Published:Updated:

`பேரிடர் மேலாண்மை எப்படி இயங்க வேண்டும்?' - கஜா புயல் உணர்த்திய உண்மைகள்!

`பேரிடர் மேலாண்மை எப்படி இயங்க வேண்டும்?' - கஜா புயல் உணர்த்திய உண்மைகள்!
`பேரிடர் மேலாண்மை எப்படி இயங்க வேண்டும்?' - கஜா புயல் உணர்த்திய உண்மைகள்!

ஓகி புயலைப் போன்றே கஜா புயலும் பாதிப்புகளோடு சர்ச்சைகளையும் ஏற்படுத்திச்சென்றிருக்கிறது. ஓகி புயலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இருந்து மீட்புப் பணிகள் வரை அனைத்திலும் மத்திய, மாநில அரசுகள் தோல்வியையே சந்தித்தன. ஆனால் கஜா புயல் அப்படியில்லை. புயல் எச்சரிக்கை விடப்பட்டத்திலிருந்து மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. புயல் பாதிப்பதற்கு முன்னதாக மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அரசுக்குப் பாராட்டுகள் கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன் என அனைவரும் அரசைப் பாராட்டினர். இந்தப் பாராட்டு, புயலின் பாதிப்புகள் தெரிவதற்கு முன்பாகத் தெரிவிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட கஜா தனது கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டுச் சென்றது. இதனால் சேதங்கள் ஏராளம். வீடுகளை இழந்தும் தாங்கள் நேசித்து வளர்த்துவந்த கால்நடைகளை இழந்தும் டெல்டா மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டி பாராட்டுப்பெற்ற அரசு மீட்புப் பணிகளில் சோபிக்கத் தவறியது. 

பல இடங்களில் மீட்புப் பணிகள் சுணக்கம் அடைந்தது. போதாக்குறைக்கு சேதங்களை முதல்வர் பார்வையிட்டோதோ புயல் முடிந்த ஐந்தாவது நாளில்தான். மீட்புப் பணிகளில் அரசு தோல்வியடைந்ததற்குக் காரணமாகப் பார்க்கப்படுவது, பேரிடர் மேலாண்மை. தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பின் திட்டமிடாத தன்மையால்தான் மீட்புப் பணிகளில் அரசு தோல்வி ஏற்பட்டது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். தமிழகப் பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பு குறித்து பா.ம.க கட்சியைச் சேர்ந்தவரும், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான இரா.செந்திலிடம் பேசினோம். அதில், ``2001 -ம் ஆண்டு செப்டம்பர் 11ல் அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். அன்றுதான் அமெரிக்காவின் முதன்மை வணிக நகரமான நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவில் இருந்த World Trade Center என்கிற உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டடங்கள் ஆப்கன் தீவிரவாதிகளின் விமானத் தாக்குதல்களால் இடிந்து நொறுங்கின. 110 மாடிகள்கொண்ட இந்த இரட்டைக் கோபுரங்களில், வேலை நேரங்களில் 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் இருப்பார்கள். 

11.09.2001, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி 46 நிமிடம் 40 விநாடிக்கு இரட்டைக் கோபுரங்களின் வடக்குக் கோபுரத்தின் 93 - 99 -ம் மாடிகளுக்கு இடையில் தீவிரவாதிகளால் இயக்கப்பட்ட விமானம் இடித்து, கட்டடம் நொறுங்கத் தொடங்கியது. அடுத்த சில விநாடிகளிலேயே நியூயார்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயலில் இறங்கியது. 8 மணி 50 நிமிடத்திற்கு வடக்குக் கோபுரத்தின் தரைதளத்தில், அங்கு பணியாற்றிய தீயணைப்பு வீரர்கள் அவசர கால முனையம் ஒன்றை உருவாக்கினார்கள். 8 .53 மணிக்குள்ளாக 9-1-1 ஆம்புலன்ஸ்கள் (நம் ஊர் 108 ஆம்புலன்ஸ் போல) நிகழ்விடத்திற்கு வரத் தொடங்கின. அவர்கள் அவசர உதவிக்கான தற்காலிக மருத்துவ மையத்தை மேற்குத் தெருவில் அமைத்தார்கள். 9 மணிக்கு, அதாவது விமானம் தாக்கிய 7 நிமிடங்களில் நியூயார்க் நகரத்தின் தீயணைப்புத் துறையின் தலைவரான பீட்டர் கான்சி, சம்பவ இடத்துக்கு வந்தார். அவசர கால முனையத்தை கட்டடத்தின் வெளிப்புறத்துக்கு, மேற்குத் தெருவுக்கு நகர்த்தினார். நகரின் பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத் துறையினர் வந்து குவிந்தனர். நியூயார்க் நகரத்தில் இருந்த 200 தீயணைப்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தன.

அதே நேரத்தில், தெற்கு கோபுரத்தின் பாதுகாப்பு இயக்குநராக இருந்த மார்கன் ஸ்டான்லி என்பவரும் ரிக் ரெஸ்கோலா என்பவரும் விரைவாக அங்கே இருந்த மக்களை வெளியேற்றத் தொடங்கினார்கள். 9 மணி 3 நிமிடத்திற்கு தெற்குக் கோபுரத்தின் 77 - 85 -ம்  மாடிகளுக்கு இடையே இரண்டாவது விமானம் மோதியது. 9 மணி 59 நிமிடத்திற்கு தெற்குக் கோபுரம் நொறுங்கி விழுந்தது. 10 மணி 28 நிமி டத்திற்கு வடக்குக் கோபுரம் நொறுங்கிவிழுந்தது. முதல் விமானம் வடக்குக் கோபுரத்தில் மோதிய 8 மணி 46 நிமிடத்தில் இருந்து தொடங்கி, ஒரு மணி நேரம் 32 நிமிடத்தில் அந்தக் கட்டடத்தில் இருந்தவர்களில் பெரும்பான்மையானோர், ஏறக்குறைய 47 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள்.
 
நியூயார்க் காவல் துறையின் தலைமையகம் தற்காலிகமாக இரட்டைக் கோபுரத்தின் அருகிலிருந்த லிபர்ட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது.  போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையோடு இணைந்து, கடலோரக் காவல் படை மற்றும் கப்பல் படையைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கான தனி மனிதர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். தேசிய பாதுகாப்புப் படையினரும்  ராணுவ வீரர்களும், கடற்படையினரும் பின்னர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். இரவு பகலாகத் தொடர்ந்த மீட்புப் பணியில் 24 மணி நேரத்துக்குப் பிறகு ஆறு தீயணைப்பு வீரர்களும், மூன்று போலீஸ்காரர்களும் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டார்கள். தொடர்ந்து, அமெரிக்க கப்பல் படையின் வீரர்களான ஜேசன் தாமஸ், மெக்லாலின், ஜிமனோ, டேவ் கார்னிஷ் ஆகியோரும் மீட்கப்பட்டனர். 27 மணி நேரத்திற்குப் பிறகு நியூயார்க் துறைமுகத்தின் செயல் அலுவலர் ஜெனிலியா மேக் மில்லன் காப்பாற்றப்பட்டார். 48 மணி நேரத்திற்குப் பிறகு, இனி இடிபாடுகளுக்குக் கீழே எவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

இந்தத் தாக்குதலில், அந்தக் கட்டடங்களில் இருந்த 2606 பேர் மாண்டார்கள். இவர்களில் தீயணைப்புப் படையைச் சேர்ந்த 344 பேரும், காவல் துறையைச் சேர்ந்த 77 பேரும் அடங்குவார்கள். நியூயார்க் நகர தீயணைப்புத் துறையின் தலைவர் பீட்டர் கான்சியும் இறந்தவர்களில் ஒருவர்.  48 மணி நேரத்திற்குப் பிறகு, அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் அந்த இடத்தைப் பார்வையிட்டார். இரட்டைக் கோபுர தாக்குதல் அமெரிக்கா சந்தித்த பேரழிவுகளில் ஒன்று. இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இந்தப் பேரழிவை முழுக்க முழுக்க தொழில்நுட்ப அடிப்படையிலும், இப்படிப்பட்ட பேரழிவுகளை எதிர் கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த, மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்ற வீரர்களின் அமைப்புகளின் மூலமும் அமெரிக்க நாடு எதிர்கொண்டு, பாதிப்புகளை முடிந்த அளவு குறைத்தது. அமெரிக்காவின் தென்பகுதியை அடிக்கடி தாக்கும் சூறாவளிகளையும், அமெரிக்கா தன் பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் வாயிலாக எதிர்கொள்கிறது.

2005-ம் ஆண்டு, இந்திய நாடாளுமன்றம் தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம்குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் பேசும் வாய்ப்பை நான் பெற்றேன். அப்படிப் பேசிய போது இந்தச் சட்டத்தில் இருந்த மிகப்பெரிய குறையைச் சுட்டிக் காட்டினேன். ''பேரிடர் மேலாண்மை என்பது, மீட்புப் பணி குறித்த தொழில்நுட்ப அறிவுள்ள, அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற வல்லுநர்களால் திட்டமிடப்பட வேண்டும். தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்கப்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் இப்படிப்பட்ட வல்லுநர்கள் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்தச் சட்டத்தில் இந்த மேலாண்மை குழுக்கள் அனைத்துமே நிர்வாக அதிகாரிகளின் தலைமையில், குறிப்பாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்படுகின்றன. பேரிடரை எதிர்கொள்வதற்கு நிர்வாக அதிகாரிகள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. பேரிடர் மேலாண்மை என்பது மீட்புப் பணித் துறை வல்லுநர்கள் முன்னெடுத்துச் செய்ய வேண்டிய ஒன்று. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அமைப்பு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அதிகாரியின் தலைமையில் இயங்க வேண்டும்'' எனப் பேசினேன்.

நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேய நிர்வாக முறையின் அடிப்படையிலேயே இந்திய அரசு நிர்வாகம் இன்றளவும் நடைபெறுகிறது. மாவட்டத்தின் மருத்துவப் பணிகளை வழி நடத்துபவராகவும், கல்வித்துறையை மேற்பார்வை செய்பவராகவும், வருவாய்த் துறைக்கு தலைமை தாங்குபவராகவும், காவல் துறையை மேற்பார்வை செய்பவராகவும், இப்படி அனைத்தையும் செய்கிற ஒருவராக மாவட்டத்தில் ஆட்சித் தலைவர் இருக்கிறார். இது ஆங்கிலேய காலணி ஆட்சி நிர்வாக ஏற்பாட்டின் தொடர்ச்சி ஆகும். கல்வி, மருத்துவம், காவல்துறை போன்ற துறைகள் முழுக்க முழுக்க அந்தந்த துறைகளின் வல்லுநர்களால், அவர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அளிக்கப்பட்டு,  அவர்கள் தலைமையில் வழிநடத்தப்பட வேண்டும். பரவலாக்கப்பட்ட அதிகாரமே சிறப்பான நிர்வாகத்தைத் தரும். கஜா புயல் கரையைக் கடந்து இன்றோடு ஏழு நாள்கள் கடந்துவிட்டன. இன்றளவும் அரசின் மீட்புப் பணிகள் சென்றடையாத கிராமங்கள் இருக்கின்றன. இன்றளவும் அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, இருப்பிடம் போன்றவற்றைப் பெறாத மக்கள் இருக்கிறார்கள். 

கஜா புயல் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாதிப்புகளை சரி செய்வதற்கு சில ஆண்டுகள் ஆகும். ஆனால் அதே சமயம் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றியிருக்கும் ஒரு நாட்டில், ஒரு பேரழிவுக்கு பிறகு ஏழு நாட்களுக்குப் பிறகும் அடிப்படை மீட்புப் பணிகள் கூட அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பது வெட்கக்கேடு. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் விமானங்களால் தாக்கப்பட்ட அந்த விநாடியிலிருந்து அமெரிக்காவின் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் செயலாற்றத் தொடங்கின. ஒவ்வொரு விநாடியும் விலை மதிப்பற்றதாகக் கருதப்பட்டு, மீட்புப் பணி வல்லுநர்கள் விரைந்து செயலாற்றினார்கள். மீட்புப் பணிகளில் தேர்ந்த பல்வேறு அமைப்புகள், அரசியல், நிர்வாகத் தலையீடுகள் இல்லாமல், அந்த மிகப் பெரிய பேரிடரை எதிர்கொள்ளும் தேர்ச்சியோடும், உபகரணங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளோடும், ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட ஒருங்கிணைப்போடும், திட்டமிடுதலோடும் பணியாற்றின.

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முதலமைச்சர் தலைமையில் இருக்கிறது. அதன் உறுப்பினர்களாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், அரசு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், மாநில நிவாரண ஆணையர், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டிடப் பொறியியல் துறைத் தலைவர் ஆகியோர் இருக்கிறார்கள். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இருக்கிறது. அதன் உறுப்பினர்களாக மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக மேலாண்மை முகமை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் இணை இயக்குநர் (சுகாதாரத்துறை) ஆகியோர் இருக்கிறார்கள். பேரிடர் மேலாண்மை அமைப்பு, உளுத்துப்போன இந்திய நிர்வாக அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பில் இருக்கிற எவரும் மீட்புப் பணி வல்லுநர்களோ, அதில் பயிற்சி பெற்ற வீரர்களோ அல்ல. 

கஜா புயல் ஏற்படுத்திய மிகப்பெரிய பேரழிவை இந்திய நாடு மிக, மிக மோசமாகக் கையாண்டு இருக்கிறது என்பதே உண்மை.  பேரிடர் மேலாண்மை குறித்த அறிவியல் கண்ணோட்டமும், தொழில்நுட்ப கட்டமைப்பும், பிரத்தியேகப் பயிற்சி பெற்ற, தேர்ந்த மீட்புப் படையும் இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணங்களாகும். பேரிடர் மேலாண்மையை ஒரு நிர்வாகப் பணியாக நம்நாடு செய்கிறது. மாநிலத்தின் கவர்னரும், முதலமைச்சரும் பார்வையிடுகிறார்கள். அமைச்சர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் அங்கே நிரம்பி இருக்கிறார்கள். மீட்புப் பணியை தலைமைத் தாங்கி நடத்துவது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். பேரிடர் மேலாண்மை வல்லுநர்களும், வீரர்களும் எத்தனைப் பேர் அங்கே இருக்கிறார்கள், என்ன பணியை மேற்கொண்டுவருகிறார்கள் என்பது தெரியவில்லை.

கஜா புயல் பேரிடர் மேலாண்மைகுறித்த அரசியல் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மாநில அரசு, மத்திய அரசிடம் நிதி கேட்டுக் கொண்டிருக்கிறது. நடிகர்களும் தொழிலதிபர்களும் நிதிகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கான உதவிப்பொருள்களைக் கொண்டுசென்றுகொண்டிருக்கிறார்கள். ஆனால், பசித்த குழந்தைக்குப் பால் தர முடியாத தாய்மார்களும், உண்ண உணவும், உறங்க இடமும் இன்றி ஏழு நாள்களுக்குப் பிறகும் மக்கள் அங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றிய நம் நாடு, இன்னமும் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதையே கஜா புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது. பேரிடர் மேலாண்மை சிறப்புப் பயிற்சிபெற்ற மிகப்பெரிய மீட்புப் படை அமைக்கப்பட வேண்டும். பேரிடர் நேரங்களில் மீட்புப் பணிகளைச் செய்வதற்கான உபகரணங்களும், நவீன கருவிகளும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள மீட்புப் பணித் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, தேவைப்படின் உள்நாட்டு ராணுவம் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த மீட்புப் படை அமைக்கப்பட வேண்டும். இவை, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒருங்கிணைந்த ஒத்திகைப் பயிற்சிகள் நடத்த வேண்டும். 

ஒரு முறை அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் படகுப் போட்டி நடந்தது. அதில் ஜப்பான் வெற்றிபெற்றது. தோல்விக்கான காரணத்தை அமெரிக்கா ஆராய்ந்தது. ஜப்பான் படகில் துடுப்பு  போடுபவர்கள் 9 பேரும், தலைவர் ஒருவரும் இருந்தார்கள். அமெரிக்கப் படகில் 9 அதிகாரிகளும், துடுப்பு போடுபவர் ஒருவரும் இருந்தார்கள். அமெரிக்கா குழுவை மாற்றியமைத்தது. ஒரு தலைவர், 3 உபதலைவர்கள், 5 இணைத்தலைவர்கள், ஒரு துடுப்பு போடுபவர் என்று மாற்றி அமைத்து மீண்டும் போட்டியிட்டது. ஆனால் மீண்டும் தோற்றது. தோற்றவுடன் அமெரிக்கா, துடுப்பு போடுபவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இந்தியாவுடைய நிர்வாக அமைப்பும் இதுபோலத்தான் இருக்கிறது" என்று வேதனை தெரிவித்தார்.