Published:Updated:

`எத்தனை மாசம் ஆகுமோ, அதுவரை எங்களால் உயிர் வாழ முடியாது!'- சேற்றில் மூழ்கிய புஷ்பவன மீனவ மக்கள் கண்ணீர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`எத்தனை மாசம் ஆகுமோ, அதுவரை எங்களால் உயிர் வாழ முடியாது!'- சேற்றில் மூழ்கிய புஷ்பவன மீனவ மக்கள் கண்ணீர்
`எத்தனை மாசம் ஆகுமோ, அதுவரை எங்களால் உயிர் வாழ முடியாது!'- சேற்றில் மூழ்கிய புஷ்பவன மீனவ மக்கள் கண்ணீர்

`எத்தனை மாசம் ஆகுமோ, அதுவரை எங்களால் உயிர் வாழ முடியாது!'- சேற்றில் மூழ்கிய புஷ்பவன மீனவ மக்கள் கண்ணீர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கடலோர கிராமம் புஷ்பவனம், கடந்த நவம்பரில் வீசிய கஜா புயலால் நிலைகுலைந்து போனது.

மரங்கள், வீடுகள், மின்கம்பம்கள், மின்மாற்றிகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை அடியோடு சாய்த்துவிட்டுப் போன புயல், புஷ்பவனம் மீனவ கிராமத்திலோ தெருக்களையும் வீடுகளையும் மரங்களையும் வேர்களையும் முற்றும் மூழ்கடித்து இன்னும் ஈரம் காயாமல் படிந்து கிடக்கிறது கடல் சேறு. பட்டம் விட்ட சிறுவன், நழுவிச் சென்ற பட்டத்தை எடுக்கப் போய் சேற்றில் சிக்கிக்கொண்டான். அலையில் மிதக்கும் படகு மீட்க முடியாமல் சேற்றின் நடுவே குப்புறக் கிடக்கிறது. தூரத்தில் அலையாடும் மீனவர்களுக்கு வெளிச்சம் நீட்டி கரையைக் காட்டும் கலங்கரை விளக்குக் கிடைமட்டமாய்க் கிடக்கிறது விளக்குகள் அற்று. திறந்த ஜன்னல் கதவுகளோடு இடிந்த நிலையில் கிடக்கும் சேறுகளோடு பொருள்கள் நிறைந்த வீடுகள். மீனவர்களின் குலதெய்வமான ஏழாச்சியும் மின்னடியானும் உடைந்த ஓடுகளுடன் சகதியில் சிக்கிய முந்திரியின் வேர்களைத் தேடியபடி அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினேன். 

மீனவத் தெருவைச் சேர்ந்த உதயகுமார் தன் வீட்டுக்குள் குவிந்துகிடந்த கடல் சேற்றினை இரண்டு பேர் துணையுடன் அள்ளி வெளியில் கொட்டிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசியதிலிருந்து, ``2004 சுனாமியில் ஏகப்பட்ட பாதிப்பு. அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகளால்தான் மீண்டு வரமுடிந்தது. அப்படி மீண்டுவந்து நிமிர்ந்து நிற்கையில்தான் இந்தக் கஜா புயல் மொத்த வாழ்வாதாரத்தையும் வாரிச் சுருட்டிச் சென்றது. அரசு அறிவித்ததில் வெறும் காத்துதான் வரும் என்று நினைச்சோம். ஆனால், மழையோடு சேறும் வந்ததால் படகு எஞ்சின், வலை, ஐஸ் பெட்டி, டேங், ஆங்கர், வீட்டில் உள்ள தளவாடப் பொருள்கள் அத்தனையுமே சேற்றுக்குள் மூழ்கிப்போயிடுச்சு. எலக்ட்ரானிக் பொருள்களெல்லாம் வீணாப் போகிடுச்சு. இன்னும் இந்தச் சேற்றுக்குள் என்ன என்ன மூழ்கிக்கிடக்கோ, அள்ள அள்ளதான் தெரியும். அலை வந்த வேகத்துல கதவையும் பெயர்த்து எடுத்துருச்சு. திரும்பவும் இதுமாதிரி சீற்றங்கள் வந்தது என்றால், இதே இடத்தில் இருக்க பயமாகத்தான் இருக்கிறது. இங்க இருப்பதில் நிம்மதி இல்லாமல் போயிடுச்சு. மாற்று இடம் செய்துகொடுத்தால்தான் எங்கள் வாழ்வாதாரம் நிலைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு" என்றவர்,

``வானிலை ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 10-ம் தேதியே மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவித்ததால், 10-ம் தேதியிலிருந்து இன்னைக்குத் தேதிவரை கிட்டத்தட்ட ரெண்டு மாதமா தொழிலுக்குள் போகமுடியலை. தனியார் தொண்டு நிறுவனங்களும் எங்கள் உறவினர்களும் கொடுக்கும் அரிசி, பருப்பை வைத்து வயித்தைக் கழுவிக்கொண்டு இருக்கோம். அரசு ஏதாவது நிவாரணம் வழங்கினால் மட்டுமே எங்களால் மீண்டு வரமுடியும்" என்றார். 

பின்பு அந்தப் பக்கம் காலு வச்சிடாதீங்க உள்ள போயிருவீங்க என்று சொன்ன மீனவர் மணிகண்டனிடம் பேசியதிலிருந்து, ``நிவாரணம் கொடுத்தால்கூட எங்களால் தொழிலுக்குப் போக முடியாது. சேறு எங்கள் ஊருக்குள் மட்டுமல்ல படகுகளுக்குள்ளும் புகுந்திருக்கு. மீறிப் படகை கடலுக்குள் செலுத்தினால் பாதிவழியிலேயே படகோடு மூழ்கிவிடுவோம். ஊருக்குள் இருக்கும் சேற்றை எடுக்க அஞ்சு மாசமா, ஆறு மாசமா இன்னும் எத்தனை மாசம் ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. அதுவரை எங்களால் உயிருடன் வாழவும் முடியாது. கவர்மென்ட்டுக்கிட்ட என்ன கேட்டு இருக்கோம்ன்னா பக்கத்தில் ஒரு வாய்க்கால் இருக்கு, அந்த வாய்க்காலை எங்களுக்குத் தூர் வாரிக்கொடுத்தால் அந்த வழியாகப் படகினைக் கடலுக்குள் செலுத்தித் தொழில் செய்து பொருளாதாரத்தைப் பெருக்கிக்க முடியும். அப்படி அரசாங்கம் செய்யுமாயின் அதுதான் எங்களுக்குச் செய்யும் பெரிய நிவாரணமாகும்.ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மின்சாரதுறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். அரசின் மூலம் நடைபெறும் நிவாரணப் பணிகள் எல்லாமே மந்தகதியில்தான் இருக்கு. கொஞ்சம் விரைந்து முடித்தால் நல்லா இருக்கும்." என்றார்.

எல்லா இழப்புகளை விடவும் பெரிய இழப்பு வீட்டை இழப்பதும் பிழைப்பு முடங்கிக்கிடப்பதும்தான். இவ்விழப்புகளுக்குச் செவிசாய்த்து, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்பதே அரசு செய்யவேண்டிய தலையாய கடமையாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு