Published:Updated:

`70 அடி ஆழத்துக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரியல; துர்நாற்றம் அடிக்குது'- 15 பேர் குறித்து மீட்புக்குழு நம்பிக்கை

`70 அடி ஆழத்துக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரியல; துர்நாற்றம் அடிக்குது'- 15 பேர் குறித்து மீட்புக்குழு நம்பிக்கை
`70 அடி ஆழத்துக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரியல; துர்நாற்றம் அடிக்குது'- 15 பேர் குறித்து மீட்புக்குழு நம்பிக்கை

மேகாலயாவில், ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்கு அருகே, லைடெயின் என்ற ஆறு ஓடுகிறது. தொடர் மழை காரணமாக அந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அருகில் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்துக்குள் 70 அடி வரையிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 15 தொழிலாளிகள் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, அவர்களை மீட்கும் பணிகள் மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் எந்தப் பகுதியில் தொழிலாளர்கள் உள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலும், உள்ளே இருக்கும் நீரை வெளியேற்ற முடியாமலும் மீட்புப் படை வீரர்கள் தவித்துவருகின்றனர். 

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில், உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனமும் சிறுவர்களை மீட்க சில ராட்சத பைப்புகளை தாய்லாந்துக்கு அனுப்பிவைத்து உதவியது. தற்போது அதே நிறுவனம், சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க சில இயந்திரங்களை வழங்கி உதவுவதாகத் தெரிவித்துள்ளது. 

“சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது. அவர்களை மீட்க எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். மேகாலயா அரசுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை நிச்சயம் வழங்குவோம்” என்று தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்போது வரை இரண்டு குழாய்கள்  உதவியுடன் மட்டுமே சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றிவந்தனர். தற்போது, மேலும் சில குழாய்கள் இருந்தால் மட்டுமே சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், உலகில் மிகவும் பெரிய நிலக்கரி சுரங்கங்களிடம் உதவிகேட்டுள்ளது மேகாலயா அரசு. 

இந்நிலையில், தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கத்தில் இருந்து அழுகிய நாற்றம் வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  “தொழிலாளர்கள் உள்ளே சிக்கி மூன்று வாரங்கள் ஆகிறது. சுரங்கத்திலிருந்து துர்நாற்றம் வருவதாக, உள்ளே சென்ற எங்கள் வீரர்கள் கூறுகிறார்கள். அதனால் தொழிலாளர்களுக்கு ஏதாவது நிகழ்ந்திருக்கும் என நாங்கள் கூறவில்லை. இருந்தும் 70 அடி ஆழத்துக்குக் கீழே என்ன நடக்கிறது என எங்களால் யூகிக்க முடியவில்லை. கடந்த மூன்று நாள்களாகத் தண்ணீரை வெளியேற்றும் வேலை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் இருந்துகூட நாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. தற்போது எந்த முடிவுக்கும் வரவேண்டாம்” எனத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணை அதிகாரி சந்தீஷ் குமார் சிங் என்டி.டி.வி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.