Published:Updated:

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

Published:Updated:
கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

ரே நாளில் தங்களது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் கஜா புயலுக்குக் காவு கொடுத்து விட்டு வாடி வதங்கிப்போய் நிற்கிறார்கள், டெல்டா பகுதி மக்கள். பசியால் வாடும் கைக்குழந்தைகள், குழந்தைகளின் பசி தீர்க்க முடியாத ஆதங்கத்தில் பெற்றோர்கள், தள்ளாத வயதிலும் தாங்க முடியாத சோகத்தில் முதியோர்கள்... என ஊருக்கே சோறு போட்ட காவிரி டெல்டா மக்கள் இன்று எதிர்காலம் புரியாமல் தவித்து நிற்கிறார்கள். 

வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்குக் கைகொடுக்கும் நோக்கில் விகடன், வாசகர்களின் பங்களிப்பைக் கோரியது. அதையேற்று ஏராளமான வாசகர்கள் தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகிறார்கள். அதேவேகத்தில், முதற்கட்ட நிவாரணப் பணிகளைத் தொடங்கியது விகடன் குழு.  

பாதிப்புக்குள்ளான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விகடன் குழுவினர் ஆய்வு செய்து நிவாரண உதவிகளே கிடைக்கப்பெறாத பகுதிகளைக் கண்டறிந்தனர். நான்கு மாவட்டங்களிலும் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 2,000 குடும்பங்கள் கண்டறியப்பட்டு, தலா 1,500 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தேவதானம் செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மிகவும் உள்ளடங்கி இருக்கக்கூடிய குக்கிராமம், வாலிவோடை. ஒரேயொரு வாகனம் மட்டுமே செல்ல முடிந்த குறுகலான சாலைகள். அச்சாலைகளில் எப்போதாவதுதான் வாகனங்கள் வரும் என்பதற்குச் சாட்சி... அந்தச் சாலையில் படுத்து உறங்கும் ஆடு, மாடுகள்தான். ஊருக்குள் நுழைந்தபோது, புயல் ஆடிய கோரத் தாண்டவத்தின் அடையாளங்களாகக் காட்சியளித்தன, சரிந்து கிடந்த வீடுகளும், வீழ்ந்து கிடந்த மரங்களும்.

நம்மைக் கண்டவுடன், “இதுவரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு நிவாரண உதவியும் கிடைக்கலை. நீங்கதான் எங்களைத் தேடி வந்திருக்கீங்க” என்று கண்களில் நீர் பனிக்கப் பேசினார்கள், அப்பகுதி மக்கள். வாலிவோடை மற்றும்  மேலமருதூர், எக்கல், மைலேறிபுரம், நெம்மேலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

“புயல்ல வீடு போச்சு. புள்ள குட்டிகளை வெச்சுக் கிட்டு பனியிலயும், மழையிலயும் அவதிப்பட்டுக்கிட்டு இருக்கோம். இந்த தார்ப்பாயும், போர்வையும் எங்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர், மைலேறிபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொன்னவராயன் கோட்டை, பழஞ்சூர், மருதங்காவயல், வலசக்காடு, நரியங்காடு, செருவாவிடுதி வடக்கு ஆகிய ஆறு கிராமங்களைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழஞ்சூரில், விவசாயக் கூலித்தொழிலாளிகள் அதிகம்.  அப்பகுதியைச் சேர்ந்த வீரையன், “புயல்ல வீடு காலியாகிடுச்சு. எப்போ, வேலைக்குப் போய் வீட்டைச் சரிசெய்யப் போறோம்னு கவலையில் இருந்தேன். இப்போதைக்கு இந்த தார்ப்பாயை வெச்சு வீட்டைச் சரி செஞ்சுக்குவேன்” என்று நெகிழ்ந்தார்.

மருதங்காவயல் கிராமத்தைச் சேர்ந்த தாஸ், “எங்க ஊர் உள்ளடங்கி ஒதுக்குப்புறமா இருக்குறதால, யாருமே இங்க வரலை. வீடு, வாசலை இழந்து ஒரு உதவியும் கிடைக்காம விரக்தியில இருந்தோம். எங்க ஊரைக் கண்டுபிடிச்சு உதவி செஞ்சதை மறக்க முடியாது” என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்.

பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த வினோதினி, தன் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பொருள்களை வாங்க வந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

“அடிச்ச காத்துல கூரையெல்லாம் பிச்சுக்கிட்டுப் போயிடுச்சு. மாத்துத்துணிகூட இல்லாமக் கஷ்டப்படுறோம். என் பிள்ளைக்குப் போர்த்த ஒரு துண்டுகூட இல்லாமத் தவிச்சுப்போயிட்டேன். என்னடா வாழ்க்கைனு அழுகையா வந்துச்சு. ஏன்னு கேட்க ஒரு நாதியில்லை. எங்க ஊருக்கு நீங்க வந்தப்பவே எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. காலத்துக்கும் மறக்க முடியாத உதவி இது” என்று கண் கலங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சடையன் கோட்டகம், முதலியார் தோப்பு, வைரவன் பேட்டை, அண்ணாநகர், வேட்டைக்காரனி ருப்பு, பூவத்தடி, விழுந்தமாவடி, திருப்பூண்டி ஆகிய குக்கிராமங்களைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள்  வந்து பார்ப்பதற்கு முன்பே ஆய்வுப்பணியைத் தொடங்கிவிட்டது, விகடன் குழு. மிகவும் பாதிப்புக்குள்ளாகி, மீளமுடியாத துயரத்தில் இருந்த மேற்பனைக் காடு புதுக்குடியிருப்பு, குறிஞ்சிநகர், நெடுவாசல் மேற்கு, புள்ளான்விடுதி சீரியர் தெரு, எல்.என்.புரம், புள்ளான்விடுதி ஆதிதிராவிடர் காலனி, காசிம் புதுப்பேட்டை,  துவரடிமனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.

மேற்பனைக்காடு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த செல்லம்மாள், “விடாம, மழை பேஞ்சுகிட்டு இருக்குது. கூரை வீடு காத்துல பிச்சுக்கிட்டுப் போயிருச்சு. கிடைக்கிற இடத்துல கொழந்தைங்களோட முடங்கிக் கிடக்குறோம். இதையெல்லாம் பார்த்தவுடனே பாதி உசுரு வந்தமாதிரி இருக்கு..” என்றார் நெகிழ்ச்சியுடன்.

வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நம் சகோதரர்களுக்குத் தொடர்ந்து கை கொடுப்போம்...  நம்பிக்கை அளிப்போம்..!

- விகடன் டீம்
படங்கள்: க.சதீஷ்குமார், ம.அரவிந்த், ஏ.எஸ் ஈஸ்வர்