Published:Updated:

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளா? - துணை முதல்வர் பதில்

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளா? - துணை முதல்வர் பதில்
கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளா? - துணை முதல்வர் பதில்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கஜாபுயல் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, ஆர்.காமராஜ், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். 

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளா? - துணை முதல்வர் பதில்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பதற்கு மணிவாசன், அமுதா பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் கஜா புயலினால் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாகத் தெரியவந்துள்ளது. மீதமுள்ளவர்கள் குறித்து பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பிறகே முடிவு செய்யப்படும். குடிநீர் பிரச்னைகளை போக்குவதற்காகவே லாரிகள் மூலம் தேவையான இடங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வரும் திங்கட்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டத்திற்கு பின் கஜாபுயல் பாதித்த மாவட்டங்களைப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவதற்கு முதலமைச்சரின் வருகை எப்போது என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக்க அறிவிக்கப்படவில்லை. மேலும் கஜாபுயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தமிழக அரசைப் பாராட்டியதற்கு எதிர்க்கட்சிகளுக்கு நன்றி” எனத் தெரிவித்தார். 

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளா? - துணை முதல்வர் பதில்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரைக்கு வடக்கே உள்ள கிராமங்களில் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், இரும்புத் தகரங்களால் ஆன வீடுகள் ஆகியவற்றை கஜா புயல் சிதைத்ததோடு மட்டுமல்லாமல் மாடி வீடுகளில் கூட கதவு, ஜன்னல்களைத் தகர்த்து பொதுமக்களுக்கு ஆழமான சோகத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுடைய பிரதான வாழ்வாதாரமான மரம், செடி கொடிகள், அதிலும் குறிப்பாக தென்னை, மா உள்ளிட்ட மரங்களை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள். இந்த மரங்களில் 80 சதவீதத்திற்கு மேல் முற்றிலுமாக முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்துள்ளன. ஓரே இரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சீரமைக்கும் பணிகளை பார்வையிட்ட கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். 

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளா? - துணை முதல்வர் பதில்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்பகுதியில் சுமார் 14000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மேலும் மின் கம்பிகளின் மீது பல மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அனைத்துச் சாலைகளிலும் மரங்கள் விழுந்துள்ளன. முதற்கட்டமான பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மரங்கள் அப்புறப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மரங்கள், இலை தழைகள் லாரிகள் மூலம் ஏற்றிச்செல்லப்படுகின்றன. தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளதால், சுமார் 45 கி.மீ சுற்றளவுக்குத் தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பைச் சரிசெய்ய பொறியாளர்கள் நவீன உபகரணங்களுடன் வரவழைக்கப்படவுள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவும், 5 கிராமங்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். 

பொதுமக்களின் இந்த நிலை குறித்தும், ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். எனவே கஜா புயலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.