Published:Updated:

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு - புத்துமலை எஸ்டேட் பகுதியில் 100 பேர் பலி?

கேரள மாநிலம் வயநாட்டை அடுத்த புத்துமலை எஸ்டேட் பகுதியில் மலை சரிந்ததில் 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புத்துமலை எஸ்டேட் மலைச்சரிவு
புத்துமலை எஸ்டேட் மலைச்சரிவு

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மழை பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐத் தொட்டிருக்கிறது. அதேபோல், 2.27 லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்து, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருக்கின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வயநாட்டை அடுத்த புத்துமலை எஸ்டேட் பகுதியில் மலை சரிந்ததில் சுமார் 65 வீடுகள் புதைந்துள்ளன. இந்த புத்துமலை பகுதியில் தேயிலை தோட்ட பணியாளர்கள் பெருமளவில் வசித்துவருகின்றனர். கடந்த புதன்கிழமை பெய்த தொடர் மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. செய்வதறியாத தோட்டத்தொழிலாளர்கள் வீடுகளை விட்டு வெளிவராமல் வீட்டினுள்ளேயே முடங்கியிருந்தனர். இந்த கனமழையின் பாதிப்புகள் நினைத்து பார்க்கமுடியாத அளவில் மிகவும் மோசமாக இருக்கிறது.

மீட்கப்படும் உடல்கள்
மீட்கப்படும் உடல்கள்

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் நடந்த இந்த மலைச்சரிவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்குப் பின்னும் இந்த பகுதியில் கனமழை தொடர்ந்ததால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்துவந்தது. இந்நிலையில் இன்று மீட்புப்பணிகள் தொடங்கின. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.