Published:Updated:

`என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள்’ - மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவருக்காக கதறும் தந்தை

`என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள்’ - மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவருக்காக கதறும் தந்தை
`என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள்’ - மேகாலயா சுரங்கத்தில் சிக்கியவருக்காக கதறும் தந்தை

மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்கு அருகே லைடெயின் என்ற ஆறு ஓடுகிறது. தொடர் மழை காரணமாக அந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 15 தொழிலாளிகள் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 13-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அவர்களை மீட்கும் பணிகள் 20 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள், இந்திய கடற்படையைச் சேர்ந்த உள் நீச்சல் வீரர்கள் மற்றும் ஒடிஷாவில் உள்ள தீயணைப்பு வீரர்கள் எனப் பலரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு தொழிலாளர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தொழிலாளர்களை மீட்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வழக்கறிஞர் ஆதித்ய பிரசாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே சிக்ரி அமர்வு சுரங்கத்தில் உள்ளவர்களை மீட்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது குறித்து மேகாலயா அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதில் சுரங்கத்தைப் பற்றிய ப்ளூ பிரிண்ட் இல்லாததால் தொழிலாளர்களை மீட்பது மிகவும் கடினமாக உள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

மேலும், சட்டவிரோதமாக இயங்கிய சுரங்கத்தைக் கவனிக்காமல் இருந்ததால் மேகாலயா அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சுரங்கத்தில் பல பிரச்னைகள் இருந்தும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேற்கு அசாம் பகுதியில் உள்ள பங்னமாரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோலிபர். இவரும் 30 வருடங்களாகச் சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது மேகாலயா சுரங்கத்தில் இவரின் மகனும் சிக்கியுள்ளார். இதனால் தன்னையும் சுரங்கத்துக்குள் அனுமதிக்குமாறு மேகாலயா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ரஹ்மான்,  ``நான் 30 வருடங்களாக இந்தச் சுரங்கத்தில்தான் பணிபுரிந்து வருகிறேன். சுரங்கத்தில் எப்படி ஏற வேண்டும் இறங்க வேண்டும் என்பது தெரியும். அதனால் என்னை ஒரு முறை உள்ளே அனுமதியுங்கள். நான் என் சக தொழிலாளர்களை மீட்க உதவுகிறேன். என் மகனுக்காக இதைச் செய்தே ஆகவேண்டும். என்னை அனுமதியுங்கள் “ என தெரிவித்துள்ளார்.