Published:Updated:

3 வாரங்களுக்குப் பிறகு வந்த நீச்சல் வீரர்கள்! - மேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்புப் பணி

3 வாரங்களுக்குப் பிறகு வந்த நீச்சல் வீரர்கள்! - மேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்புப் பணி
3 வாரங்களுக்குப் பிறகு வந்த நீச்சல் வீரர்கள்! - மேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்புப் பணி

மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலைக்காகக் கடந்த 13-ம் தேதி 15 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் இருப்பதாக உள்ளே சென்ற தொழிலாளர்கள் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.  தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டுத் தொடர்ந்து மூன்று வாரங்களாக உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேகாலயாவில் நிறைய சட்டவிரோத நிலக்கரி சுரங்கள் செயல்படுகின்றன. அதில் இந்தச் சுரங்கமும் ஒன்று. மிகவும் குறுகலான பாதை உடையதால் இதை  ‘எலிப் பொறி’ சுரங்கம் எனக் கூறுகின்றனர்.  சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் எங்கு உள்ளனர், அவர்களின் நிலை என்ன, சரியாகத் தண்ணீர் எவ்வளவு அடி உள்ளது போன்ற எந்தத் தகவலும் தெரியாமலும் அதைக் கண்டுபிடிக்க முடியாமலும் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர். 

PC " Twitter/ @SujitBisoyiTOI

சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு சுமார் 200 ராட்சத குழாய்கள் தேவைப்படுவதாகவும் ஆனால், தற்போது வரை இரண்டு சிறிய குழாய்கள் மட்டுமே நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்படுவதாகவும் இரு தினங்களுக்கு முன்பு மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஒரு தனியார் நிறுவனம், உலகின் மிகப் பெரும் சுரங்கம் வைத்துள்ள சில நிறுவனங்களிடம் பெரிய குழாய்களைக் கோரியுள்ளது மேகாலயா அரசு. தாய்லாந்து குகையில் சிறுவர்கள் சிக்கியிருந்தபோது அங்குள்ள நீரை வெளியேற்ற இந்த நிறுவனங்கள் உதவி செய்தன. 

'

PC " Twitter/ @IndianDefenceRA

ராட்சத குழாய்கள் புவனேஷ்வரில் இருந்து கௌஹாத்தி வழியாக மேகாலயா வரவுள்ளது. இவை சாலை வழியாக வருவதால் மேகாலயா வந்து சேர இன்னும் இரு தினங்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், விசாகப்பட்டினத்திலிருந்து 15 கடற்படை உள் நீச்சல் வீரர்களும் மேகாலயா விரைந்துள்ளனர். ஒடிசாவில் இருந்து சிறந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் எனப் பலரும் தற்போது இந்த மீட்புப் பணியில் இணையவுள்ளனர். தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போதுதான் குழாய்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.