Published:Updated:

`மொழிகள் வேறுபட்டாலும், உணர்வுகள் ஒன்றுதான்’ - நாகையில் கண்கலங்கிய மத்தியக் குழுவினர்

ஹரீஷ் ம
`மொழிகள் வேறுபட்டாலும், உணர்வுகள் ஒன்றுதான்’ - நாகையில் கண்கலங்கிய மத்தியக் குழுவினர்
`மொழிகள் வேறுபட்டாலும், உணர்வுகள் ஒன்றுதான்’ - நாகையில் கண்கலங்கிய மத்தியக் குழுவினர்

கஜா புயலினால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டு வரும் மத்தியக் குழுவினர் நவம்பர் 25-ம் தேதி,  நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு வருகை தந்தனர். முதற்கட்டமாக, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

கஜா புயலினால் நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், நிவாரணப் பணிகள் பல கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை இணைச்செயலர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்திய நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல்,  மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் பி.கே.ஸ்ரீவஸ்தவா,  மத்திய ஊரக வளர்ச்சித் துறை துணைச் செயலாளர் மாணிக் சந்திரா பண்டிட், மத்திய எரிசக்தித் துறை  தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வளத் துறை இயக்குநர் ஜே. ஹர்ஷா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் இளவரசன் அடங்கிய மத்தியக் குழுவினர் கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக 25-ம் தேதி நாகைக்கு வந்தனர்.

மத்தியக் குழுவினர் திருவாரூரில் ஆய்வு செய்துவிட்ட பிறகு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக மூத்த அரசு செயலர்கள், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதிப்புகள் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட அவர்கள், நவம்பர் 26 -ம் தேதியான நேற்று காலை முதல் நாகை மாவட்டத்தில் புயலால் பாதித்த பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேற்று காலை அந்தக் குழு கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பாதிப்புகள் குறித்த புகைப்படத் தொகுப்பை தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர்.

பின்னர், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் , புஷ்பவனம் கிராமத்தில் கஜா புயலால் கரைக்கு அடித்து வரப்பட்ட சேற்றினை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்தியக் குழு, பெரியகுத்தகை பல்நோக்கு பேரிடர் மையக் கட்டடத்தில் உள்ள முகாமில் உள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுவதையும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து பெரியகுத்தகை முகாமில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசினர். அவர்களுக்கு ஆறுதல் கூறி முகாமில் உள்ள மக்களிடம் பேசிய டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர்,  ``மொழிகள் வேறுபட்டாலும், உணர்வுகள் ஒன்றுதான்” என்று கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு கண் கலங்கினர். மேலும், டெல்லி திரும்பியதும் சேதம் தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு  விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.