வேண்டும் என்று நினைத்த தினேஷின் மரணம் பலரையும் கலங்கச் செய்துள்ளது.