Published:Updated:

`மிகப்பெரும் சவால்; 15 பேரை மீட்பது கடினம், ஆனால்..!- நம்பிக்கைத்தரும் மீட்புப் படை அதிகாரி

`மிகப்பெரும் சவால்; 15 பேரை மீட்பது கடினம், ஆனால்..!- நம்பிக்கைத்தரும் மீட்புப் படை அதிகாரி
`மிகப்பெரும் சவால்; 15 பேரை மீட்பது கடினம், ஆனால்..!- நம்பிக்கைத்தரும் மீட்புப் படை அதிகாரி

மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலைக்காகக் கடந்த 13-ம் தேதி 15 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் இருப்பதாக உள்ளே சென்ற தொழிலாளர்கள் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 9 நாள்களாக நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 100 வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இன்றோடு ஒன்பது நாள்கள் ஆன நிலையில் அவர்களின் நிலை பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஒருபுறம் சுரங்கத்தில் இருக்கும் தண்ணீரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மற்றொரு புறம் தொழிலாளர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் சுரங்கங்கள் எலிப் பொறி போல இருப்பதால் அதனுள் சிக்கியவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது பற்றிப் பேசிய அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா, ``தொடர்ந்து 9 நாள்களாகத் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பெரிய உயர் சக்தி குழாய்கள் கொண்டு சுரங்கத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எங்களுக்கு இன்னும் அதிகமான குழாய்கள் தேவைப்படுகின்றன. 200 உயர் சக்தி கொண்ட குழாய்கள் இருந்தால் சுரங்கத்தில் உள்ள நீரை எளிதில் வெளியேற்றலாம். நீரை வெளியேற்றினால்தான் உள்ளே உள்ள தொழிலாளர்களின் நிலை பற்றித் தெரியும். அவர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக உணவு இல்லாமல் உள்ளே உள்ளனர். தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெறும்'' எனப் பேசியுள்ளார்.

என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு தேசியப் பேரிடர் மீட்புப் படை அதிகாரி எஸ்.கே சாஸ்த்ரி அளித்துள்ள பேட்டியில், ``தேசியப் பேரிடர் மீட்புப் படை வரலாற்றில் இது மிகப்பெரும் சவாலான சம்பவம். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது மிகவும் கடினமாகவுள்ளது. சுரங்கம் தொடர்பான எந்த ஒரு முறையான தகவலும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் நீரை எவ்வளவு வெளியேற்றினாலும் நொடிக்கு நொடி நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது போன்று ஒரு விபத்துக்கு நாங்கள் முறையான பயிற்சி பெறவில்லை. எலிப் பொறி போன்ற சுரங்கம் எப்படி இருக்கும் என எங்களுக்குத் தெரியவில்லை. அதுபோன்ற இடங்கள் கண்டிப்பாகப் பாதுகாப்பானது இல்லை. உள்ளே சிக்கிய தொழிலாளிகளை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ எப்படியும் மீட்போம் என்ற நம்பிக்கையுள்ளது” எனக் கூறியுள்ளார். 

News Source :  NDTV